Showing posts with label பொங்கல். Show all posts
Showing posts with label பொங்கல். Show all posts

கணினியில் பொங்கல் கிடைக்குமா?

Friday, January 15, 2010
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

மகிழ்ச்சி பொங்கி நிறையும் நாட்களாய் இருந்தன அன்றையப் பொங்கல் பண்டிகைகள். தாத்தா, மாமா, சித்தப்பா என அனைத்து சொந்தங்களும் முழு நேர விவசாயிகளாய் இருந்தக் காலம் அது. படிப்பு மட்டுமே வாழ்க்கை என நினைத்து, ஹிஸ்டரியையும், ஜியாக்ரபியையும் படிக்கும் விருப்பத்தில் சொந்த மண்ணின் வரலாறையும், புவி அமைப்பையும் அறியாமல் விட்ட பள்ளி நாட்கள்.

பொங்கலுக்கெல்லாம் ஊருக்கு போக வேண்டாம் என அடம் பிடித்த அந்தக் காலத்தில் அறிந்திருக்கவில்லை, விரைவில் இவையெல்லாம் வெறும் நினைவுகளாகப் போகப் போகின்றன என்று. எப்படி வேண்டி வருந்தினாலும் இவை விரும்பி வராது என்று. அன்று சிறிதும் விருப்பமில்லாமல் ஊருக்குப் போன‌ சில‌ பொங்க‌ல் தின‌ங்க‌ளும் பொற்கால‌ங்க‌ளாய் ம‌ன‌தில் மிளிர்கின்ற‌ன‌ .

ஆனால், இன்று? அத்தகையதொரு கிராமப் பொங்கலுக்கு மனம் ஏங்கினாலும் நிதர்சனமோ வேறாய் இருக்கிறதே. இன்றைய கிராமப் பொங்கலில் , அந்நாளைய நகரப் பொங்கலிலும் நளினம் குன்றித்தான் போனது. கிராமத்து வீடுகளும் தொலைக்காட்சிப் பெட்டிகளாலும், செல்போன்களாலும் சூழப்பட்டு விட்டன. எங்கள் சிறுவயதுப் பொங்கலில் இருந்த உற்சாகமோ, உவகையோ இன்றைய குழந்தைகளிடம் இல்லாமல் போனதே.

பொங்கலோ பொங்கல் எனத் தாம்பளத்தில் குச்சி வைத்துத் தட்டுகையில், யார் வீட்டு ஒலி அதிகம் கேட்டது எனப் பெரிய போட்டியே நடக்கும். இன்று என் அண்ணன் மகள் கேட்கிறாள். “அத்தை! எதுக்கு இப்பிடி இன்டீசண்டா தேவை இல்லாம சப்தம் போடறாங்க”. தோட்டத்திலிருந்து வீட்டுக்குப் போகும் வரை எங்கள் கையிலிருக்கும் பொங்கல் சோற்றுக்காய்த் துரத்தி வரும் காகங்களும் எங்கோ மறைந்தன. அவைகளுக்கும் பப்ஸும், பர்கரும் விருப்ப உணவாகிவிட்டதா?

கணினி விளையாட்டுகளும், தொலைக்காட்சி நிகழ்வும் ஈர்க்குமளவுக்கு பாரம்பரியப் பண்டிகைகள் ஈர்ப்பைக் கொடுக்கவில்லையே இன்றைய மழலைத் தலைமுறையிடம். அவசரத்தில் அடுத்த கட்டத்துக்கு நொண்டி நொண்டி நகரும் நாம்தான் சரியாக அவர்களுக்கு கற்றுக் கொடுக்காமல் விட்டு விட்டோம் என்பதை மறுக்க முடியுமா? மாட்டுப் பொங்க‌லில் இளம் க‌ன்றுக் குட்டிக‌ளோடு நாங்கள் நடத்தும் ஜ‌ல்லிக்க‌ட்டுக்காய் ஏங்கிய நானும், என் அண்ணனும், ஆட்டுக்குட்டி அருகில் வ‌ந்தாலே, "ஐயே.ட‌ர்ட்டி"என‌ என‌ வில‌கி ஓடும் எங்க‌ள் வீட்டு ம‌ழலையைக் க‌ண்டு வாய‌டைத்துப் போய்த்தான் இருக்கிறோம்.

எங்களுக்காவது, விவசாய பாரம்பரியத்தை நினைத்துப் பார்க்க பனிப்புகை படர்ந்து சில பொங்கல் தினங்கள் நினைவிடுக்கில் தேங்கியிருக்கிறது. அடுத்த தலைமுறைக்கு விவ‌சாய‌மும், விவசாயம் சார்ந்த பண்டிகைகளும் என்றாலே பேஸ்புக் ஃபார்ம்வில்லே தான் நினைவுக்கு வ‌ருமோ?. கூடவே பொங்கல் சோறும் கணினியிலோ கிடைக்க விஞ்ஞானம் ஏதாவது செய்யுமா?

.