நானும் நிலாவும் உலக சிக்கன் தினமும்

Wednesday, October 31, 2018
ஆன்ட்டி நாளைக்கு(oct 30) world chicken day. எனக்கு நாளைக்கு ஃபுல்டே  chicken fried rice, fried chicken..manchurian.   இன்னும் என்னல்லாம் வெரைட்டி உங்களுக்குத் தெரியுமோ அதெல்லாம் வேணும். சமைச்சு வைஙக.. இல்லைனா ஹோட்டல்ல வாங்கியாவது வைங்க.

என்னது chicken day வா? டேய் நிலா குட்டி நில்லு. யார்  உன்கிட்ட  அப்படி சொன்னாங்க?

போய் நியூஸ் பேப்பரைப் பாருங்க... உலக சிக்கன் தினம் oct 30னு நம்ம CM சொல்லியிருக்காரு.

அம்மா...தாயே...மகராசி... அது chicken தினம் இல்லை.. உலக சிக்கன தினம்.

சிக்கன தினமா! அப்படின்னா??

அப்படின்னா world thrift day.
ஓ... theft day va...

ஷ்ஷ்ப்பா..அது theft இல்லடி... thrift...
World savings day.
சிக்கனமா செலவு பண்ணணும்கிறத குறிக்கறதுக்குத்தான் இந்த நாள்.அதன் மூலமா savings அதிகமாகும்.
1924 oct 31ம் தேதி இத்தாலி, milano ல நடந்த வங்கிகளின் உலக மாநாட்டுல இந்த மாதிரி ஒரு தினம் கடைப்பிடிக்கணும்னு Fillipo Raviza ங்கற பங்கேற்பாளரோட எண்ணம் தான் இந்த தினமா உருவெடுத்தது.

அததை 30ஆ, 31 ஆ ஒழுங்கா சொல்லுங்க.

31 ல தான் ஆரம்பிச்சாங்க. சேமிப்புக்கு முக்கியம் பேங்க்.அந்த நாள் விடுமுறையா இருக்க சில நாடுகள் 30ம் தேதியே கொண்டாடினாங்க. இந்தியால 1984ம் வருஷம் oct 31 இந்திரா காநதி சுடப்பட்டதால நாம oct 30க்கு மாறிட்டோம்.

எதுக்கத்த கஞ்சத்தனமா இருக்கணும்.அப்பா நாம ஜாலியா இருக்கறதுக்குத்தானே சம்பாதிக்கறாங்க?

சிக்கனம் வேற... கஞ்சத்தனம் வேறடா குட்டி..

உன்க்கு ஆசையா இருக்குனு ஒரு டெய்ரிமில்க் மட்டும் வாங்கறது சிக்கனம்.அதுவே காசு மிச்சம் பிடிக்கறேன்னு உனக்கு வாங்கியே குடுக்காம விடறது கஞ்சத்தனம். ஒரே நேரத்துல 3, 4 வாங்கி சாப்பாட்டுககு பதிலா அதையே சாப்டும் தீராம ... பல வாரமா...ப்ரிட்ஜ்ல போட்டு வச்சிருக்கியே அது ஊதாரித்தனம்.
திருவள்ளுவர் கூட " ஆகாறு அளவிட்டிதாயினும் கேடில்லை, போகாறு அகலாக்கடை" அதாவது எவ்வளோ கம்மியா சம்பாதிச்சாலும் செலவு ஊதாரித்தனமா பண்ணாம இருந்தா நமக்கு கவலையில்லைனு அப்படினு  சொல்லியிருக்காரு.
எந்த ஒரு செலவையும் செய்யும் முன்னாடி இது அவசியமா? இந்த செலவை செய்யாம தவிர்க்கவோ, இதையே குறைவாவோ பண்ண முடியுமான்னு யோசிச்சி அது படி நடந்துக்கறதுதான் சிக்கனம். இது பணத்துக்கு மட்டுமில்ல... தண்ணீர், பெட்ரோல் இதுக்கெல்லாம் கூட பொருந்தும்.
நாங்கல்லாம் அப்பப்போ குடுக்கற காசை நீ என்ன பண்றே?

Swiggyல ஆர்டர் பண்ணி சாப்பிடுவேன். amazon ல toys வாங்குவேன்.

