காத்திருப்பு

Saturday, October 20, 2018
அதுவொரு ஆளரவம் குறைந்த அந்தி நேர கடற்கரை.
கவனம் ஈர்க்கும் சுட்டிப் குழந்தையொருத்தி துள்ளித் திரிந்து கொண்டிருந்தாள். அவள் மேல் கொண்ட ஈர்ப்புக்கு காரணம் தேடினேன். அன்று வரையிலுமான என்அன்புக்குரிய குழந்தைகள் அனைவரையும் குழைத்து வார்த்த வார்ப்பாய் ஏனோ வாரி அணைக்கத் தூண்டினாள். அவளின் ஆதி அறியவும் அளவளாவவும் ஆசை கொண்டேன். அவளை நோக்கி நடையை எட்டிவைத்த நொடியில்,அவளைப் பாதுகாக்கும் தொலைவில் , வழிகாட்டும் காப்பாளனாகவோ,விளையாடும் தோழமையாகவோ எந்த ஒரு உருவமும் இல்லாத நிலை சற்றே நிதானிக்க வைத்தது. அவள் தன்  உலகில் ஆழ்ந்து லயித்திருந்தாள். இந்தச் சுட்டிக் குழந்தை யார்? ஒரு வேளை இவள்தான் கதைகளில் வரும் தேவதையோ! கட்டுப்பாடுகள் கொண்ட தன் உலகம் விடுத்து சுதந்திரத்தை சுவாசிக்க வந்திருப்பாளோ!
தேவதைகளுக்குப் பெயர் இருக்குமா? அப்படியானால் இவளுக்கான பெயர் என்னவாக இருக்கும். அதுவரை பொம்மைகளாகவும், திரைப்பதுமைகளாகவும்,செவிவழிக் கதைகளின் நாயகிகளாகவும் கேள்விப்பட்ட பல தேவதைகளின் பெயரை சூட்டிப் பார்த்தேன். எந்தப் பெயரும் திருப்தி அளிக்கவில்லை. சின்ட்ரெல்லா என்னும் ஒன்றைத் தவிர. சின்ட்ரெல்லா எனப் பெயர் சூட்டிய தருணத்தில் அவள் சரியான நேரத்தில் கூடடைவாளா என்னும் உன்மத்த பதட்டம் தொற்றிக் கொண்டது. இப்போது நேரம் என்னவாக இருக்கும்.நேரம்காலமறியாமல் இயற்கையை ரசிக்கும் நோக்கில் மறுதலித்து  வந்த கைகடிகாரத்தைச் சபித்தேன். வேறு எவ்வழியிலாவது நேரத்தை அறிய நினைத்த நொடியில் , மனிதன் படைத்த கடிகார நேரம்; அவளுலகுக்கு பொருந்துமா என்னும் கவலையும் கனம் கூட்டியது. ரசிப்பு வலியாக மாறத் தொடங்கிய கணத்தில், தொலைதூரப் பறவை ஒலி என்னைச் சிறு நொடி திசை திருப்பியது. .கவனம் திருப்பி மீண்டும் பதட்டம் சூடிய கணத்தில் அவள் கண் மறைந்தாள். எங்கே சென்றாய் என் சின்ட்ரெல்லாவே. யாராவது பார்த்தால் சொல்லுங்கள். அவள் தன் சேரிடம் சேர்ந்ததை அறியக் காத்திருக்கிறேன் என்று.

0 comments: