சிவனும்,பிரம்மாவும்,விஷ்ணுவும் பின்னே நாங்களும்

Wednesday, February 19, 2020பயணங்கள் பண்டைய‌ நாடோடி வாழ்க்கை முதல் இன்றைய நவீன வாழ்க்கை வரை எதேனும் ஒரு புதிய திறப்பைத் தனி மனிதனுக்குள்ளும், அகண்டுவிரிந்த நாடுகளுக்கும் ஏற்படுத்தியிருக்கின்றன. வாஸ்கோடகாமாவின் பயணம், கொலம்பஸின் பயணம் நாடுகளைக் கண்டுணர உதவுகிறதெனில், தனிப்பட்ட மனிதர்களின் பயணம் அவர்களைப் பற்றிய புரிதலை, அவர்களுக்கே ஏற்படுத்தும் தன்மையானதாகத் திகழ்கின்றன. அதுவும் ஆன்மீகப் பயணமாக அமைந்துவிடும் தருணங்களில் அது உள்ளும் புறமும் ஏற்படுத்தும் மாற்றங்கள், புரிதல்கள் சற்றே அலாதியானவைதான்.
பெரிதாகச் செய்யவேண்டிய வேலைகள் ஏதுமில்லாத ஞாயிறு விடுமுறை நாளில் அத்தகைய பயணம் ஒன்றை, திருச்சி சுற்றுவட்டாரத்திலிருக்கும் சில கோவில்களை நோக்கி தோழிகள் இணைந்து துவங்கினோம்.
அன்று அதிகாலையிலேயே தோட்டத்தின் ஜன்னல் வழியே அகவிய மயிலின் குரல் தூங்காமல் தூங்கி சோம்பிச் சுகம் காணாமல் விரைந்து கிளம்பச் சொல்லியது. அவற்றோடு சிறிது நேரம் அளவளாவி, மரம்,செடிகளிடம் நலம் விசாரித்து, மணம் கமழும் கள்ளிச் சொட்டு பில்டர் காபியை வயிற்றுக்கு வார்த்துக் கொண்டு கை கோர்த்து கிளம்பினோம். வழியில்  அஸ்வின் ஸ்வீட்ஸின் அருமையான மினி டிபன் வயிற்றை நிறைக்க,  போகும் இடத்திலெல்லாம் நம் இருப்பை முத்திரையாக பதித்து விட வேண்டும் என்னும் எழுதப்படாத எங்கள் கொள்கைக்கு ஏற்ப அந்தக் கடையின் தோசை மாஸ்டருக்கு தோசை சுட டிப்ஸ் கொடுத்துவிட்டு ,வண்டி சீறிக் கிளம்பியது திருப்படையூர், திருப்பிடவூர் என்றெல்லாம் அழைக்கப்பட்ட திருப்பட்டூர் கோவில்களை நோக்கி.
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரத்தைக் கடந்து வரும் சிறுகனூர் கிராமத்தின் கிளைச் சாலையில் சுமார் 5கிமீ பயணித்தால் பலசிறப்பு பெற்ற கோவில்கள் அமைந்துள்ள திருப்பட்டூரை அடையலாம். தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி உயர்வு தரும் என நம்பிக்கையூட்டிய வள்ளுவரே ஒரு கட்டத்தில் ஊழிற் பெருவலி யாவுள என விதியின் வலிமையைப் பேசுகிறார். அத்தகைய நிலைத்தன்மை வாய்ந்த விதியை எழுதியதாக சொல்லப்பட்ட பிரம்மாவும், ஆதிக்கடவுள் சிவனும் அதனை மாற்றியமைக்கநமக்கு அருள்புரியும் கோவில்களாக இவை சொல்லப்படுகின்றன.
முதலில் சென்றது திருப்பட்டூர் அருகிலுள்ள பாலையூர் கிராமத்தில் அமைந்துள்ள அன்னை காசி விசாலாஷி சமேத காசி விஸ்வநாதர் கோவில். 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படும் மூன்று திருச்சுற்றுகளைக் கொண்ட கோவில். சாலையோரமாகவே பூஜைப் பொருட்கள் விற்கும் கட்டில் கடைகளும் எளிய மூதாட்டிகள் சிலரும் அன்பாய் வரவேற்றனர். உள்ளே நுழைந்ததும் வியாக்ரபாதர் ஜீவசமாதி. அங்கே சில நிமிடங்கள் அமர்ந்து தியானம் செய்வதால் முன்னோர் ஆசிகள் அனைத்தும் கிடைக்கப்பெறும் எனக் கூறுகின்றனர்.
