கணக்கு சொல்லித்தரேன்..வாங்க..Part 2. (28/09/2010)

Tuesday, September 28, 2010
போன பதிவில் சுலப கணித வழிமுறைகளைப் பார்த்தோம்.இந்தப் பதிவில் அதன் தொடர்ச்சியாக எண்களை சுலபமாக ஸ்கொயர் பண்ணும் வழிமுறைகளைப் பார்ப்போம்.

2ல் தொட‌ங்கும்,இரு ஸ்தான‌ எண்க‌ள்.
(Two Digit numbers in 20s)

1.க‌டைசி இல‌க்க‌த்தில் ஸ்கொயரைக் கண்டுபிடித்து அத‌ன் ஒற்றை ஸ்தான‌த்தை ம‌ட்டும் எழுதிக் கொள்ள‌வும்.
2.இதன் மீதத்தை க‌டைசி ஸ்தான‌த்தை 4 ஆல் பெருக்கி வ‌ரும் விடையுடன் கூட்டவும்.இதில் ஒற்றை ஸ்தானத்தை மட்டும் எழுதவும். மீதத்தை 4 உடன் கூட்டவும். இதுதான் விடையின் முத‌ல் ஸ்தான‌ம்.

23ஐ எடுத்துக் கொள்ளுங்க‌ள்.
1. Square of 3 =09 (9)
2.4X3 =12 (29)
3.4+1 =5 (529)

3ல் தொட‌ங்கும்,இரு ஸ்தான‌ எண்க‌ள்.
(Two Digit numbers இன் 30s)

1.க‌டைசி இல‌க்க‌த்தில் ஸ்கொயரைக் கண்டுபிடித்து அத‌ன் ஒற்றை ஸ்தான‌த்தை ம‌ட்டும் எழுதிக் கொள்ள‌வும்.
2.இதன் மீதத்தை, க‌டைசி ஸ்தான‌த்தை 6 ஆல் பெருக்கி வ‌ரும் விடையுடன் கூட்டவும்.இதில் ஒற்றை ஸ்தானத்தை மட்டும் எழுதவும். மீதத்தை 9 உடன் கூட்டவும். இதுதான் விடையின் முத‌ல் ஸ்தான‌ம்.

38ஐ எடுத்துக் கொள்ளுங்க‌ள்.
1. Square of 8 =64 (4)
2.6X8 =54 (44)
3.9+5 =14 (1444)4ல் தொட‌ங்கும்,இரு ஸ்தான‌ எண்க‌ள்.
(Two Digit numbers இன் 40s)
1.க‌டைசி இல‌க்க‌த்தில் ஸ்கொயரைக் கண்டுபிடித்து அத‌ன் ஒற்றை ஸ்தான‌த்தை ம‌ட்டும் எழுதிக் கொள்ள‌வும்.
2.இதன் மீதத்தை, க‌டைசி ஸ்தான‌த்தை 8 ஆல் பெருக்கி வ‌ரும் விடையுடன் கூட்டவும்.இதில் ஒற்றை ஸ்தானத்தை மட்டும் எழுதவும். மீதத்தை 16 உடன் கூட்டவும். இதுதான் விடையின் முத‌ல் ஸ்தான‌ம்.

44ஐ எடுத்துக் கொள்ளுங்க‌ள்.
1. Square of 4 =16 (6)
2.8X4 =33 (36)
3.16+3 =19 (1936)

இன்னிக்கு கிளாஸ் முடிஞ்சிதே.. என்சாய்..

கணக்கு சொல்லித்தரேன்..வாங்க..

Monday, September 27, 2010
டீச்சர் வேலை பார்த்துகிட்டு உங்களுக்கு எல்லாம் ஒண்ணும் சொல்லிக்குடுக்காம மொக்கை போட்டுட்டே எவ்ளோ நாளுக்கு இருக்கறது..அதனால நானும் உபயோகமான பதிவு போடறாதுன்னு முடிவு எடுத்துட்டேன்..( பதிவு போட சரக்கு காலி ஆனதாலதான் இப்பிடி ஒரு முடிவு எடுத்தேன்க்கிற உண்மையை கண்டுபிடிச்சவங்க‌ எல்லாம் கம்முன்னு இருக்கணும்.. பின்னுட்டத்தில எல்லாம் சொல்லக் கூடாது.)