ம்ம்... அப்போ அந்த காசு உடனே உன் கைய விட்டு போயிடுது.நாங்கல்லாம் ஸ்கூல் படிக்கும்போது சஞ்சாயிகா னு ஒரு ஸ்கீம் இருந்துது. அதுக்குனு இன்சார்ஜ் ஒரு மிஸ் இருப்பாங்க  .அவங்ககிட்ட போயி நம்ம்கிட்ட இருக்க காசெல்லாம் அப்பப்போ குடுத்தம்ன்னா நமக்கு  ஒரு பாஸ்புக் குடுத்து அதுல எனட்ரி போட்டு தருவாங்க. அப்படியே வருசக்கணக்குல சேரத்து வச்சு கடைசில ஆயிரக்கணக்குல கூட பணம் வரும். அந்த வயசுல ஆயிரக்கணக்குல பணம் அக்கவுண்டுல இருக்கறதே ஒரு த்ரில்.

நான் பேங்க்ல child account வச்சிருக்கறனே..அப்படியா ஆன்ட்டி..

ஆமடா.. concept அதேதான். ஆனால் நீ அதுல வச்சிருக்க பணம் எல்லாம் எங்க கழுத்துல கத்திய வச்சி வாங்கறியே..
உன் அக்கவுண்ட்ல பணம் போட நீ சிக்கனமா  இருக்காம, ஐயோ..புள்ள கேப்பாளே, குடுக்கணுமேனு பயந்து நாங்கல்லாம் சிக்கனமா இருக்க வேண்டி இருக்கு.அதனால இனிமே நீ என்ன பண்றேன்னா............

ஒண்ணும் பண்ணல.நோ அட்வைஸ்.....ஸ்கூலுக்கு டைம் ஆச்சு. நானும் சஞ்சாயிகால சேரப் போறேன். அதுக்கு காசு வேணும். உங்க பர்ஸ் எங்க?🤔

டேய்..ஓடாத...நில்லுடா... சஞ்சாயிகாலாம் 2016ல யே ஊத்தி மூடிட்டாங்க.
நீ இதுதான் சான்ஸ்னு என் ப்ர்ஸ்க்கு வெயிட் ரிடக்ஷன் தெரபி பண்ணாம கெளம்பு...

காத்திருப்பு

Saturday, October 20, 2018
அதுவொரு ஆளரவம் குறைந்த அந்தி நேர கடற்கரை.
கவனம் ஈர்க்கும் சுட்டிப் குழந்தையொருத்தி துள்ளித் திரிந்து கொண்டிருந்தாள். அவள் மேல் கொண்ட ஈர்ப்புக்கு காரணம் தேடினேன். அன்று வரையிலுமான என்அன்புக்குரிய குழந்தைகள் அனைவரையும் குழைத்து வார்த்த வார்ப்பாய் ஏனோ வாரி அணைக்கத் தூண்டினாள். அவளின் ஆதி அறியவும் அளவளாவவும் ஆசை கொண்டேன். அவளை நோக்கி நடையை எட்டிவைத்த நொடியில்,அவளைப் பாதுகாக்கும் தொலைவில் , வழிகாட்டும் காப்பாளனாகவோ,விளையாடும் தோழமையாகவோ எந்த ஒரு உருவமும் இல்லாத நிலை சற்றே நிதானிக்க வைத்தது. அவள் தன்  உலகில் ஆழ்ந்து லயித்திருந்தாள். இந்தச் சுட்டிக் குழந்தை யார்? ஒரு வேளை இவள்தான் கதைகளில் வரும் தேவதையோ! கட்டுப்பாடுகள் கொண்ட தன் உலகம் விடுத்து சுதந்திரத்தை சுவாசிக்க வந்திருப்பாளோ!
தேவதைகளுக்குப் பெயர் இருக்குமா? அப்படியானால் இவளுக்கான பெயர் என்னவாக இருக்கும். அதுவரை பொம்மைகளாகவும், திரைப்பதுமைகளாகவும்,செவிவழிக் கதைகளின் நாயகிகளாகவும் கேள்விப்பட்ட பல தேவதைகளின் பெயரை சூட்டிப் பார்த்தேன். எந்தப் பெயரும் திருப்தி அளிக்கவில்லை. சின்ட்ரெல்லா என்னும் ஒன்றைத் தவிர. சின்ட்ரெல்லா எனப் பெயர் சூட்டிய தருணத்தில் அவள் சரியான நேரத்தில் கூடடைவாளா என்னும் உன்மத்த பதட்டம் தொற்றிக் கொண்டது. இப்போது நேரம் என்னவாக இருக்கும்.நேரம்காலமறியாமல் இயற்கையை ரசிக்கும் நோக்கில் மறுதலித்து  வந்த கைகடிகாரத்தைச் சபித்தேன். வேறு எவ்வழியிலாவது நேரத்தை அறிய நினைத்த நொடியில் , மனிதன் படைத்த கடிகார நேரம்; அவளுலகுக்கு பொருந்துமா என்னும் கவலையும் கனம் கூட்டியது. ரசிப்பு வலியாக மாறத் தொடங்கிய கணத்தில், தொலைதூரப் பறவை ஒலி என்னைச் சிறு நொடி திசை திருப்பியது. .கவனம் திருப்பி மீண்டும் பதட்டம் சூடிய கணத்தில் அவள் கண் மறைந்தாள். எங்கே சென்றாய் என் சின்ட்ரெல்லாவே. யாராவது பார்த்தால் சொல்லுங்கள். அவள் தன் சேரிடம் சேர்ந்ததை அறியக் காத்திருக்கிறேன் என்று.

