ஒரே ஒரு லிட்டர் - ப்ளீஸ்

Monday, March 29, 2010
அடுத்த‌ த‌லைமுறைக்கு சொத்து சேர்க்கும் அவ‌ச‌ரத்தில் இருக்கும் நாம், கையிலிருக்கும் விலைமதிக்கமுடியாத இயற்கைச் செல்வம் மிக வேகமாகக் கரைவதை உணர்ந்தாலும், நடைமுறைச் சிக்கல்கல்க‌ளில் சிக்கிக் கொண்டு அதைக் காக்கும் செய‌ல்க‌ளைக் கோட்டை விடுகிறோம்.ஏதாவ‌து செய்ய‌ வேண்டும் என்னும் எண்ண‌ம் எல்லார் ம‌ன‌திலும் இருக்கிற‌து. ஆனால் செய‌ல் வ‌டிவ‌ம் பெறுவ‌தில்தான் கற்கள் பாறைக‌ளாக‌ இருக்கின்ற‌ன‌.மிக முக்கிய , அவசர, அத்தியாவசிய கவனம் செலுத்தப்படவேண்டியது நீரின் முறையான உபயோகம் மற்றும் சேமிப்பு.

இதோ அதோன்னு பயந்திட்டு இருந்த வெயில் காலம் வந்தே விட்டது.வெயிலின் கொடுமை சில ஆண்டுகளாக ஏறுமுகமாகவே இருக்கிறது. இந்த ஆண்டு வழக்கத்திற்கும் அதிகமாக மார்ச் மாத துவக்கதிலிருந்தே தாங்க முடியாத அனலடிக்கிறது என்பது கண்கூடான உண்மை.இதன் தொடர்ச்சியாக நம் வெகு அருகில் நிற்பது கடும் தண்ணீர் பிரச்சினை.மழை என்பது மருந்துக்கும் பெய்யாத இதே நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் தண்ணீரின் நிலையும் பெட்ரோல், டீசல் போன்ற ஒரு அதிக விலை கேட்கும் பொருளாக மாறும் என்பது திண்ணம்.இந்நிலையில் நம் தண்ணீர் தேவைகளை சுருக்கிக் கொள்வதென்பது அத்தியாவசிய அவசியமாகும்.

நாம் சேமிக்கும் ஒவ்வொரு நீர்த்துளியும் அவ‌சிய‌மான‌து. ஒரு நாளுக்கு ஒருவ‌ர் ஒரு லிட்ட‌ர் த‌ண்ணீரைச் சேமிக்கிறார் எனில்,ச‌ராசியாக ஒரு குடும்ப‌த்தில் ஒரு நாளில் சேமிக்க‌ப்ப‌டுவ‌து 4 லிட்ட‌ர்.ஒரு மாத‌த்தில் சேமிக்க‌ப்ப‌டுவ‌து 120லிட்ட‌ர்.ஒரு ஊரில் 10,000 குடும்ப‌‌ங்க‌ள் உள்ள‌தெனில் ஒரு மாதத்தில் அவ்வூரில் சேமிக்க‌ப்ப‌டும் நீரின் அள‌வு 12லட்சம் லிட்டர்கள்.

ஒரு நாளுக்கு ஒரு லிட்டர் நீரைச் சேமிப்பதென்பது ஒன்றும் பெரிய விஷயமாக எனக்குத் தோன்றவில்லை. அதே ஒரு லிட்டர் நீர் ஒரு குறிப்பிடத்தகுந்த பாசிடிவ் விளைவை கண்டிப்பாய் ஏற்படுத்தும். முகம் கழுவ உபயோகிக்கும் நீரில் சிறிதளவைக் குறைப்பதாலோ,குளிக்கும் நீரில் ஓரிரு மக்(mug) நீரைக் குறைப்பதாலோ நம் ஆரோக்கியமும் அழகும் எவ்விதத்திலும் குறையப் போவதில்லை.