வியாக்ரபாதர் சிவனின் மீது பேரன்பு கொண்ட முனிவர்.பதஞ்சலி முனிவரின் நெருங்கிய நண்பர்.இவர்கள் இருவருக்கும் இறைவன் சிவனார் தில்லையம்பதியில் திருநடனம் ஆடிக்காட்டியதை புராணம் அழகுற விவரிக்கிறது வண்டு கூட நுகராத மலர்களை அதிகாலையிலேயே சிவனுக்காகப் பறிக்கும்பொருட்டு அச்சிவனருளாலேயே புலிபோன்ற கால்களையும் பார்வையையும் பெற்றவர் வியாக்ரபாதர்
இக்கோயிலின் வரலாறாக சொல்லப்படுவது, வியாக்ரபாதர் காசியிலுள்ள லிங்கத்தைப் போன்றே ஒன்றை பிரதிஷ்டை செய்து கோவில் அருகேயுள்ள கிணற்றிலிருந்து நீர் கொண்டு அபிஷேகித்து வருகிறார். அந்தக் குளம் வற்றிப் போக, நித்திய கர்மத்துக்கு நீர் இல்லாமல் தவிக்கும்போது தேவலோகத்தின் ஐராவத யானை காசியிலிருந்து, கங்கை நீரை அருகிலுள்ள திருஆனைக்கா சிவனின் அபிஷேகத்துக்காக எடுத்துச் செல்கிறது. முனிவரின் வேண்டுகோளை ஏற்காமல் இந்த கோவிலுக்கு சிறிது நீர் தர மறுத்து விடுகிறது. இதனால் கோபம் கொண்ட வியாக்ரபாதர் தன் புலிக்காலால் பூமியை உதைக்கத் தோன்றியதுதான் இந்தக் கோவிலின் தீர்த்தக் குளம்.
காசி விசாலாட்சி அம்மன் கோயிலின் உள்ளே நுழைந்ததும் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அம்மனுக்கு வழக்கமாய் நடக்கும் அர்ச்சனைக்கு குங்குமம் வாங்கித் தருவதும், அம்மனுக்கும் சிவனுக்கும் வஸ்திரம் சாற்றுவதும் முக்கிய நேர்த்திக் கடன்கள். இந்தக் கோவிலின் உட்பிரகாரம் ஓம் வடிவில் அமைக்கப்பட்டுள்ளதும், அதன் சுற்றுச் சுவர்களில் டைனோசர்,பறவைகள், பலவகைப் பாம்புகளின் சுதை உருவங்கள் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இந்தக் கோவிலில் வழிபடுவதால் அதுவரை செய்த பாவங்கள், பித்ரு சாபங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.
அங்கிருந்து மரங்கள் நிறைந்த சாலையில் 1 கிமீ பயணித்து  பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் சென்றடைந்தோம். விடுமுறை நாளாக இருந்ததாலும், ஐயப்ப சாமிமார்கள், மேல்மருவத்தூர் சக்திமார்கள் சீசனும் சேர்ந்து கொண்டதாலும்  சுற்றுலா பேருந்துகளிலிருந்து இறங்கி சில நூறு பேர்கள் கோவிலுக்குள் சென்றனர்.அவர்களது பெருந்திட்டமிடலில் ஒவ்வொரு கோவிலுக்கும் சில நிமிடங்கள் தான் ஒதுக்கப்பட்டிருந்ததோ என்னவோ சற்று நேரத்தில் கூட்டமனைத்தும் குறைந்து வெகுசிலரே எஞ்சினோம். தஞ்சாவூர் கோயிலுக்கும் முற்பட்ட காலத்தியது என கோயில் தலபுராணம் கூறுகிறது. படைப்புத் தொழிலை மேற்கொண்டு வந்த பிரம்மன் ஐந்து தலைகளைக் கொண்டிருந்த காலத்தில் தன்னை சிவனுக்குச் சமமாகக் கருதி அகந்தை கொண்டிருந்த ஒரு தருணத்தில் சிவனால் ஒரு தலை கொய்யப்பட்டு தன் தொழிலை இழந்ததாகவும், இத்தலத்தில் சோடச லிங்கத்தை வழிபட்டதால் சாப விமோசனம் பெற்று பிரம்மாவின் தலையெழுத்து மங்களகரமான‌ வழியில் திருத்தி எழுதப்பட்டதாலும் இத்தலத்தில் வழிபடும் அனைவரது விதியால் படும் துன்பங்களும் குறையும் என கூறப்படுகிறது.