நானும் நிலாவும் கொஞ்சூண்டு சோறும்

Wednesday, October 17, 2018
ஏய்...எவ்வளோ நேரமா தட்டத்துல சாப்பாட்ட வச்சிகிட்டு உக்காந்திருப்ப..சாப்பிடுறியா இல்ல நாலு கன்னத்துல போடவா?

தேவியின் குரல் உச்சஸ்தாயியில் அலறிக் கொண்டிருந்தது. பயணக்களைப்பையும் மீறி உறக்கம் கலைந்து நான் எட்டிப் பார்க்க,

 வாம்மா மின்னல்..உன் செல்லக்குட்டி எவ்ளோ சாப்பாட்ட வேஸ்ட் பண்றா பாரு ஒரு பருக்கை வேஸ்ட் பண்ணினா ஒரு வேளை பட்டினி கிடக்கணும்னு அப்பா சொல்லுவாங்க நெனப்பிருக்கா?

 ம்ம்..சரி சரி டென்சன் ஆகாதே..நிலாகிட்டநான் பேசிக்கறேன்..

 ஆன்ட்டி இங்க வாங்க..இன்னிக்கு அக்டோபர்  16.என்ன ஸ்பெஷல்னு கரெக்டா சொல்லுங்க...நான் சாப்பிடறேன்

. அய்யயோ மாட்னேனா..யாருக்கு பர்த்டேவோ தெரியலையே.விஷ் பண்ண மறந்திட்டேனே.அதுக்கு பனிஷ்மெண்ட்னு சொல்லியே இந்தக் குட்டி தேவையானதெல்லாம் சாதிப்பாளே.

 டேய் குட்டி..சத்தியமா நியாபகம் இல்லைடா.என்னனு நீயே சொலலிடு..

சரி..சொல்றேன்.எனக்கு ஐஸ்கிரீம் வாங்கித் தர்றீங்களா?

 ஹ்ம்ம்ம்..வேற வழி.?.. தர்றேன்..சொல்லு ...

 இன்னிக்கு உலக உணவு தினம் ஆன்ட்டி..

 அட ஆமாம்டா... மறந்தே போயிட்டேன். இந்ததினத்த பத்திஉனக்கு என்ன தெரியும் சொல்லு பாக்கலாம்...

 சொன்னா ஐஸ்கிரீம் கூட டெய்ரிமில்க் கிடைக்குமா.?

 ஏய்...கிரிமினலு...மொதல்ல சொல்லு..சரியா சொல்றியானு பாக்கலாம்


. ம்ம்...ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (UN-FAO) உருவான தினத்த உணவுப் பாதுகாப்பை நோக்கமா கொண்டு 1945 முதல் அனுசரிக்கறாங்க. .இதுக்கு முன்முயற்சிகள்அதிகமா எடுத்தவரு ஹங்கேரியின் அப்போதைய வெளிநாட்டமைச்சர் பால் ரொமானி. நாமெல்லாம் தீம் பர்த்டே கொண்டாடற மாதிரி   1981 லருந்து   அந்தந்த வருஷம் கவனம் செலுத்த வேண்டிய தேவை அடிப்படையில் இந்த தினம்  தீம் வைச்சு கொண்டாடப்படுது.இந்த வருசத்துக்கான தீம்  our actions are our future( நம் செயல்களே நம் எதிர்காலம்)..