படிக்கிற காலத்திலயே பலபேருக்கு கணக்குன்னா பிணக்கா இருக்கும்.ஆனால் இந்த கால்குலேஷன்ஸ் அன்றாட வாழ்க்கையில எல்லா நேரத்திலயும் வந்து டார்ச்சர் பண்ணும்.இப்போல்லாம் 1+2 எவ்ளோன்னு கேட்டாக்கூட கால்குலேட்டரைத் தேடற நெலமைல தான் பலபேர் இருக்கோம்.
இதிலருந்து கொஞ்சம் தப்ப்பிக்கறதுக்கு சில வழிகள் இருக்கு.

ஸ்கொயர் பண்ணுதல்,பெருக்குதல்,வகுத்தல் இதெல்லாம் செய்யறதுக்கு பல சுருக்க வழிகள் இருக்கு.அதுல எனக்குத் தெரிஞ்சவரைக்கும் உங்களுக்கும் சொல்றேன்.கேட்டுக்கோங்க.

1. 5 ல் முடியும் ஒரு இரண்டு டிஜிட் நம்பரை ஸ்கொயர் பண்ணனுமா?(Eg.25,65,95,etc)


1.அந்த நம்பரின் முதல் டிஜிட்டுடன் 1 ஐ கூட்டி வரும் விடையுடன் அந்த நம்பரைப் பெருக்குங்கள்.
2.வரும் விடையைத் தொடர்ந்து 25 என்னும் நம்பரை எழுதிக் கொள்ளுங்கள்.

Eg; Square of 65
= (6X(6+1))25
=4225


2.ஒரு எண்ணை 5ஆல் வகுக்க வேண்டுமா?(Eg:67/5)
அந்த எண்ணை இரண்டால் பெருக்கி,டெசிமல் பாயிண்டை ஒரு டிஜிட் இடப்பக்கம் நகர்த்துங்கள்

Eg: 56/5

= 56X2 = 112 (Move the decimal to left)
=11.2


3. 10க்கு அருகிலோ,100க்கு அருகிலோ,1000க்கு அருகிலோ இருக்கும் எண்களைப் பெருக்க வேண்டுமா?

Eg: 8X7,94X96,990X994

1.முதல் எண்ணை 100லிருந்து கழித்து வரும்விடையை A என குறித்துக் கொள்ளுங்கள்
2.அதேபோல் இரண்டாம் எண்ணை 100லிருந்து கழித்து வரும் விடையை B என குறித்துக் கொள்ளுங்கள்
3.இப்போது A வை முதல் எண்ணிலிருந்தோ B யை இரண்டாம் எண்ணிலிருந்தோ கழித்து வரும் விடையை எழுதிக் கொள்ளுங்கள்.
4.அதனைத் தொடர்ந்து A மற்றும் B யை பெருக்கி வரும் விடையை கீழ்வருமாறு எழுதுங்கள்.
ஒரிஜினல் நம்பர் ஒரு எத்தனை இலக்கமாக இருக்கிறதோ அத்தனை இலக்கத்தில் A,B பெருக்கிய விடையை எழுதுங்கள்
இதுதான் பெருக்கிய விடை.


Eg: 94 X 95

A =6 B=5

94-5 = 95-6 =89

AXB =30

Ans = 8930
997002


Eg.2. 997 X992
A=3
B=8

997-8 =992-3 =989
3X8 = 024 (Original number is in 3 digits)

Ans = 989024


இன்னிக்கு பாடம் அவ்ளோதான் .. போயிட்டு அடுத்த கிளாஸ்க்கு மறக்காம வந்துருங்க.

உங்கள்ல பலபேருக்கு இதெல்லாம் ஜுஜுபின்னு தெரியும்..ஆனாலும் வந்து பொறுமையா படிச்சதுக்கு நன்றிங்க‌.