7 திருச்சுற்றுகளைக் கொண்ட இக்கோயிலில் பிரம்மபுரீஸ்வரரை வணங்கிவிட்டு பிரகாரத்துள் அடியெடுத்து வைத்ததும் தனிச்சன்னதியில் ஆறேகால் அடி உயர‌ பிரம்மாவைக் காணலாம். அட்சமாலை, கமண்டலத்துடன், பத்ம‌ பீடத்தின்மீது காட்சியளிக்கிறார். இங்கிருந்தே குரு தட்சிணாமூர்த்தியையும் வணங்கலாம் என்பது தனிச்சிறப்பு. எதிரில் உள்ள தூணில் சனீஸ்வரன் சிற்ப வடிவில் அருள்பாலிக்கிறார். மாசாத்தையனாரால் திருக்கயிலாய ஞான  உலா இக்கோயில் மண்டபத்தில் அரங்கேற்றப்பட்டது. அந்த மண்டபம் இன்றும் அதற்கு அடையாளாமாக விளங்குகிறது. அய்யனார் 3500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இக்கோயிலில் கல்விக் கடவுளாகவும் காவல் தெய்வமாகவும் விளங்குகிறார். அய்யனார் சிலைகளை காவல் தெய்வமாக ஊரெங்கும் நிறுவும் மரபு இக்கோயில் மூலமாகவே தொடங்கியதாக கல்வெட்டுகள் கூறுகின்றன.தமிழக அளவில் அய்யனாருக்கு மிகப் பெரிய கற்கோயில் திருப்பட்டூரில் உள்ளது
ஏழாம் தேதியில் பிறந்தவர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும் திருத்தலமாக விளங்குகிறது.
இக்கோயிலில் பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள் சூரியன் ஒளி சிவனின்மீது விழுவதால் நேரடியாக சூரியனே வந்து வணங்குவதாக சொல்லப்படுகிறது. கோயிலின் அனைத்து பகுதிகளிலும் சூரிய ஒளி பரவலாக இருக்கும்படி கட்டப்பட்டிருக்கிறது. யோகக் கலையின் ஆதி குருவான பதஞ்சலி முனிவரது ஜீவசமாதி இக்கோயிலின் சிறப்புகளில் ஒன்று. முதன்முதலில் வேதம் கூறப்பட்ட கோவில் எனவும் இங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.
மனதில் நிறைந்திருந்த நம்பிக்கையையும், திருப்தியையும் சுமந்து கொண்டு பயணப்பட்டோம் துறையூர் செல்லும் வழியிலுள்ள திருவெள்ளறை புண்டரீகாட்சப் பெருமாள் ஆலயத்தை நோக்கி. ஆதிதிருவெள்ளறை என்றழைக்கப்படும் இக்கோயில் கி.பி 805ம் ஆண்டு முதல் கல்வெட்டுகளின் இடம்பெறுகிறது
கோவிலை நெருங்கும்போதே, முன்னால் வரவேற்றது கட்டுமானம் முடிக்கப்படாத கோபுரம். ஹம்பி அச்சுதராயா கோவில் கட்டமைப்பை ஒத்திருப்பதாகத் தோன்றியது.கோவிலின் உள் நுழைந்ததும் இடப்புறம் செல்லும் பிரகாரத்தின் இருபுறமும் வரவேற்ற மரங்கள் ஏதோ ஒரு நந்தவனத்தில் நுழைந்திருக்கும் எண்ணத்தையே தந்தது சற்றுதூரம் நடந்ததும் மிகப் பெரியதானதொரு ஆலமரம். அதன் பின்புறம் குகைபோன்ற அழகான தூண்களைக் கொண்ட மண்டபம். அதில் மண்டூக முனிவரும், மகாலட்சுமி தேவியும் பெருமாளைக் குறித்து தவம் இருந்த இரு குகைகள் காணப்பட்டன. அம்மண்டபத்தில் எழுப்பபபடும் ஒலி தெளிவாக கோவில் முழுவதும் எதிரொலிக்கும் என கூறப்பட்டது. அந்த அமைதியான இயற்கைச் சூழலில், ஆலயத்தில் ஒலி எழுப்புவது தவறெனத் தோன்றியதால் அதனை சோதித்துப் பார்க்கும் எண்ணத்தைக் கைவிட்டோம்.
