புள்ளக் குட்டிகளைப் படிக்க வைங்கப்பா

Sunday, January 17, 2010
கல்வி என்பது என்றும் குறையாத வளம்.உலகில் பல பகுதிகளிலும் உள்ள கல்வி,வேலை வாய்ப்புகள் பற்றிய விவரங்களை கீழுள்ள வலைப்பதிவில் பெறலாம்.


ஏணிப்படிகள்

உங்களுக்கான சந்தேகங்களும் தீர்க்கப்படும்.
பயன்படுத்திக் கொள்ளுங்க மக்களே..மற்றவர்களுக்கும் தெரிவியுங்கள்.யாருக்காவது உபயோகப்படலாம்.

.

கணினியில் பொங்கல் கிடைக்குமா?

Friday, January 15, 2010
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

மகிழ்ச்சி பொங்கி நிறையும் நாட்களாய் இருந்தன அன்றையப் பொங்கல் பண்டிகைகள். தாத்தா, மாமா, சித்தப்பா என அனைத்து சொந்தங்களும் முழு நேர விவசாயிகளாய் இருந்தக் காலம் அது. படிப்பு மட்டுமே வாழ்க்கை என நினைத்து, ஹிஸ்டரியையும், ஜியாக்ரபியையும் படிக்கும் விருப்பத்தில் சொந்த மண்ணின் வரலாறையும், புவி அமைப்பையும் அறியாமல் விட்ட பள்ளி நாட்கள்.

பொங்கலுக்கெல்லாம் ஊருக்கு போக வேண்டாம் என அடம் பிடித்த அந்தக் காலத்தில் அறிந்திருக்கவில்லை, விரைவில் இவையெல்லாம் வெறும் நினைவுகளாகப் போகப் போகின்றன என்று. எப்படி வேண்டி வருந்தினாலும் இவை விரும்பி வராது என்று. அன்று சிறிதும் விருப்பமில்லாமல் ஊருக்குப் போன‌ சில‌ பொங்க‌ல் தின‌ங்க‌ளும் பொற்கால‌ங்க‌ளாய் ம‌ன‌தில் மிளிர்கின்ற‌ன‌ .

ஆனால், இன்று? அத்தகையதொரு கிராமப் பொங்கலுக்கு மனம் ஏங்கினாலும் நிதர்சனமோ வேறாய் இருக்கிறதே. இன்றைய கிராமப் பொங்கலில் , அந்நாளைய நகரப் பொங்கலிலும் நளினம் குன்றித்தான் போனது. கிராமத்து வீடுகளும் தொலைக்காட்சிப் பெட்டிகளாலும், செல்போன்களாலும் சூழப்பட்டு விட்டன. எங்கள் சிறுவயதுப் பொங்கலில் இருந்த உற்சாகமோ, உவகையோ இன்றைய குழந்தைகளிடம் இல்லாமல் போனதே.

பொங்கலோ பொங்கல் எனத் தாம்பளத்தில் குச்சி வைத்துத் தட்டுகையில், யார் வீட்டு ஒலி அதிகம் கேட்டது எனப் பெரிய போட்டியே நடக்கும். இன்று என் அண்ணன் மகள் கேட்கிறாள். “அத்தை! எதுக்கு இப்பிடி இன்டீசண்டா தேவை இல்லாம சப்தம் போடறாங்க”. தோட்டத்திலிருந்து வீட்டுக்குப் போகும் வரை எங்கள் கையிலிருக்கும் பொங்கல் சோற்றுக்காய்த் துரத்தி வரும் காகங்களும் எங்கோ மறைந்தன. அவைகளுக்கும் பப்ஸும், பர்கரும் விருப்ப உணவாகிவிட்டதா?

கணினி விளையாட்டுகளும், தொலைக்காட்சி நிகழ்வும் ஈர்க்குமளவுக்கு பாரம்பரியப் பண்டிகைகள் ஈர்ப்பைக் கொடுக்கவில்லையே இன்றைய மழலைத் தலைமுறையிடம். அவசரத்தில் அடுத்த கட்டத்துக்கு நொண்டி நொண்டி நகரும் நாம்தான் சரியாக அவர்களுக்கு கற்றுக் கொடுக்காமல் விட்டு விட்டோம் என்பதை மறுக்க முடியுமா? மாட்டுப் பொங்க‌லில் இளம் க‌ன்றுக் குட்டிக‌ளோடு நாங்கள் நடத்தும் ஜ‌ல்லிக்க‌ட்டுக்காய் ஏங்கிய நானும், என் அண்ணனும், ஆட்டுக்குட்டி அருகில் வ‌ந்தாலே, "ஐயே.ட‌ர்ட்டி"என‌ என‌ வில‌கி ஓடும் எங்க‌ள் வீட்டு ம‌ழலையைக் க‌ண்டு வாய‌டைத்துப் போய்த்தான் இருக்கிறோம்.

