கற்கை நன்றே

Saturday, August 28, 2010
இன்றைய நாளில் படிக்கும் மாணவர்களுக்கான கவனிப்புகளும் அறிவுரைகளும் தாராளமாகக் கிடைக்கிறது. அவற்றில் முக்கியமான சிலர் சொல்வது "அதிகாலையில் படித்தால் மனதில் நன்றாகப் பதியும்".
இத்தகைய எண்ணத்தில் பல வீடுகளில் காலை நேரத்தில் மாணவர்களை படிக்கவைப்பதற்காக பெற்றோர் பலவழிகளையும் கையாள்கிறார்கள்.
ஆனால் இது எல்லா மாணவர்களுக்கும் பொருந்துமா எனக் கேட்டால் இல்லை என்பதே மருத்துவர்களின் பதில்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பயோகிளாக் எனப்படும் உயிரியல் கடிகாரம் இயங்குகிறது.மனிதன் பிறந்த நொடி முதல் அவனது அக புற காரணிகளைக் கொண்டு மனிதனின் மனநிலை,உடல்நிலை போன்றவற்றை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கும் இக்கடிகாரம் சில மனிதர்களை அதிகாலையிலும்,சிலரை பின்னிரவிலும் அல்லது முன்னிரவிலும் உற்சாகமாக வைத்திருக்கிறது. அப்படிப்பட்ட உற்சாக மனநிலையில் இருக்கும்போது மனிதனின் செயல்திறனும் கற்கும் திறனும் மிக அதிகமாக இருக்கும். அதனால் பெற்றோர்களே,ஆசிரியர்களே அதிகாலையில் படிப்பது மட்டுமே நன்மை என்னும் கட்டாயத்தை விடுத்து மாணவனின் வசதிக்கு ஏற்ப படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொடுங்கள்.படிக்கும் நேரத்தை முடிவு செய்ய‌ அவ‌ன‌து க‌ற்கும் திற‌னை பல்வேறு நேரங்களிலும் சோதித்து சிறப்பாக கற்கும் நேரத்தைத் வ‌ழ‌க்கமாக்கிக்கொள்ளுங்க‌ள்.

ம‌ற்றுமொரு க‌ற்ற‌ல் தொட‌ர்பான‌ ச‌ர்ச்சைக்குரிய‌ அறிவுரை.கேள்விக‌ளுக்கான விடைக‌ளை எழுதிப் பார்த்த‌ல்.சில‌ ப‌ள்ளிக‌ளில் எழுதுவ‌து ம‌ட்டுமே மாண‌வ‌ர்க‌ளின் க‌ட‌மையாக‌ சொல்ல‌ப்ப‌டுகிறது. தேர்வில் ப‌தில் எளிதாக‌ எழுதுவ‌த‌ற்கு எழுதிப் பார்த்த‌ல் ம‌ட்டுமே தேவை என்கிறார்க‌ள்.ஒரு முறை எழுதிப் பார்ப்பது சரியானதுதான். ஆனால் எழுதுவ‌து ம‌ட்டுமே ப‌ள்ளியில் ப‌ழ‌கும் மாண‌வ‌ன் பேச்சுத் திற‌ன் க‌ட்டாய‌மாக‌ பாதிக்க‌ப்ப‌டுகிற‌து.எந்த‌ ஒரு விஷய‌த்தையும் அவ‌ன‌து சொந்த‌ சொற்க‌ளால் கோர்வையாக‌ சொல்ல‌த் தெரிவ‌தில்லை. க‌ம்யூனிகேஷ‌ன் ஸ்கில்ஸ் என‌ப்ப‌டும் ம‌ற்ற‌வ‌ரோடு தொட‌ர்பு கொள்ளும் திற‌னில் மிக‌வும் பின்த‌ங்குகிறான்.
இதைத் த‌விர்க்க‌ உங்க‌ள் குழ‌ந்தைக‌ளோடு நீங்க‌ள் அம‌ருங்கள். அவ‌ர்க‌ள் ஒரு ப‌க்க‌ம் ப‌டிக்கிறார்க‌ள் என்றால் அதில் என்ன‌ ப‌டித்தார்க‌ள் என்ப‌தை உங்க‌ளிட‌ம் சொல்ல‌ச் சொல்லுங்க‌ள்.சொல்லுத‌ல் என்பது ம‌ன‌ப்பாட‌ம் செய்து ஒப்பித்தலைப் போல‌ அல்லாம‌ல் விவாதிப்ப‌தைப் போல‌வே அல்ல‌து உங்களுக்கு அவ‌ர்க‌ள் ப‌டித்த‌தை விள‌க்குவ‌து போல‌வோ இருக்க‌ட்டும்.