நீரை உபயோகிக்கும் எல்லா இடங்களிலும் டேப் திறந்து விட்டு நேரடியாக உபயோகிப்பதை காட்டிலும்,ஏதேனும் ஒரு பாத்திரத்தில் இருக்கும் நீரை எடுத்து உபயோகிக்கும்போதும் சிறிது நீர் உபயோகம் குறையும்.
இதைப்போலப் பலவழிகள் இருக்கலாம். பின்னூட்டதில் சொல்லுங்கள்.மறக்காமல் செயல்படுத்துங்கள்


முடிவெடுங்க‌ள்.. செய‌ல்ப‌டுத்துங்க‌ள்.. கால‌ம் வெகு வேகமாய்க் க‌ட‌ந்து கொண்டிருக்கிற‌து

மனதில் மலர்ந்தவை 22/03/2010

Saturday, March 20, 2010
சில நாட்களுக்கு முன், நண்பரொருவரின் அலுவலகத்தைத் தேடி அலைந்து கொண்டிருந்தேன்.அவர் சரியான வழியைச் சொன்னாலும், புது ஏரியால விட்டா கண்ணைக் கட்டி, காட்டில விட்ட மாதிரி முழிக்கும் என் பழக்கத்தால்,சற்று சுத்தி சுத்தி அலுவகலத்தைக் கண்டுபிடித்தேன். நகரின் மையப் பகுதியில்,குடியிருப்புகளுக்கு அருகிலிருக்கும் அந்த ஏரியாவில் ஒரு மது பானக்கடை. திரும்ப வரும்போது ஒரு விஷயத்தை கவனித்தேன்.சில கிலோமீட்டர் தொலைவுக்குள்ளாகவே ஏறத்தாழ 7,8 கடைகள். அனைத்தும் குடியிருப்பை ஒட்டிய பகுதிகளே..

மதுபானக்கடைகள் பள்ளி,வழிபாட்டுத்தலம்,குடியிருப்பு போன்ற பகுதிகளுக்கு அருகில் இருக்க கூடாது என்னும் விதிமுறை இன்னும் சட்டத்தில் இருக்கிறதா மக்களே?
*******************************************************************
இன்றைய சமூக நிலையில், கல்லூரியில் மாணவர், ஆசிரியர் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய வேறுபட்ட கருத்துகள் ஆசிரியர்களிடையே நிலவி வ்ருகிறது.
மாணவன் ஆசிரியரை நண்பனாகப் பார்த்தால் போதும் என்கிறது ஒரு தரப்பு.
ந்ட்பு ரீதியிலான அணுகு முறை எல்லாம் பயன்தராது. மாணவன் ஆசிரியரிடையே டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் செய்வது அவசியம் என்கிறது மற்றொரு தரப்பு.. எது சரியாக இருக்கும்.கொஞ்சம் சொல்லுங்க மக்களே
****************************************************************
விபத்துகள் அடிக்கடி நிகழும் நிகழ்வாக மாறிவிட்டன.அதைப் பற்றிப் பேசும்போது, பலர் சொல்வது " இந்தப் பிரைவேட் பஸ்காரங்க பஸ் ஓட்டற லட்சணத்தால தான் இப்பிடி நடக்குது" கண்ணு மண்ணு தெரியதா ஸ்பீடுல‌ ஓட்டறாங்க. ஆனால் இப்பிடிக் குறை சொல்லும் பலர் பயணத்திற்குத் தேர்ந்தெடுப்பது, மிக அதிக வேகத்தில் செல்லும் பிரைவேட் பஸ்களையே". அப்போ உங்களுக்காகதானே மக்களே .. பஸ்காரங்க வேகமா போறாங்க. அவங்களை மட்டும் ஏன் திட்டறீங்க?
**********************************************************************

என்+(அவ)னிடம் ஒரு கேள்வி

Tuesday, March 16, 2010



நீ பார்க்க மாட்டாய் என்றாலும்
உனக்குப் பிடித்த ஆடைகளையே
தேர்வு செய்யும் என் கரங்களுக்கும்,


நீ அழைக்கமாட்டாய் எனத் தெரிந்தும்
அடிக்கடி அலைபேசியை
நோக்கும் என் கண்களுக்கும்,


நீ பேசும் சில வார்த்தைகளையும்
நிரப்பி பூட்டிக் கொள்ள
முயலும் என் செவிகளுக்கும்


உன்னைத் தெரியாதவர் எனத்தெரிந்தும்
அவரிடமும் உன்னைப் பற்றியே
பேசும் என் இதழ்களுக்கும்


கடிவாளம் போட நீ வரும் நாள் எப்போது:-)






டிஸ்கி: (மக்களே.. கவிதை எழுதினா அனுபவிக்கணும்..ஆராய்ஞ்சி போட்டு குடுக்க பிளான் போடறது நெம்ப தப்பு)




.