ஐ லவ் யூ டாடி

Wednesday, September 22, 2010
அப்பா.. உங்களுக்கு ஒரு லெட்டர் எழுதணும்ன்னு நானும் ரொம்ப நாளா நினைச்சு தள்ளிப் போட்டுட்டே இருந்தேன்..இன்னிக்கு எழுதிதான் பாக்கலாம்ன்னு ஒரு முடிவுக்கு வந்துட்டேன்.
அப்பா.. நான் செய்யும் எல்லா விஷயத்தையும் நீங்க ஏத்துக்கறதில்லைன்னு எனக்கு ஒரு மனக்குறை பல நாட்கள் இருந்துருக்கு.. வேற வீட்ல பொறந்திருந்தா நல்லா இருந்துருக்கும்ன்னு கூட நெனச்சிருக்கேன்.ஆனால் நான் வளர வளரத்தான் தெரியுது.. நீங்க ஏத்துக்காத என்னோட எல்லா முடிவுகளும் எனக்கு நன்மைதான் தந்திருக்கு. சின்ன வயசுல என் கிட்ட அதிகமா இருந்த பொம்மைகள எடுத்து பக்கத்தில் இருந்த ஏழைக் குழந்தைகளுக்கு கொடுத்த கணம், என்னை வெளியில் கூட்டிப் போறேன்னு சொல்லிட்டு,கிளம்பறப்ப‌ யாரோ ஒருத்தர் உதவின்னு வந்தவ உடனே அவ‌ங்களோட போன நிமிடம்ன்னு பல நேரங்கள்ல நினைச்சிருக்கேன்.. என்னை மாதிரி ஒரு நல்ல புள்ள கிடைக்க குடுத்து வச்சிருக்கணும் நீங்கன்னு .. ஆனால், சமீப நாட்களாகத்தான் உணர்கிறேன். உங்களுக்கு மகளாப் பிறக்க நான் தான் கொடுத்து வைத்திருக்கிறேன்...

நான் எவ்வளவுதான் தவறுகள் செய்தாலும் உடனே மன்னிக்கவும் மறக்கவும் முடிகிறது உங்களால்.. ஆனால் நீங்கள் செய்யும் சரியான விஷயங்களையும்,அது என் விருப்பத்திற்கு மாறாய் இருந்தால் என்னால் ஏற்க முடியாமல் போகும் தவறு இனிமேல் நடக்காது...

எல்லாக் குழந்தைகளையும் போல சாதாரண சந்தோஷங்களுடன் என்னை நீங்கள் வளர்க்கவில்லை எனக் கவலைப்பட்டிருக்கிறேன்..ஆனால் அசாதாரண அதீத சந்தோஷங்களை எனக்காக சேமித்து வைத்திருக்கிறீர்கள் என்பதை உணர எனக்கு இத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கிறது.
"அப்பாவாட்டமே புள்ள"அப்படின்னு சிலர் சொன்னப்போல்லாம் "இல்லை எங்கப்பா மாதிரி நான் இல்லை.. ஊருக்கு உழைக்கிறேன்னு லூசுத்தனமெல்லாம் நான் பண்ண மாட்டேன்" என நினைத்த கணங்களுக்காய் வெட்கித் தலைகுனிகிறேன்.

பண‌ம் ம‌ட்டுமே வாழ்க்கை அல்ல‌.. அது அல்லாத‌ ம‌ற்றவைதான் அதி அற்புத‌மான‌வை என்ப‌தை உண‌ர‌ வைக்கிறீர்கள் உங்க‌ள் வாழ்க்கையால்.அதை உங்க‌ளிட‌மிருந்து ம‌ற்றவ‌ர்க‌ள் சுல‌ப‌மாய்ப் ப‌ற்றிக் கொண்டார்க‌ள்.என‌க்குத் தான் நாட்க‌ள் அதிக‌ம் எடுத்திருக்கிற‌து.வெகு சாதார‌ண‌ ச‌ந்தோஷ‌ இழ‌ப்புக‌ளுக்காய் நான் அழுத‌ க‌ண‌ங்க‌ளில், நீங்க‌ள் க‌ண்முன் காட்டிய‌ அதிச‌ய‌ங்க‌ளைத் த‌வ‌ற‌ விட்டிருக்கிறேன்.

தவறிய கணங்களுக்காய் வருந்தப் போவதில்லை நான்.வரப் போகும் கணங்களில் உங்கள் எண்ணங்களைச் செயலாக்கும் மகளாய் வாழ்ந்து காட்டப் போகிறேன்.
ஐ லவ் யூ டாடி

.