இவை இர‌ண்டையும் க‌டைப்பிடிக்கும் மாண‌வ‌ர்க‌ள்,சிற‌ந்த‌ ம‌திப்பெண்க‌ளைப் பெறுவ‌தோடு ம‌ட்டும‌ல்லாம‌ல் பாட‌ம் த‌விர்த்த‌ பொது திற‌ன்க‌ளிலும் சிற‌ந்து விள‌ங்குவார்க‌ள் என‌ப‌து ப‌ல‌ ம‌ன‌விய‌ல் அறிஞர்க‌ளின் க‌ருத்து.


.

ரவுத்திரம் பழகாவிடில்???

Tuesday, August 24, 2010
சில காலமாக எழுத்தார்வத்துக்கு அணை போட்டு வைத்திருந்தேன்.. அண்மையில் நான் சந்தித்த நிகழ்வொன்று கண்டிப்பாய் யாருடனும் பகிர்ந்தே ஆகவேண்டும் என்னும் உந்துதலை எற்படுத்தி விட்டதால் பதிவிடுதலைத் தொடர்கிறேன்.
பெண்கள் வாழ்வில் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சினை பொது இடங்களில் கண்ணியமான உருவத்துடன் உலவும் சில சில்மிஷ சில்வண்டுகள்.அத்தகைய அல்ப சில்மிஷங்கள் ஆண்களுக்கு சில நிமிட பொழுது போக்காகத் தோன்றினாலும்,அதில் பாதிக்கப்படும் அப்பாவிப் பெண்களின் வாழ்க்கையையே கேள்விக் குறியாக்கிவிடுகிறது.
அத்தகைய ஒரு நிகழ்வு.
சில நாட்களுக்கு முன் ஒரு கல்லூரியில் தொடங்கிய‌ முதலாண்டு வகுப்புகளுக்கு பட்டாம்பூச்சிகளாய் சிறகடித்து வந்த மாணவிகளுள் ஒருத்தியை பற்றித்தான் நான் கூறப்போகிறேன்.
செல்வி என்னும் மாணவி மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒரு மலைகிராமத்தில் இருந்து தன் கடும் முயற்சியில் படித்து பொறியியல் படிப்புக்கான இடம் பெற்றாள்.கல்லூரிப் படிப்புக்கான பணம் கூட கட்டமுடியாமல்,கல்லூரித் தாளாளாரின் சிறப்பு ஒதுக்கீட்டில், கட்டணச் சலுகை பெற்ற மாணவி. தான் எதையாவது சாதிக்க வேண்டும் என்னும் உத்வேகம் நிரம்பப் பெற்றிருந்தாள்.கல்லூரியில் தன் அப்பாவித்தனத்தால் அனைத்து ஆசிரியர்களின் கவனத்தையும் ஈர்த்திருந்தாள்.
நகரத்தின் நரகங்கள் ஏதுமறியாக் குழந்தையாகவே இருந்த அவளுக்கு ஊரைச் சுற்றிக்காட்ட,அவளது தோழிகள் அழைத்துப் போயிருக்கிறார்கள். பேருந்தில் அவளுக்குப் பின் நின்றிருந்த ஏதோ ஒரு மிருகத்தில் கேவலமான சில்மிஷச் சீண்டலால் பயந்து போன செல்வி,மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறள் .ஆண்கள் அனைவரும் மோசம் என்னும் எண்ணம் அச்சிறுமியின் மனதில் பதிந்திவிட்டது.ஆண் ஆசிரியர்களைக் கூட அவளால் இயல்பாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.அதன் விளைவு அவள் படிப்புக்கு விழுந்த்து முட்டுக்கட்டை.படிப்பை விடுத்து தன் வீடு திரும்பிய மாணவியை கிராமத்துப் பெற்றோர் கட்டாயப்படுத்தியதன் விளைவு.அவளது மரணம்.ஆம்..அவள் தன் உயிரை மாய்த்துக் கொண்டாள்.

ஒரு வளரும் பயிரின் வாழ்வு முளையிலேயே கிள்ளி எறியப்பட்டதற்குக் காரணமானவனுக்கு என்ன தண்டனை கிடைக்கப்போகிறது.இத்தகைய மனிகர்களுக்கு மனசாட்சி என்பதே கிடையாதா? தனது ஏதோ ஒரு உணர்ச்சித் தூண்டலுக்குப் பலியாக்கப்படும் அப்பாவிப் பெண்களைப் பற்றி இவர்கள் என்னதான் நினைத்துக் கொண்டிருப்பார்கள்? பெண்கள் எல்லாம் இவர்களால் ஆட்டுவிக்கப்பட படைக்கப்பட்ட பொம்மைகள் என்றா?
"ரவுத்திரம் பழகா"விடில் பெண்கள் வாழ முடியாதா?

.