காம்ப்ரமைஸ்

Sunday, March 14, 2010
"காம்ப்ரமைஸ் செய்து கொள்" என்பதும் "அட்ஜஸ்ட் பண்ணித்தான் ஆகணும்" என்பதுமான வாக்கியங்களை இதுவரை உங்கள் வாழ்வில் இது வரை சந்திக்கவில்லையென்றால் நீங்கள் தான் உலகின் மிகப் பெரும் அதிர்ஷ்டசாலி


நம் வாழ்வில் ஒவ்வொரு நொடியிலும் காம்ப்ரமைஸ் என்பது அவசியமாகிறது.பல நேரங்களில் இந்த காம்ப்ரமைஸ் என்னும் வாக்கியம்தான் நம்மை வாழ வைக்கிறது என்பதும் உண்மை. ஆனாலும் இந்தக் காம்ப்ரமைஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க வாழ்வின் மீதான நம்பிக்கையும் ஆர்வமும் நிலைகுலைய ஆரம்பிக்கிறது.சில நேரங்களில் ஒரு சிறு துளை கிடைத்தாலும் ஆத்திரமாய் பீறிட்டுக் கிளாம்பிவிடுகிறது


அதற்கு நிதர்சன உதாரணமாக அண்மையில் ஒரு நிகழ்வைக் கண்டேன்.
என் நெருங்கிய தோழி ஒருத்தி,மிகவும் பயந்த சுபாவமுடையவள்.அதிகம் பேசக் கூடமாட்டாள்.சிறிது காலமாக அவளது குடும்பத்திலும் அலுவலகத்திலும், பலப் பல பிரச்சினைகள் அவளைப் போட்டு அழுத்திக் கொண்டிருந்தது. நாங்களும் பெரிய அட்வைஸ் மன்னிகளாகி, " காம்ப்ரமைஸ்" என்பதையே போதித்துக் கொண்டிருந்தோம்.அவள் மனதிற்குள் கோபக்கங்குகள் கனன்று கொண்டிருந்தது.இந்நிலையில் பஸ்ஸில் நானும் அவளும் பயணிக்கையில், ஒரு நாள் கண்டக்டர் 2 ரூபாய் மீதி தரவேண்டிய நிலையில்,3 ரூபா இருந்தா குடுங்க.5 ரூபா தர்றேன்.இல்லன்னா நாளைக்கு டிக்கெட் வாங்கும்போது அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் என்றார்.( அது தினம் போகும் பஸ்).அவ்ளோதான்.என் தோழிக்கு எப்படி அப்படி ஒரு கோபம் வந்திச்சின்னு தெரியல. கண்டக்டரப் பிடிச்சி லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டுட்டா.நிஜமாய் அவள் கோபத்திற்கான காரணம் எனக்கு அப்போ புரியல.
பின்னர் அவளிடம் சமாதனமாய் பேசும்போது அவள் சொன்ன வார்த்தைகள்"எங்க எங்கதான் அட்ஜஸ்ட் பண்றது? யாருமே நமக்காக அட்ஜஸ்ட் பண்றதில்ல. நாமளே அட்ஜஸ்ட் பண்ணி சுயத்தையே இழந்துடுவோல் போல இருக்கு".
அவள் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் சத்தியமான உண்மைகளாகவே தோன்றியது எனக்கு. பின் அதைப் பற்றி வேறொரு நிகழ்வில் ஒரு மனோத்தத்துவ நிபுணரிடம் பேசிய போது அவர் சொன்னது " இந்நிலைக்கு முக்கிய காரணம் "நோ" சொல்ல வேண்டிய‌ நேரங்களில் "யெஸ்" சொல்வதும்,"யெஸ்" சொல்ல வேண்டிய‌ நேரங்களில் "நோ" சொல்வதும் மட்டுமே. ஒரு விஷயம் இல்லாமல் வாழ்வது கடினம் என்றோ,அல்லது ஒரு விஷ்யத்துடன் வாழ்வது கடினம் என்றோ நிச்சயமாகத் தோன்றினால் எக்காரணம் கொண்டும் அவ்விஷயங்களில் காம்ப்ரமைஸ் செய்யாதீர்கள்.அப்படிச் செய்தால் எந்நிலையிலும் மன அமைதி கிட்டாது என்றார்.
நீங்க‌ள் ச‌ரியான‌ விஷ‌ய‌ங்க‌ளில் பிடிவாத‌மாய் இருப்ப‌து த‌வ‌றில்லை.அது தான் உங்க‌ள் சுய‌த்தை த‌க்க‌ வைத்துக் கொள்ள‌ ஒரே வ‌ழி என்ப‌தும் அவ‌ர் த‌ரும் செய்தி.
அவ‌ர் சொல்வ‌து ச‌ரியாக‌வே தோன்றுகிறது.ஆனால் அதை ந‌ம்மைச் சுற்றி இருப்ப‌வ‌ர் யாராவ‌து அதைப் போல் பிடிவாத‌ம் பிடித்தால் ஏற்றுக் கொள்ளும் மனோநிலையில் நாம் இருக்கிறோமா என்ப‌து கேள்விக்குறிதானே?

