பேரானந்தமாய் ஒரு ஆன்மீகப் பயணம்

Wednesday, February 12, 2020

பிறந்த நொடி முதல் இறப்பை நோக்கி பயணிப்பதே  வாழ்க்கை. அந்த வாழ்வில் குறிப்பிட்ட சில நாட்களை அர்த்தமுள்ளதாகவும, அற்புதமானதாகவும்  மாற்றிக் கொள்ள  உறுதுணையாய்  இருப்பவை பயணங்கள்.
2020ம் ஆண்டின் முதல் வார இறுதி. தொன்மைச் சிறப்பும், ஆன்மீக ஒளியும் நிறைந்திருக்கும் திருச்சியை நோக்கி சனிக்கிழமை காலையில் ஒரு இனிய பயணம் தொடங்கினோம்.
ரயில் நிலையத்தில் ரயில் வந்து நின்றபோது நாங்கள் பயணிக்க வேண்டிய பெட்டி எங்கோ கண்காணாத தொலைவில் தெரிந்தது. வெகுசில நிமிடங்களே நிற்கும் வண்டி என்பதால் வெகுவேகமாக அதை நோக்கி முன்னேறி பெட்டியை ஏறக்குறைய நெருங்கியிருந்த வேளையில், முந்தைய பெட்டியின் முன் நின்றிருந்த டிடிஆர் வெகுஅக்கறையாக "டிரெயின் கிளம்ப போகுது இந்த பெட்டியில் ஏறிக்கங்க" என வழிமறிக்க "அடுத்த பெட்டிதான் எங்களோடது வழிய விடுங்க" என நான் கூறுவதை காதிலேயே கேட்காமல் அவரது கடமையை செவ்வனே ஆற்றியவரோடு ஒரு சிறு கபடியே ஆடி ஒரு வழியாய் ரயில் படிக்கட்டில் கால்வைக்கும் போதே ஊதிட்டாங்க சங்கு.
துள்ளி குதித்துக் கொண்டிருந்த மனம் போலவே ரயிலும் வெகுவேகமாகப் பயணித்து, குறிப்பிட்டதற்கு அரை மணி முன்னதாகவே திருச்சியை அடைந்தது. எங்களுக்காக காத்திருந்த தோழியுடன் இணைந்து சமயபுரம் நோக்கி கிளம்பினோம்.ஏறத்தாழ முப்பது நிமிடங்கள் கடந்து போயிருக்க, வண்டி நின்றது சமயபுரம் மாரியம்மன் கோவில் நுழைவாயிலில்.வழிமறித்த சில வியாபாரிகளைத் தாண்டி வரையறுக்கப்பட்ட வழியில் நுழைந்து மெதுமெதுவாய் அம்மனை நோக்கி நகர கருவறையில் ஐந்து தலை நாகத்தை குடையாக கொண்டு அமர்ந்த திருக் கோலத்தில் ,இடக்காலை மடக்கி வலக்காலின் கீழே மூன்று அசுரர் தலைகளை மிதித்துக் கொண்டு கோபாவேசமாகத் தோன்றினாலும், முகத்தில் சாந்தமும் அருளும் நிறைந்தே காட்சி தந்தாள் அன்னை.
700 ஆண்டு காலமாக அமைந்துள்ள இந்த கோவில் உருவாக்கத்தைப் பற்றி சில செவிவழிச் செய்திகள் அறிய முடிந்தது.மாரியம்மன் ஸ்ரீரங்கத்திலிருந்த வைணவி தேவியின் உக்கிரம் தாள முடியாமல் தேவியை காட்டுப் பகுதியில் கொண்டு வந்து வைத்துவிட்டுப் போய்விட்டதாகவும்,சோழர் காலத்தில் அந்த அம்மன் கண்ணனூர் மாரியம்மன் என உள்ளூர் மக்களால் ஆராதிக்கப்பட்டு வந்த நிலையில் விஜய நகரப் பேரரசு மன்னனின் தென்னாட்டில் அரசமைக்கும் வேண்டுதலை நிறைவேற்றியதால் இக்கோயில் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வேறு சிலர் கூறுவது. இந்த அம்மனது உற்சவத் திருமேனி விஜய நகரப் பேரரசர்களால் வழிபடப்பட்டு வந்தது.அவர்களது தென்னாட்டுப் படையெடுப்பின் போது அவர்களுடனே பயணித்த அம்மன் திருமேனி தானே தேர்ந்தெடுத்துக் கொண்ட இடம்தான் இது என்றும் கூறுகிறார்கள்.