எங்களுக்காவது, விவசாய பாரம்பரியத்தை நினைத்துப் பார்க்க பனிப்புகை படர்ந்து சில பொங்கல் தினங்கள் நினைவிடுக்கில் தேங்கியிருக்கிறது. அடுத்த தலைமுறைக்கு விவ‌சாய‌மும், விவசாயம் சார்ந்த பண்டிகைகளும் என்றாலே பேஸ்புக் ஃபார்ம்வில்லே தான் நினைவுக்கு வ‌ருமோ?. கூடவே பொங்கல் சோறும் கணினியிலோ கிடைக்க விஞ்ஞானம் ஏதாவது செய்யுமா?

.

க(வன)ரணம் தப்பினால்...

Monday, January 4, 2010
ந‌க‌ரின் பிசியான‌ சாலை.காலை அலுவ‌ல‌க‌ம் செல்லும் அவ‌ச‌ர‌த்தில் அனைவ‌ரும் ப‌ற‌ந்து கொண்டிருக்கும் நேர‌ம்.கேச‌வ், ஏற்க‌னவே ஆபீஸ்க்கு டைம் ஆச்சே,மீட்டிங் வேற‌ இருக்கே,லேட்டாப் போனா மேனேஜ‌ரை எப்ப‌டி ச‌மாளிக்க‌றது என்ற‌ க‌வ‌லையுட‌னே தன் வாக‌ன‌த்தை விர‌ட்டிக் கொண்டிருந்தான்.மாலை சீக்கிரம் கிளம்பி த‌ன் 4 வயது ம‌க‌ளை ஹாஸ்பிட‌லுக்கு கூட்டிட்டு போக மேனேஜர் பர்மிஷன் தர‌ணுமே என்ற எண்ண‌ம் வேறு ப‌ய‌த்தைக் கூட்டியது.

எல்லாம் காலை நேர‌ சோம்ப‌லால் வ‌ரும் வினை.ஒரு 10 நிமிட‌ம் சீக்கிர‌ம் எழுந்தால் டென்ஷ‌ன் இல்லாம‌ ஆபீஸ் கிள‌ம்ப‌லாம் என‌ மூளைக்குத் தெரிந்தாலும்,ம‌ன‌ம் அத‌ற்கு ஒத்துழைப்ப‌தில்லையே..என ம‌ன‌திற்குள் பொருமிக் கொண்டிருந்தான்.

ரோட்டில் சிக்னல் வேறு சிவப்பு விழுந்துவிட்டால் அதில் சில நிமிடங்கள் வீணாகுமே பச்சையில் இருக்கும் போதே கடந்து விடவேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கும்
போதே தொலைவில் சிக்னல் தெரிந்தது. ஆஹா பச்சையில் தான் ஒளிர்கிறது.ஆனால் டைமர் 2 செகண்டு காட்டுதே..என வண்டியை முறுக்கினான்.சிக்னலை நெருங்கவும் மஞ்சள் விழவும் சரியாக இருந்தது.மஞ்சள் தானே,சிகப்பு விழும்முன் சீக்கிரம் போயிடலாம் என வேகத்தைக் கூட்டினான்...

தேர்வுக்கு லேட் ஆச்சே என்றக் கவலையோடு,அவ்வூரின் பெரும் பணக்காரரின் மகன் கிஷோர் உச்ச வேகத்தில் வந்து கொண்டிருந்தான் தனது புத்தம் புதிய காரில் எதிர்த் திசையில்.அவன் வரும் திசையிலும் ஒளிர்ந்தது மஞ்சள்.அடுத்து பச்சை தானே வரப்போகிறது நாம் சிக்னலை அடைவதற்குள் பச்சை விழுந்து விடும் என்ற நம்பிக்கையில் வேகத்தைக் குறைக்காமலே வண்டியைச் செலுத்தினான்.

கிஷோரின் காரும்,கேசவ்வின் வண்டியும் சந்தித்தது சிக்னல் அருகே எதிரெதிரே உச்ச வேகத்தில்.இரு வண்டிகளும் தூக்கியெறியப்பட்டன.அங்கிருந்த மக்கள் சந்தித்தது ஒரு கோர விபத்தை..இரு இளைஞர்களின் வாழ்வு சிதைந்தது.இரு குடும்பங்களின் எதிர்காலமும் கேள்விக்குறியானது.