.

மகளிர்தின நன்றிகள்:-)

Sunday, March 7, 2010


எல்லா வருஷமும் போல இந்த வருஷமும் மார்ச் 8 வந்திருச்சி.அதாங்க மகளிர்கான கொண்டாட்ட தினம் "மகளிர் தினம்" வந்தாச்சி.கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் மகளிர் நிலை பெரிதும் முன்னேற்றம் கண்டுள்ளது. இந்நாளில் வாழ்த்துக்களை நமக்குள்ளே பரிமாறிக் கொள்வதுடன், நாம் இத்தகைய நல்ல நிலையை அடைவதில் உறுதுணாயாயிருக்கும் ஆண்களுக்கு நன்றி சொல்லும் வாய்ப்பாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என விழைகிறேன்

வாழ்க்கைல‌ நாம‌ மொத‌ மொத‌ல்ல‌ ச‌ந்திக்க‌ற‌ ஆண் அப்பா.எல்லாப் பொண்ணுகளுக்கும் அப்பான்னா கண்டிப்பா ஒரு சிறப்பான இடம் உண்டு.அப்பாக்கள் தங்கள் பெண் குழந்தைகளை தேவதைகளாகத்தான் பார்க்கிறார்கள்.தங்கள் குழந்தைகள் வளர வளர தங்களையும் நிச்சயமாய் வளர்த்திக் கொள்கிறார்கள்.தங்கள் குழந்தையின் நலனுக்காக எத்தகைய தியாகமும் செய்யத் தயாரானவர்களாகவே எப்போதும் இருக்கிறார்கள்.தங்கள் பெண் குழந்தைகளின் பேச்சு மட்டுமே அவர்களுக்கு வேத வாக்கு.தாய்ப்பாசத்திற்கு சற்றும் குறைந்ததல்ல தந்தைப் பாசம்.


அடுத்து வர்றது அண்ணாக்கள்.
அண்ணாக்க‌ளோட‌ க‌ட‌மை முக்கிய‌த்துவ‌ம் அடைய‌ற‌து, நாம‌ வீட்டை விட்டு வெளில‌ போக‌ ஆர‌ம்பிக்கும்போது தான்...அவ‌ங்க‌ விளையாட‌ப் போனா நாம‌ளும் பின்னாடியே கெள‌ம்புவோம். ந‌ம‌க்கு அந்த‌ ஸ்டேஜ் ல‌ ஃப்ர‌ண்ட்ஸ் யாரும் இருக்க‌ மாட்டாங்க‌.ஸோ அண்ணாவோட‌ ஃப்ர‌ண்ட்ஸ் தான் ந‌ம‌க்கும்.அந்த‌ குரூப்ல‌ நாம‌ தாங்க‌ தேவ‌தை...(ஒரே ச‌ம‌ய‌த்துல‌ அத்த‌னை அண்ணாக்க‌ள் கிடைப்பாங்க‌...) நாம‌ சின்ன‌ பொண்ணா இருக்க‌ற‌தால‌ அவ‌ங்க‌ விளையாட‌ற‌ விளையாட்டெல்லாம் நாம விளையாட‌ முடியாது.அத‌னால ந‌ம‌க்காக‌ அவ‌ங்க‌ விளையாட‌ற‌ விளையாட்டுக‌ளையே ந‌ம‌க்காக‌ மாத்திக்கு வாங்க‌. இந்த‌ ஸ்டேஜ்ல‌ ஆர‌ம்பிக்க‌ற‌ அவ‌ங்க‌ விட்டுக் கொடுத்த‌ல் லைஃப் லாங் க‌ண்டின்யூ ஆகும்.