மனதில் மலர்ந்தவை

Tuesday, September 21, 2010
கல்விக் கட்டண உயர்வு என்பது இப்போது பற்றி எரியும் பிரச்சினையாக நம்மிடையே நிலவுகிறது.
பள்ளி நிர்வாகங்கள் கட்டண உயர்வுக்கு சொல்லும் காரணம்.பெற்றோர் எதிர்பார்க்கும் அனைத்து வசதிகளையும் தர அரசு நிர்ணயித்த கட்டணத்தால் முடியாது என்பதே. இந்நிலையில் பெற்றோர்,அதே பள்ளியில் தான் படிக்கவைப்பேன் ஆனால் கட்டணம் குறைவாக வாங்க வேண்டும் என அடம் பிடிக்க வேண்டுமா? அப்படி அதிகம் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளில் படிக்க வைப்பதே பெருமை என நினைக்காமல்,அத்தகைய பள்ளிகளை புறக்கணித்து விட்டு,அரசுப் பள்ளிகளை நாடுவதைப் பற்றி பெற்றோர் ஏன் சிந்திக்கக்கூடாது?
அரசுப் பள்ளி மாணவர்கள் எந்த விதத்திலும் தனியார் பள்ளிகளுக்கு சோடை போனதல்ல.சமீபத்திய தேர்வு முடிவுகள் அதை உறுதிப்படுத்துகின்றன.

அரசுப் பள்ளியில் குறைந்த கட்டணம் செலுத்தி அடிப்படைக் கல்வியைப் பெற்றுக் கொண்டு,படிப்பல்லாத பிற திறமைக‌ளான கம்ப்ப்யூட்டர்,கராத்தே , நீச்சல் போன்றவற்றை தனியாக கட்டணம் செலுத்தி வெளியிடங்களில் கற்றுக் கொள்ள ஏன் முயலக்கூடாது?
***********************************************************************************
சில நேரங்களில் ஒருவர் தவறு செய்யும் தவறால் விளையும் மோசமான விளைவுகளை விட, அந்தத் தவறுக்கு நாம் கோபப்படுவதால் வரும் தீய விளைவுகள் மிக மோசமாகின்றன. எவர் மீதும் கோபப்படும்முன் அதன் தீய விளைவுகளை யோசியுங்கள்.அந்தக் கோபத்தைத் தூக்கிப் போடுவதால் என்ன குறை நமக்கு வந்துவிடப் போகிறது என்பதையும் சில நிமிடங்கள் தனிமையில் யோசியுங்கள்.கண்டிப்பாய் நீங்கள் எடுக்கும் முடிவு நல்லதாகவே அமையும்.

***********************************************************************
விளை நிலங்கள் வீட்டு நிலங்களாவதைப் பற்றி நிறைய பேர் கவலைப்பட்டப்போது எல்லாம், அதன் கொடுமை என்னால் உணரப் படவில்லை.அண்மையில் ஒரு கிராமத்துக்கு சென்ற பயணத்தின் போதுதான் நிதர்சனமாய் உணர்ந்தேன்.ஆறு மாத கால இடைவெளியில் ஏறத்தாழ 50 ஏக்கர் நிலங்களில் விவசாயம் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த கிராமத்தின் மொத்த விளை நிலங்களே 100 ஏக்கருக்கும் குறைவாகத்தான் இருக்கும்.மீதம் இருக்கும் கொஞ்ச நிலங்களும் வீடாக மாறிப்போனால் விவசாயம் என்ன ஆகும்?

********************************************************************

இமெயிலில் வந்தது
கீழேயுள்ள படம் ரத்தன் டாடாவுக்கு தரப்பட்ட ஒரு அன்பளிப்பு...இதைப் பார்க்கும் போது ஏதோ குழப்பமான வண்ணக் கலவையாகவே தோன்றுகிறது அல்லவா?

இதன் நடுவிலுள்ள வட்டத்தில் ஒரு பளபளப்பான இரும்பு உருளையை வைக்கும்போது அதில் தோன்றுவது ரத்தன் டாடாவின் உருவம்.


இதைச் செய்தவர் மிகப் பிரபல‌ ஓவியரோ,விஞ்ஞானியோ அல்ல.சாலையில் படம் வரையும் ஒரு சாதாரண மனிதர்.அரும் பெரும் திறமைகள் எங்கெல்லாம் ஒளிந்திருக்கின்றன பாருங்கள்.