உண்மையான வரலாற்றை அறிய கல்வெட்டுகள் எதுவும் காணப்படவில்லை. அங்குள்ள மண்டபத்தின் தூண்களில் நாயக்கர் மன்னர்களின் உருவங்கள் காணப்படுவது, சோழர்காலக் கல்வெட்டுகள் சிலவற்றில் இந்த ஊரின் பெயர் குறிக்கப்பட்டிருப்பது, உக்கிரமான இந்த அம்மனை எப்போதும் குளிர்ச்சியாய் வைக்க கருவறையின் உள்பிரகாரத்தில் எப்போதும் நீர் நிரம்பியிருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது என்பவை இச்செவிவழிச் செய்திகளுக்கு ஆதாரமாக சொல்லப்படுகின்றன.
அங்கிருந்து உறையூர் வெக்காளிஅம்மனை நோக்கிய பயணம்.ஏறத்தாழ 30 கிமீ பயணித்த பாதையில்,வாரணபுரீஸ்வரர், அழகிய சிங்கர்,உச்சிப் பிள்ளையார் என எத்தனையோ கோவில்கள் ஆர்வத்தைத் தூண்டினாலும் கடிவாளம் பூட்டபட்ட எங்கள் இயந்திரக் குதிரை வெக்காளி அம்மன் கோவில் வாசலில் போய் நின்றது. உலகின் அத்தனை அழகினையும் தன்னகத்தே கொண்டிருப்பதாக சேக்கிழாரால் பாராட்டப்பட்ட உறையூரின் பெறும்பேறுடைய அழகு வெக்காளி அம்மன்.கோவிலின் நடுநாயகமாக அம்மன், அமர்ந்த நிலையில் தன் நான்கு கைகளிலும் சூலம்,பாசக்கயிறு,உடுக்கை, அட்சய பாத்திரம் ஏந்தி அருள் பாலிக்கிறாள்.
கூரையில்லாக் கருவறையில் மதிய வேளையில்  அம்மனின் பிரகாசமான தோற்றம் உண்மையிலேயே பெரிதாய் கவனம் ஈர்த்தது.
அடுத்த திட்டம் 2500 ஆண்டுகளுக்கு முன் கோச்செங்கட்ச் சோழனால் கட்டப்பட்ட திருவானைக்கா அருள்மிகு சம்புகேசுவரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில்.கோவில் நடை மூன்று மணிக்குத்தான் திறக்கப்படும் என்பதால் அங்கே போய் பசி தீர்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுடன் எங்கள் வண்டி பறந்தது.
கோவிலின் வெளிப்பிரகாரத்திலேயே இயற்கை எழில் சூழ்ந்த மண்டபத்தில் அமர்ந்து கொஞ்சமாய்ப் பேசி, அங்கிருந்த கருங்கோழிகளோடு பகிர்ந்து நிறைய சாப்பிட்டு, வரலாற்றைப் பதிவு  செய்யும் முயற்சியில் கோபுரங்களின் அழகை கேமராவில் அடைத்துக் கொண்டிருந்த வேளையில் அங்கே வந்த பெரியவர் தமிழர்களின் பழங்காலப் பெருமை,அந்தக் கோவிலின் சிறப்பு, இன்றைய நிலையில் தனக்கான ஆதங்கங்கள் என கொட்டித்தீர்த்ததையும் காதில் போட்டுக் கொண்டு சம்புகேசுவரரை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.
சைவ சமயக் குரவர்கள் நால்வராலும் அருணகிரி நாதராலும் நாயன்மார்களாலும் பாடப் பெற்ற தலம் இது. பாண்டியர்களாலும் , மதுரை நாயக்கர்களாலும் புதுப்பிக்கப்பட்டது.இத்தலப் பெருமானை தரிசிப்பதற்காகவே ஸ்ரீரங்கத்தில் பெருமாள் கோவில் கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது. நரசிம்மப் பல்லவனது சிங்கத் தூண்கள் கோபுரத்தில் காணப்படுகின்றன.ஐந்து திருச்சுற்றுகளைக் கொண்ட இக்கோயிலின் 5 ம் சுற்று இறைவனாலே கட்டப்பட்டதாக, திருநீற்றான் திருமதில் என்னும் பெயரில் வழங்கப்படுகிறது.