அடுத்து த‌ம்பி.. நெஜ‌ம்மாவே பாவ‌ம்.சின்ன‌ வ‌ய‌சுல‌ நாம வீட்ல‌ ப‌ண்ற‌ த‌ப்பையெல்லாம் தன் த‌லைல‌ போட்டுக்க‌ற‌ ஜீவ‌ன்.அப்போ அவ‌ன் ந‌ம்மால வாங்க‌ ஆர‌ம்பிக்க‌ற‌ திட்டு எப்போ முடியுதுன்னு க‌ட‌வுளுக்குத் தாங்க‌ தெரியும். அவ‌னை நாம‌ தான் சின்ன‌ பைய‌ன்னு ம‌திக்க‌ற‌தில்லைன்னு பார்த்தா.. ந‌ம்ம‌ குழ‌ந்தைக‌ளும் அதே மாதிரி தான் ட்ரீட் ப‌ண்ணும்.ந‌ம்ம‌ கிட்ட‌ ம‌ட்டுமில்லாம ந‌ம்ம‌ அடுத்த‌ த‌லைமுறை கிட்ட‌யும் அட்ஜெஸ்ட் பண்ணிக்கற தேவை த‌ம்பிங்களுக்கு உண்டு

இது ம‌ட்டுமில்லாம‌ வெளி உல‌கில் நாம் ச‌ந்திக்க‌ற‌ ப‌ல‌ பிர‌ச்சினைக‌ளுக்கு தீர்வு சொல்றதும், சில இடங்களில் தீர்வு காண்ற‌தும் ச‌கோத‌ர‌ர்க‌ள் தான்.


அப்புற‌ம் தோழ‌ர்க‌ள்..அவங்க‌ளைப் ப‌த்தி சொல்லிகிட்டே போக‌லாம்..சுருக்க‌மா சொன்னா ..யாதுமாகி நிற்ப‌வ‌ர்க‌ள்.. நாம் இழுக்கும் இழுப்புக்கெல்லாம் இழுப‌ட்டு,த‌ட்டுத் த‌டுமாறினாலும்.புன்ன‌கை மாறாத‌வ‌ர்க‌ள்.தேவையான நேரங்களில் தேவையான அவதாரம் எடுப்பவர்கள்.

அப்புறம் வருவாருங்க ஒருத்தரு கணவர்கிற பேர்ல‌,நாம‌ ச‌மைய‌ல் க‌த்துக்கற‌துல‌ ஆர‌ம்பிச்சி.. ந‌ம்ம‌ பொண்ணுங்க‌ ச‌மைய‌ல் க‌த்துக்க‌ற‌து வ‌ரைக்கும் எல்லாத்துக்கும்
டெஸ்ட் பீஸாய் இருந்து நாம் திரும‌ண‌ம் என்ற‌ பெய‌ரில் பிரியும் த‌ந்தையாய் த‌மைய‌னாய் தோழனாய் அனைத்து அவ‌தார‌மும் எடுத்து ந‌ம்மை ம‌கிழ்விப்ப‌வ‌ர்க‌ள்.

அடுத்து ம‌க‌ன் என்னும் பொக்கிஷ‌ம்.அனைத்து ம‌க‌ன்க‌ளுக்கும் பெண்க‌ளின் அள‌வுகோல் த‌ன் தாய்..அம்மா செய்வ‌து அனைத்தும் ம‌க‌ன்க‌ளுக்கு ச‌ரியாய் தான்ப‌டும். தாயை தெய்வ‌த்துக்கு நிக‌ரான நிலையில் தான் ம‌க‌ன்க‌ள் எப்ப‌வும் வ‌ச்சிருப்பாங்க‌.