 Wow..super da kutty.

 இருங்க இருங்க இன்னும் சொல்றேன். ..உணவுப் பாதுகாப்புனா உணவை பத்திரமா மூடிவைக்கறதுனு நினைச்சுக்காதீங்க..உலக மக்கள் ஒவ்வொருவருக்கும்  பசி வரும்போது தனக்கான உணவு கிடைக்கும்கிற பாதுகாப்பு உணர்வுதான் அது. அத உறுதிப்படுத்த zero hunger campaign  கூட launch பண்ணியிருக்காங்க.

 பார்ரா..இந்த குட்டி மண்டைக்குள்ள இவ்ளோ விஷயம் அடைச்சு வச்சிருக்கே. இந்த தினத்த   food engineers day னு கூட இந்தியால கொண்டாடறாங்க.நம்ம நாட்ல இந்த தினத்தில அடிப்படையா கவனம் செலுத்தறது விவசாயத்துலதான். ஒருங்கிணைந்த விவசாயம் மூலமா கம்மியான மூலப்பொருட்களை வச்சு அதிகமா விளைவிக்கற  produce more with less வழிமுறைகள் வகுத்திருக்காங்க...
சரி..இப்போ சொல்லு...இவ்ளோ விசயம் தெரிஞ்சி வச்சிருக்க அறிவாளிக்குட்டி என்ன பண்ணனும்?

 தட்டில இருக்க சாப்பாட்ட வீணாக்காம சாப்பிடணும்...இத சொல்வீங்கனு தெரிஞ்சிதான் உங்ககிட்ட பேசிகிட்டே சாப்ட்டு முடிச்சிட்டேன்.வாங்க ஐஸ்கிரீம் வாஙக போகலாம்...


 இன்னும் கொஞ்ச நேரம் பயணக்களைப்பு தீர தூஙகியாவது இருக்கலாம்.. என்  பர்ஸாவது தப்பிருக்கும்.

வணக்க்ம

Tuesday, October 16, 2018
வணக்கம். அறிஞ்சவங்க தெரிஞ்சவங்க புரிஞ்சவங்க புரியாதவங்க எல்லாரும் நல்லா இருக்கீங்களா? ரொம்ப நாளா .....மாசமா ....இல்லல்ல.. ரொம்ப வருஷமா பூட்டிக்கிடந்த வீடு திடீர்னு திறந்து நடமாட்டமா இருந்தா 'இதென்ன புதுசா இருக்கு' னு பாககறவங்க விழி விரிவது இயற்கை.அதே சமயம் அந்த வீட்டு சொந்தக்காரங்களுக்கு வீட்டின் ஒவ்வொரு அடியும் ஒரு நினைவைத் தூண்டும்.அவை மகிழவும்,நெகிழவும் வைக்கும்.சூழல் மாற்ற்ங்கள் நம்ம வீடுதானா என சந்தேகப்படவும் வைக்கும்.இந்த இயற்கை அந்த மாதிரிதான் வீட்டை தூசி தட்டிகிட்டிருக்கேன். எனக்கான பொக்கிஷங்களும் கிடைக்கலாம்..அசடு வழிதலும் நடக்கலாம்.எல்லாத்தையும் ஒரு பார்வை பாத்துட்டு இங்கதான் சுத்திகிட்டு இருப்பேன்.அடிக்கடி உரையாடுவோம். அடடே... வா! வா!! னு வரவேற்கறவங்க.. இப்போ எதுக்கு வந்தே? னுமுகத்தை சுருக்கறவங்க... மறுபடியும்  சிக்கிடுச்சுடா ஆடு னு பிரியாணிக்கு பிளான் போடறவங்க, தூரத்துலருந்தே எட்டிப் பாத்துட்டு அப்படியே போறவங்க...இது யாரோ புதுசா இருக்கே..நம்ம ஏரியாக்கு வந்துருக்காங்க ஒரு ஹலோ சொல்லலாம்னு நினைச்சு நட்பை வளர்க்கறவங்க..எல்லாரையும் மனமலர்களால் வரவேற்கிறேன்.