Sunday, January 9, 2022

 

அழகானதொரு அந்தி மாலைப் பொழுது. அறிமுகமில்லாததொரு பாதை.மகிழுந்து பாதையின் ஒரு பக்கத்தில் ஓடிக் கொண்டிருந்த‌ ஆற்றின் நகர்வும், அதையொட்டிய பெரு மணல் பரப்பும் கவனம் ஈர்த்தது. அந்த ஆற்றின் பலத்தால்  வளர்ந்திருந்த பசுமை போர்த்திய பெருமரங்களின் சுகமான‌ உயிர்க் காற்று, நாசியின் இறுதி வரை நிரம்பி உடலுக்குள் வழிந்தோடிக் கொண்டிருந்த இதமானதொரு பயணம்.  காத்திருக்கும் கடமையும், பயணித்துக் கொண்டிருக்கும் பாதையின் அழகும், வாகனத்தின் வேகத்தை கூட்டவா குறைக்கவா என்று முடிவெடுக்க விடாமல் எண்ணங்களின் மீது தம் செல்வாக்கைச் செலுத்திக் கொண்டிருந்தன.

ஆற்றின் ஓட்டத்தை ரசித்துக் கொண்டே,  அரைமனதாய் வாகனத்தை நகர்த்திக் கொண்டிருந்தபோது, மணல் பரப்பும், ஆற்றின்  நீரும் கைகலக்கும் ஓரிடத்தில், சாலையிலிருந்து சற்று தூரத்தில்,சற்றே பெரிய‌ பொம்மை போன்றதொரு உருவம் கண்ணில் பட்டது. உற்று நோக்கும் போது அது அசைவதாகவும் தெரிந்தது.  நிர்மலமாய்,மணல் மட்டுமே நிரம்பி காட்சியளிக்கும், அந்தப் பகுதியில் தோன்றும் அந்த உருவம் என்னவாக இருக்குமென அறியும் ஆர்வம் வாகனத்தை நிறுத்தி விட்டு அதனை நோக்கி நடை போட வைத்தது.

அருகில் நெருங்க நெருங்க, ஓடிவரும் ஆற்றின் நீருக்கும், காற்றில் அலைபாயும் மணல் பரப்புக்கும் இடையே கால் நனைக்கவும், நனையாமல் தப்பிக்கவும் முயல்வதாய் நீருக்கு போக்கு காட்டி விளையாடிக் கொண்டிருந்த சுட்டிக் குழந்தை ஒருத்தி கண்ணில் தெரிந்தாள். உலகுசார் சிந்தனைகள் அத்தனையிலிருந்தும் விடுபட்டு, அவளின் மீது  கவனம் தவமாய்க் குவிந்தது.  அன்று வரையிலான என் அன்புக்குரியவர்கள் அத்தனை பேரையும் குழைத்து வார்த்த வார்ப்பாய் உருவம் கொண்டிருந்தது அந்த இரண்டரையடிப் பூஞ்சிலை. ஓடிச் சென்று வாரியணைக்கவும், அவளின் ஆதி அறிந்து அளவளாவவும் ஆசை கொண்டேன்.  மற்ற மனிதர் எவருமேயில்லாத நீள்பாதையில் இவள் மட்டுமே தனியாக இருப்பது எப்படி என்னும் என்னும் கேள்வி நிதானிக்க வைத்தது. யார் இவள்? கற்பனைக் கதைகளின் நாயகியான தேவதையோ? ஆன்மீகக் கதைகளில் அருள் புரியும் பாலகியான அம்பிகையோ? ஆறெட்டும் தொலைவில் வசிக்கும் ஒரு எளிய குடும்பத்தின் செல்ல மகளோ?  கட்டுப்பாடுகள் கொண்ட தன் உலகம் விடுத்து சுதந்திரக் காற்றினைச் சுவாசிக்க வந்த வான் மகளோ? யாராக இருப்பாள் இவள் என்ற எண்ணம் எழுந்த மறுநொடியில் இவளுக்கான பெயர் என்னவாக இருக்கும் என்று சிந்தனைப் பாதை மடை மாறியது.அன்று வரையிலும் பொம்மைகளாகவும், திரைப்பதுமைகளாகவும்,செவிவழிக் கதைகளின் நாயகிகளாகவும், என் பேரன்புக்குரியவர்களாகவும் இருந்த அத்தனைப் பெயர்களையும் சூட்டிப் பார்த்தேன். எல்லாப் பெயரிலும் ஏதோவொரு குறை தொக்கி நின்றது. இறுதியாய்த் தான் மனதில் மலர்ந்தது, சின்ட்ரெல்லா என்னும் ஒற்றை வார்த்தை. அவளுக்கு மிகப் பொருத்தமாய் இருக்குமெனும் திருப்தி வந்த நொடியில், அந்தப் பெயர் அவளுக்கானதெனில் அவள் சரியான நேரத்தில் கூடடைய வேண்டுமே என்னும்  உ ன்மத்த பதட்டம் தொற்றிக் கொண்டது.  நேரம் இப்போது என்னவாக இருக்கும்.  நாம கணக்கிடும் நேரம் அவளுலகுக்குப் பொருந்துமா? இந்தக் கேள்விகளுக்கான விடை அவளிடம் தானே இருக்கிறது. விரைவில் அவளைச் சேரிடம் சேர்க்க வேண்டுமே என்னும் புதிய பொறுப்பு மனதில் கூடியதால், அவளை நோக்கிய நடையின் வேகம் கூடியது. வேக நடையின் சிறு நொடியில் தொலைதூரப் பறவையின் அகவல் ஒலி கவனம் திருப்பியது. கவனம் மீட்டு மீண்டும் வேகம் கூட்டிய தருணத்தில் அவள் கண் மறைந்தாள்.  ஓடிக் கொண்டிருக்கும் நதியும், அலை மணல் பரப்பும் அப்படியே இருந்தன. கண்ணின் எல்லை எட்டும் தொலைவுக்கப்பாலும் அவளது காட்சி தெரியவில்லை. எங்கே சென்றிருப்பாள் என் சின்ட்ரெல்லா? அவள் சரியான பொழுதில் சேரிடம் சேர்ந்து விட்டாளா என்னும் கேள்விக்கணைகளை நட்சத்திரங்களை நோக்கி வீசிவிட்டு, விடைகளுக்கான‌ காத்திருப்போடு பயணிக்கிறேன்.