.

உனக்கான எனது

Saturday, September 11, 2010
தூசி படிந்த கதவில்
உன் கைப்பிடியின் பிம்பம்..
துடைக்காமல் மறியல் செய்யுதே
என் கைகள்....

*************************************

உன் ஸ்பரிசம் பட்ட
என் கைக்கடிகாரமும்
நகர மறுக்குதே
மீண்டும் நீயில்லாமல்

*************************************உன் முதற் கோபத்தால்
விளைந்த என் கண்ணீர் துளி
அவசரமாய் சேமிக்கப் பட்டது
இனிக்கும் துளியாய்
உதடுகளில்
*************************************


உன் கால் சுவடுகளில்
தடம் பதிக்கவா
இணையாய் நடக்கவா
தெளிவில்லாமல் தவிக்குதென்
கால்கள்


.

அந்நாட்க‌ளில் தெரிய‌வில்லை

Friday, September 10, 2010
உனக்கினையாய்
உய‌ர‌மாய் வளர‌
எம்பிக் குதித்த
நாட்களில் தெரியவில்லை

நீ எப்போதும் உடுத்தும்
நிற‌த்திலேயே என்
அல‌மாரி நிறைத்த
நாட்க‌ளில் தெரிய‌வில்லை


உன் கண்ணென்னும்
காந்த‌த்தின் வ‌லிமைக்கு
ப‌ய‌ந்து, ம‌ண் பார்த்த‌
நாட்க‌ளில் தெரிய‌வில்லை


உன் க‌ள்ள‌ச் சிரிப்பின்
பொருளை அறிந்தும்
அப்பாவியாய் ந‌டித்த‌
நாட்க‌ளில் தெரிய‌வில்லை


அந்நாட்க‌ளின் நீளம்
எவ்வ‌ள‌வு குறுகிய‌தென்ப‌து
.

சொல்ல‌டி எஞ் செல்ல‌க்கிளி

Monday, September 6, 2010
ஒறவெல்லாம் தெரண்டிருக்க
ஒரு நாளு ஊருக்குள்ளே
மாமனவங் கை புடிச்சு
சுத்திவர ஆசையடி

வெள்ளி நிலா நிற்கையிலும்
சூரியந்தான் எரிக்கையிலும்
மாமனவன் விரல் புடிச்சு
அடியெடுக்க துடிக்குதடி

அறுப்புக் கால‌க் காத்தாக‌
வெத‌ப்பு கால‌ மழைபோல‌
மாம‌ன‌வ‌ன் இருப்பு
ம‌ன‌ச‌த்தான் நெறைக்குத‌டி

முட்டும் ஆட்டுக்குட்டி
கொத்தும் கோழிக்குஞ்சு
எல்லாமே மாம‌னாட்ட‌
தோணுத‌டி என்ன‌ செய்ய‌

வெத நெல்லா வச்சிருக்கும்
மாம‌ன‌வ‌ன் நெனப்பு
பதராகப் போயிடுமோ
சொல்ல‌டி என் செல்ல‌க்கிளி


.

ம்ம்ம்ம்ம்

Sunday, September 5, 2010
தென்றல் வீசும் மாலையிலே
சாளரச் சாரலிலே
நேரம் கடத்திய வேளையிலே
உதித்ததொரு சூரியனே

உன் கதிர் கொண்டு
மனம் கவர்ந்து
செயல் தடுத்து
ஆட்கொண்டவனே

உயிர் கொடுக்கும்
பகலவனே
உயிர் எடுக்கும்
மாயம் கற்றது எப்போது

நிலமுறங்கும் பொழுதினிலும்
நிலவுதிக்கும் நேரத்திலும்
கனவிலும் நனவிலும்
காட்சி தருபவனே

மற்றவர் காயத்திற்கு
மருந்தாகும் நீ
என் காய‌த்திற்கு ம‌ட்டும்
கார‌ணமானாயே

கவிதைக் கடலின் பேரூழி
எனக்குக் கற்றுத் தருவது
உன்னை மறக்கும் வலியா
உன் நினைவை மறைக்கும் வழியா?

.