நான் எழுதி இருக்க‌ற‌து ஆண்க‌ளோட‌ விட்டுக்கொடுத்த‌ல்ல‌ ரொம்ப‌ கொஞ்ச‌ம் தான்.
ஆண்க‌ளின் குட்டி தேவ‌தையாய் உல‌கினுள் நுழையும் நாம் தெய்வ‌த்துக்கு நிக‌ரான‌ நிலைவ‌ரை உய‌ர்த்த‌ப்ப‌டுவ‌து ஆண்க‌ளால் தான்..இந்த‌ மாதிரி எல்லா நிலைக‌ளிலும் ந‌ம‌க்காக‌வே வாழும் ஆண்க‌ளுக்கு ந‌ன்றி சொல்வோம் இந்ந‌ன்னாளில்.


ஆண்களே! மகளிர்தின நன்றிகள்


(இது ஒரு மாற்றம் செய்யப்பட்ட மீள்பதிவு).

என்டர் தட்டிய வரிகள் சில‌

Friday, March 5, 2010
வீடு

இல்லாதோர்க்கு வாழ்க்கைக் கனவு
இருப்போர்க்கு வாழ்க்கைக் கடன்


க‌ல்வி

கிடைக்காதோர்க்கு அரிய‌ வ‌ர‌ம்
கிடைத்தோர் ம‌ன‌தில் அழுத்தும் பார‌ம்


உற‌வுக‌ள்

எல்லை மீறினால் அன்புத் தொல்லை
எல்லைக்குள் இருந்தால் அன்பே இல்லை


திரும‌ண‌ம்

எக்கரையில் நிற்பினும் எதிர்க்க‌ரையை
ப‌ச்சையாகத் தோன்ற‌வைக்கும் மாயாஜால‌ம்


வறுமை

அடுத்த வேளை உணவுக்கு பசியில்லாத‌தல்ல‌
அடுத்த வேளை பசிக்கு உணவில்லாதது

.

பதின்மப் பக்கங்கள்

Monday, March 1, 2010


கடந்த நாட்களின் டைரியை புரட்டிப் பார்ப்பதென்பது எப்போது கண்களில் நீர் வரவைக்கக் கூடியதாகவே இருக்கிறது.அது நெகிழ்ச்சியால் வருவதாகதோ அல்லது நாம் இழந்து மறந்திருந்தவற்றை நினைவூட்டுவதாலோ இருக்கலாம்.அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பைத் தந்த கண்ணகி அவர்களுக்கு நன்றிகள் பல.

பதின்மங்கள் மனதின் பசுமரத்தாணிகள்..
என் வாழ்வில் அவற்றின் தொடக்கப் பக்கங்கள், எதிலும் முதல் இடத்திலேயே இருக்க வேண்டும் என்ற வெறியைக் கொண்டே இருந்திருக்கின்றன. நான் பள்ளிக்குப் போகாத ஒரு நாளில் என் வகுப்பில் அறிவிக்காமல்,ஒரு கட்டுரைப் போட்டி நடந்து விட்டது என்பதை அறிந்து ஆசிரியரிடம் அடம்பிடித்து அடுத்த நாளில் அப்போட்டியில் கலந்து கொண்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் வெற்றி மீதான என் வெறியை.

அந்நாட்களில் வாழ்ந்த்து கிராமத்தில் தான் என்றாலும் என் எல்லை
எங்கள் வீட்டு காம்பவுண்ட் சுவரோடே முடிந்திருந்தது.பொங்கலுக்கு தோட்டத்துக்குப் போவதைத் தவிர அக்கிராமத்தில் என்னை அவ்வயதில் ஏதும் ஈர்க்கவில்லை. அக்காக்களுக்கும், அண்ணாக்களுக்கும் இடையிலேயே இருந்ததால்பெரிதாய் நட்புகளும் கிடைக்கவில்லை. நீட்டப்பட்ட சில நட்புக் கரங்களையும் நான் மறுதலித்த உண்மை சுடுகிறது இப்போது.