லிங்கம் தரைமட்டத்துக்கு சற்று கீழே அமைந்துள்ளதால் கருவறையில் உள்ள ஸ்ரீமத் தீர்த்தம் எப்போதும் வற்றாது விளங்குகிறது. இதனைக் கொண்டு அம்பிகை சிவனை வணங்கியதாகஐதீகம் உண்டு.சிவனின் பஞ்சபூத தலங்களில் இது நீர்த்தலம். சிவனை வணங்குவதற்கு மனிதனின் நவதுவாரங்களைக் குறிக்கும் ஒன்பது துளைகளைக் கொண்டு அதன் வழியாக சிவன் தரிசிக்கப்படுகிறார். மிக குறுகிய வாயில் ஒன்றும் உண்டு.அதன் மூலமும் சுவாமியை தரிசனம் செய்யலாம்.ஐப்பசி பவுர்ணமியில் அனைத்து சிவன் கோவிலிலும் அன்னாபிஷேகம் நடக்கும்போது, கருவறை தண்ணீர் நிறைந்திருக்கும் என்பதால் வைகாசிப் பவுர்ணமியில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. உச்சிகால பூஜையின் போது அர்ச்சகர் அம்மன் வேடமணிந்து வந்து சிவனுக்கு பூஜை செய்வார்.இக்கோயிலின் ஈஸ்வரன் அம்பிகையைத் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதால் திருக்கல்யாணம், பள்ளியறை பூஜை போன்றவை இக்கோயிலில் கிடையாது.
கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் அம்மனின் தோடுகள் மிக விஷேஷம் என அர்ச்சகர் வாயிலாக அறிந்துகொண்டு அதனைப் பற்றிய விவரங்களைத் தேடிய போது அவை அம்மனின் உக்கிரத்தை தாங்கஆதிசங்கரரால் வடிவமைக்கப்பட்ட ஸ்ரீசக்கரங்கள் என அறிய முடிந்தது. விளக்கொளியில் அத்தோடுகளுடனான அம்மனின் தரிசனம் வானவீதியின் நட்சத்திர மண்டலத்தின் நடுவே தோன்றும் நிலவைப் போலமின்னியது.
குபேர லிங்கத்தை வணங்கிவிட்டு ஏசு நாதர், மூன்றுகால் முனிவர் போன்ற சிற்பங்களை ரசித்து நிமிர்ந்த நொடியில் தொலைபேசியில் செய்தி வந்தது ஸ்ரீரங்கத்தில் மூலவர் தரிசனம் ஆறு மணிக்கு நிறுத்தப்படும் விரைவில் வாருங்கள் என்று.
அடுத்த சில நிமிடங்களில் 108 திவ்யத்தலங்களில் முதலானது, பஞ்சரங்கத் தலங்களில் முக்கியமானது, யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னம் இத்தனைச் சிறப்புகளைக் கொண்ட  ஸ்ரீரங்கம் ரங்க நாதப் பெருமாள் ஆலயத்தின் தென்னிந்தியாவின் மிகப் பெரிய ராஜ கோபுரத்தின் முன் ஆஜர்.பஞ்சரங்கத் தலங்கள் எனப்படுபவை காவிரி ஆற்றின் கரையில் பெருமாள் கோயில் கொண்டிருக்கும் ஐந்து திட்டுகள் ஆகும்.
பிரம்மாவின் தவ பலத்தால் பாற்கடலில் தோன்றிய விமானம் , விபீஷணனுக்கு ராமனால் பரிசளிக்கப்படுகிறது.அதனை இலங்கைக்கு எடுத்துச் செல்லும் வழியில் காவிரிக்கரையில் கீழே வைக்கப்பட்ட விமானத்தை மீண்டும் பெயர்தெடுக்க விபீஷணனால் இயலவில்லை. அப்போது சோழ மன்னனால் பெருமாளுக்கு கோயில் எழுப்பபபடுகிறது. விபீஷணனை சமாதான்ப்படுத்தும் பொருட்டு இலங்கையை நோக்கி பெருமாள் சேவை சாதிப்பதாக உறுதி கூறுகிறார், இக்கோயில் வெள்ளப் பெருக்கினால் மண்மூடிப்போக அவர்களின் தலைமுறையில் பின்னர் வந்த கிள்ளி வளவன் கிளியின் துணை கொண்டு அக்கோயிலை மீண்டும் கட்டினான். ஆண்டாள்,திருப்பாணாழ்வார், பீபீ நாச்சியார் இவர்கள் அனைவரும் அரங்கனின் திருவடியை அடைந்தது இக்கோயிலிலேயே.