இது அவர்களின் விதியெனச் சிலர் நினைத்தாலும், அதைத் தவிர்த்திருக்க வழியே இல்லையா..

இருவரும் செய்த சில சிறு சிறு தவறுகளால்தான் இவ்விபத்து.அதில் பல தவறுகள் நாமும் செய்வதுதான்..
கரணம் தப்பினால் மரணம் என்னும் நிலைதான் பயணத்திலும் என்ற பெரும் உண்மையை நாமெல்லாம் சாவகாசமாய்ப் புறக்கணித்து விடுகிறோம்

சிக்னலை அலட்சியம் செய்ததும்,மிக அதிக வேகமுமே இருவரின் வாழ்க்கையை அழித்தது.அதிக வேகத்துக்குக் காரணம் அவர்கள் பயண நேரத்துக்கு சரியாக கிளம்பாமல் விட்டதுதான்.பயணத்தில் செய்யும் சிறு தவறும் பெரிய பெரிய மோசமான விளைவுகளை இது போல ஏற்படுத்தலாம்.

சாலைப் பாதுகாப்பு வாரத்தை(ஜனவரி 1-7) டிரைவிங்கில் நீங்கள் செய்யும் தவறுகளை மீள்பார்வை செய்யும் வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்‌.
சாலைப் பாதுகாப்புத் தெடர்பான இடுகைகளை எழுத கீழ்வரும் நண்பர்களை அழைக்கிறேன்


நான் ஆதவன்
கார்த்திகைப் பாண்டியன்
சஞ்சய் காந்தி
சுபா
சிவனேஸ்வரி


எழுதிட்டு, நீங்களும் குறைந்தபட்சம் 5 பேரை அழையுங்க மக்களே

ப‌ய‌ண‌த்தில் க‌வ‌ன‌மாயிருங்க‌ள்.விதிக‌ளை ம‌தியுங்க‌ள்.ம‌கிழ்வாய் வாழுங்க‌ள்.

பொஸசிவ் பெற்றோரா நீங்கள்?

Friday, January 1, 2010
நம் உறவுகளும்,நட்புகளும் நம் மீதும் அன்பைப் பொழிவதென்பவது மிக அருமையான ஒரு விஷயம்.அத்தகைய ஒரு விஷயமும் சில நேரங்களில் சிலரது வாழ்வைப் பந்தாடிவிடுகிறது. அந்த பாசத்தினால் சூழ்நிலைக் கைதிகளாகி அச்சிறையிலிருந்து மீள முடியாமல் பாதாளத்திற்கே போகும் நிலையை ஏற்படுத்தி விடுகிறது.
அப்படியான ஒரு சூழ்நிலைக் கைதியின் கதை இது.

என் தோழி ஒருத்தி.. தமிழகத்தின் ஒரு சிறு நகரில் பிறந்து,வாழும் ஒரு சராசரிப் பெண். பெற்றோருக்கு ஒரே பெண். அதனால் வீட்டில் கிடைக்கும் அன்பும் கவனிப்பும் மிக மிக அதிகம். மகளின் அனைத்து நடவடிக்கைகளிலும் பெற்றோரின் தலையீடு இருக்கும். அவள் பிரஷ் செய்யும் பேஸ்ட் தொடங்கி,தூங்கும் பெட் வரை பெற்றோரின் தேர்வாகவே இருக்கும். இவளது விருப்பங்களை வெளிப்படுத்தினாலும் அவை "உனக்கு அது நல்லதல்ல.நாங்க உன் மேல உயிரையே வச்சிருக்கோம்..உனக்குத் தீங்கு செய்வோமா? சொல்வதை கேள்" என அடக்கப்படுவாள். அவர்கள் அவளுக்கு தேர்ந்தெடுப்பவை பெஸ்ட் ஆகவே இருக்கும் என்பதும் உண்மை.
அவளுக்குள்ளே ஆயிரம் திறமைகள் ஒளிந்திருந்தன. படிப்பா,விளையாட்டா,ஓவியமா,கோலமா அனைத்திலும் முன் நிற்பாள்.ஆனால் படிப்பைத்தவிர வேறு எதிலும் அவள் பெற்றோர் அவளை ஊக்குவிக்கவில்லை. விளையாட்டில் கலந்துகொண்டால் ஏதாவது அடிபட்டு விடும். பனியில கோலம் போட்டால் ஜலதோஷம் பிடிக்கும் என்பது போன்ற பலப்பல காரணங்கள் அவள் பெற்றோரிடம் இருந்தது.

அவளின் சின்ன சின்ன ஆசைகளை(அந்த வயதில் அதெல்லாம் மிகப்பெரிய ஆசைகளாய்த் தோன்றும்) யும் நாங்கள் எங்களால் முடிந்தவரை அவள் பெற்றோருக்குத் தெரியாமல் நிறைவேற்றுவோம்.
பள்ளிப்பருவம் முடிந்து கல்லூரிக் காலம் வந்ததும் நாங்கள் எல்லோரும் தகுதிக்கேற்றக் கல்லூரியைத் தேடி கிளம்பிவிட்டோம்.ஆனால் அவள் வசித்த ஊரில் கல்லூரி இல்லை என்பதால், தன் மகளை வெளியூருக்கு படிக்க அனுப்ப பயந்த பெற்றோர் அவளைக் கல்லூரியில் சேர்க்கவேயில்லை. அங்கேயே இருந்த ஒரு கணினி கல்விக்கூடத்தில் சேர்ந்தாள்.இத்தனைக்கும் பள்ளியில் அவள் பெற்ற மதிப்பெண் 90%.பெற்றோர் அங்கும் அவளைக் குழந்தை போலவே நடத்தியிருக்கிறார்கள்.அவளை அழைத்துச் சென்று கல்விக்கூடத்தில் விட்டு,வகுப்பு முடியும்வரை காத்திருந்து பின் வீட்டுக்கு அழைத்துப் போவது எனத் தொடர்ந்திருக்கிறது.அந்நிறுவனத்தில் இருப்பவர்களுக்கு இவர்களைப் பற்றித் தெரியததால், அப்பெண்ணின் ஒழுக்கத்தைப் பழித்தும், அவள் பெற்றோர் அப்படி இருப்பது இவளின் ஒழுக்கத்தின் மீதான நம்பிக்கையின்மையால்தான் எனக் கதை உலவத் தொடங்கியிருக்கிறது.

அதைப் பற்றி கவலையுறாமல் படிப்பை நல்ல படியாகவே முடித்தாள்.வழக்கம் போல வேலைக்குப் போவதும் எதிர்க்கப் பட்டது.அதனால் வீட்டிலேயே முடங்கினாள்.

திருமணத்திற்கு வரன் பார்த்தார்கள்.அவர்கள் ஊரிலேயே வரன் வேண்டும் எனத்தேடினார்கள். அது சிறிய ஊர்.அங்கிருந்த படித்தவர் எல்லாம் வெளியூரிலேயே இருந்தனர்.அதனால் அந்த ஊரிலேயே இருந்த‌, எந்த வேலையிலும் இல்லாத‌ ஒருவருக்கு மணம் செய்வித்தனர்.
திருமணம் முடிந்து சில காலத்தில், அவளது கணவருக்குத் தானும் சம்பாதிக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றி வேலை தேடத் தொடங்கினார்.100km தொலைவிலுள்ள ஒரு ஊரில் நல்ல வேலை கிடைத்திருக்கிறது. ஆனால் அவளது பெற்றோருக்கு மகளை அவருடன் அனுப்ப மனமில்லை.தனியே வெளியூரில் தங்கி வேலைப் பார்த்த அவருக்குத் தன் மனைவியைத் தன்னுடன் வைத்துக்கொள்ளும் ஆசையால் இவளை வற்புறுத்தி அழைத்திருக்கிறார்.இவள் மனதில் ஆசை இருப்பினும் பெற்றோரை மீற முடியாமல் மறுத்து விட்டாள்.தனிமரமாகவே நிற்கிறாள்.அவள் கணவர் மனைவியைப் பிரிந்து,இத்தனைப் பிரச்சினைகளால் பலத் தீய பழக்கங்களுக்கு அடிமையாகி விட்டாராம்.இது பெற்றோருக்குத் தெரிந்தால் விவாகரத்து வரை போய்விடுமோ எனப் பயத்தில் இருக்கிறாள் தோழி.

இப்போது யாருக்கும் நிம்மதி இல்லை.ஆனால் அவர்கள் எல்லோரும் நினைப்பது " நான் செய்வதே சரி.என் பக்கமே நியாயம்
"
இத்தனைப் பேரின் நிம்மதி தொலைந்தது, மனிதர்கள் குற்றமா? அல்லது மனிதர்கள் ஒருவர்மேல் ஒருவர் வைத்த அன்பின் குற்றமா?