சில ஆண்டுகளில் நகர்ந்தது வாழ்க்கை குவார்ட்டர்ஸ்க்கு.அருமையான நிலாக் காலங்கள் அவை.ஒரு பகுதியில் இருக்கும் அனைத்து பிள்ளைகளும் ஒரு தாய் மக்களாய் உணர்ந்த நாட்கள்.அனைத்து அப்பாக்களும்,அம்மாக்களும் சகோதர பாசத்துடன் சுற்றி வந்த வேளைகள். என்னைப் பற்றி மட்டுமே எப்போதும் எண்ணிக் கொண்டிருந்த எனக்கு மற்றவரும் மனிதர்தான்,அவர்களுக்கும் கஷ்டங்கள் உண்டு என உணர்த்திய இடம் அது. பாலுக்கு சர்க்கரை இல்லாததுதான் வாழ்வின் மிகக் கொடுமை என நினைத்துக் கொண்டிருந்த எனக்கு, கூழே கிடைக்காதவர்களும் இவ்வுலகில் இருக்கிறார்கள் என்ற ஞானத்தை தந்த போதிமரம் அது.சிறுவர்களாலும் சாதிக்க முடியும் என உணர்த்திய நாட்கள் அவை.

ரக் ஷா எனும் எங்கள் சிறுவர் அமைப்பைத் தோற்றுவித்து அப்பகுதியில் பலப்பல செயல்களைச் செய்து கொண்டிருந்தோம். அந்நாட்களில் மார்கழி மாதக் காலைகள் அதிகாலை 3 மணிக்கே விடியும்.அங்கிருந்த ராமர் கோயில் அர்ச்சகருக்குத் தெரியும் முதல் பூஜைக்கே நாங்கள் அனைவரும் ஆஜராவோம் என்று.பிரசாதம் தயாரிப்பு முதல் அதைக் காலி செய்வது வரை அனைத்திலும் முண்ணனி நாங்கள் தான்.வீதி அடைக்கும் கோலமிடுவதும்,பொங்கல் நாட்களில் அம்மாக்களிடம் அடம் பிடித்து வீதியில் பொங்கல் வைக்க சொல்வது என ஆன்மீகத்திலும் குறை வைக்கவில்லை நாங்கள்.


தோட்டம் சூழ்ந்த வீடுகள் அவை.அனைத்து வீட்டுத் தோட்டப் பாராமரிப்பும் எங்கள் கையில் தான்.ஒவ்வொரு வாரமும் ஒரு வீட்டுத் தோட்டம் எனப் பாரமரிப்பு நடக்கும்.அந்நாட்களில் நாங்கள் பார்த்த பாம்புகள்,பல்லிகளின் எண்ணிக்கை இன்றும் எண்ணி முடியாது.எங்கள் அமைப்பின் முக்கியச் செயல்களில் இன்றும் மனதில் நிற்பது மரம் நடுதலும்,வயதான ஆதரவற்றவர்களுக்கு உதவுதலும்.சில சமயங்களில்,அப்பா அம்மாக்களின் புது உடைகளும் ஆதரவற்ற வயதானவர்களுக்குத் தாரை வார்க்கப்படும்.

அப்பகுதியில் நாங்கள் ஒவ்வொருவரும் விளையாட்டாய் நட்டுப் பெயரிட்ட‌ மரங்களை பார்க்கையில் கண்ணீரோடு நிழலாடுகிறது பள்ளியிறுதியில் நாங்கள் இழந்த நண்பன் செந்தாமரை செல்வனின் முகமும்,சில ஆண்டுகளுக்கு முன் ஒரு துரதிஷ்ட நாளில் இழந்த நண்பன் பாண்டியனின் முகமும்.

பதின்மங்களின் இறுதியில் எங்கள் நண்பர் குழாமில் ஏறத்தாழ அனைவருக்கும் மேற்கல்விக்காக வெளியூர் பயணப்பட வேண்டிய தேவையும்,சில அப்பாக்களுக்கு பணி மாறுத‌லும் வர, நனவுகளாயிருந்த எங்கள் நாட்களைக் கன‌வுகளாக்கி மனதினுள் பூட்டி கால வண்டியில் பயணத்தை தொடங்கிவிட்டோம்.

.