 கோவில் வாசல் கடைகளின் ஸ்படிங்களும், வண்ண வண்ண கற்களும் கண்ணை ஈர்த்தாலும், அவற்றின் விலை ஏதும் பொருத்தமானதாகத் தோன்றாததால் "இப்ப சாமி கும்பிட வந்தமா? ஷாப்பிங் பண்ண வந்தமா?" வாங்க சாமி பார்க்க போலாம்" எனச் சமாளிப்பாய் மனதை சமாதானப்ப்டுத்திவிட்டு கோவில் நுழைவிடத்தில் நின்ற கூட்டத்தைப் பார்த்து மலைத்துத்தான் போனோம்.அங்கே நின்றிருந்த கூட்டத்தினைக் கண்டதும், "வைகுண்ட ஏகாதசி உற்சவ காலத்துல இந்த கூட்டம் இருக்கத்தான் செய்யும். அதனால இன்னிக்கு மூலவரைப் பார்ப்பது ஏறக்குறைய இயலாது.சொர்க்கவாசலிலாவது நுழைந்து வருவோம். இவ்ளோ தூரம் கூப்ட பெருமாள் தரிசனம் குடுக்காம போயிடுவாரா" என நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும் இடையேயான ஊசலாட்டத்துடனே கோபுரத்தின் உள்ளே நுழைந்தோம். அங்கே இங்கே சுற்றி சிறப்பு தரிசன வரிசையை எட்டிப் பிடித்ததும் நம்பிக்கை நூல் பலமாகத் தொடங்கியது. வரிசையில் காத்திருந்த நேரத்தில் கோவிந்தா கோஷமும், பெருமாளின் பாசுரங்களும் செவியை நிறைத்தன. சற்றே வேகமாகவும், திடீரென மெதுவாகவும் நகர்ந்த வரிசை பெருமாளின் கருவறையை அடைந்த நேரத்தில்  அத்தனை அழகாய்ப் பெருமாளின் முத்தங்கி தரிசனம். தோளழகா? கண்ணழகா? உடையழகா எதை ரசிப்பதென்றே தெரியாமல் மனம் நிர்மலமான நொடியில் அந்தப் பெருமாளின் உள்ளொளி தரிசனம். சேவிக்க நினைத்திருந்ததனைத்தும் மறந்து பெருமாளே மனதினை ஆட்கொண்டிருந்த நிமிடத்தில் குறையொன்றுமில்லை கண்ணா என எங்கோயோவொரு அலைபேசி ஒலித்தது தற்செயலென்றாலும் பெருமாளின் செயலாகவே கொள்ளத் தோன்றுகிறது.பிரியாவிடை கொடுத்த பெருமாளை கண்ணில் நிறைத்துக் கொண்டு, சொர்க்கவாசலை நோக்கி நடை போட்டன கால்கள். இதற்குமேல் வேறென்ன வேண்டுமென மனம் பூரித்துக் கிடந்த மனதோடு வெளிச்சுற்றில் விற்கப்பட்ட காலண்டர் வடிவில் பெருமாளையும் தாயாரையும் கைகளில் சுமந்து கொண்டு  சொர்க்கவாசலைக் கடந்து போய் புல்தரையில் சற்றே ஓய்வெடுக்க அமர்ந்த நொடியில் காற்றில் வந்தது அந்த அறிவிப்புக் குரல்."மூலவர் தரிசனம் முடிவுற்றது" ஸ்ரீரங்கநாதரே கைப்பிடித்து அழைத்து வந்து சரியான நேரத்தில் தரிசனம் தந்ததான நிறைவும், பெருமிதமும் மனதில் எட்டிப் பார்த்ததென்பது பொய்யல்ல.
ரங்க நாயகித் தாயாரின் திருக்கமலப் பாதங்களில் கொண்டு சென்ற தாமரை மலர்களைச் சேர்ப்பித்து விட்டு ராமானுஜர், கிருஷ்ணன் மற்றும் திருச்சுற்று தெய்வங்கள் எல்லாரின் ஆசிகளோடு ஆயிரம்கால் மண்டபத்தை ஒரு சுற்று சுற்றி வந்துவிட்டு  கோவிலின் வெளியே வந்து ஸ்ரீரங்கத்தின் பிரபலமான கல் சட்டிகள், ஐம்பொன் உருவங்கள் என நியாபகார்த்த ஷாப்பிங் பர்ஸை பதம் பார்க்கத் தொடங்கியது.  நிறைந்த மனதோடு வாகனத்தில் ஏறிய பொழுது அந்த நாளும் நிறைவுற்றது.ஓய்வுதேடிய விழிகள் உறக்கத்தின் துணை கொண்டன.




2 comments:

Malar Selvam said...

உடன் பயணித்த உணர்வு. அதுவும் அந்த குறையொன்றுமில்லை மொமண்ட் 👌

Malar Selvam said...

உடன் பயணித்த உணர்வு
குறையொன்றும் இல்லை கண்ணா மொமண்ட்👌