சிபிச்சக்கரவர்த்திக்கு வெள்ளைப் பன்றி உருவில் காட்சி தந்ததால் ஸ்வேதபுரி நாதன் என்னும் பெயரும் திருத்தலத்திற்கு ஸ்வேதபுரி நட்சத்திரம் எனப் பெயர் வந்ததாகவும் கூறப்படுவதுண்டு. ஸ்ரீதேவி, பூதேவி, சூர்ய சந்திரர்கள், ஆதிசேசன் முதலியவர்கள் மனித உருவில் வந்து பக்கத்தில் நின்று கைங்கர்யம் செய்வது தனிச்சிறப்பு. பெரியாழ்வாராலும் திருமங்கை ஆழ்வாராலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம்
பாற்கடலின் மகளாகிய ஸ்ரீதேவித் தாயார் பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமாளிடம் பாற்கடலாகிய எனது தாய் வீட்டில்தான் தாங்கள் பள்ளி கொண்டிருப்பதால் எனக்கு முதல் மரியாதை வேண்டும் எனக் கேட்டதன் பொருட்டு இங்கு எழுந்தருளியுள்ளதாகவும் தலபுராணம் கூறுகிறது. இங்கு தாயார்தான் முதலில் சேவிக்கப்படுவார். உற்சவத்தின் போதும் தாயர் பல்லக்குதான் முதலில் செல்லும்.பெருமாள் அரசரூபமாக அரும்பாலிக்கிறார்.
நின்ற கோலத்தில் பெருமாள் காட்சியளிக்கிறார். பெருமாள் முத்தங்கி சேவையில் அளித்த காட்சி காண கண் கோடி வேண்டுமென்பது நிதர்சனம்.


இக்கோயிலில் உத்தராயணம் , தட்சணாயனம் என இரு வாசல்கள் உண்டு. உத்தராயண படிகள் வழியாக  தை முதல் தேதி முதல் ஆனி இறுதி நாள் வரையும் தட்சணாயன காலமாகிய மீதமுள்ள மாதங்களில் தட்சணாயணப் படிகள் வழியாகவும், பயணித்து கடவுளை தரிசிக்கலாம்.உத்தராயண தட்சணாயன வாசல்களின் கதவுகளில் பொறிக்கப்பட்டுள்ள தத்ரூப சிற்பங்கள் அப்போதைய மிகச்சிறந்தமரவேலைப்பாடுகளுக்கு பெரும் உதாரணமாக விளங்குகின்றன.
நுழைவாயிலின் பதினெட்டு படிகளும் கீதையின் பதினெட்டு அத்தியாயங்களைக் குறிக்கும் . கோவிலின் நுழைவாயிலைக் கடந்தால் பலிபீடம். பலிபீடத்தை கடந்து ஐந்து படிகளைத் தாண்டினால் நாழிகேட்டான் வாசலை அடையலாம். இந்த ஐந்து படிகளும் ஐம்பூதங்களைக் குறிக்கின்றன. இந்த வாசலில் நின்று தான்-  இரவில் வெகு நேரம் கழித்து கோவிலுக்கு திரும்பிய புண்டரி காஷப் பெருமாளை வழிமறித்து ஏன் இவ்வளவு நேரம்? என்று கேட்டாளாம் செண்பகவல்லி.  அதற்காக இப்பெயர் நிலவுகிறது. கோபுர வாசலிலுள்ள நான்கு படிகள் நான்கு வேதங்களைக் குறிக்கும். கோயிலில் இருக்கும் கிணறு பல்லவ மன்னன் தந்திவர்மனால் உருவாக்கப்பெற்றது. இது மாற்பிடுகு பெருங்கிணறு என்று அழைக்கப்பெறும். இந்தக் கிணற்றுக்கு அருகில் இருக்கும் ஒரு கல்வெட்டு ஆலம்பாக்கத்து கம்பன் அரையன் என்ற தலைவன் தன் அரசன் நந்திவர்மன் பட்டபெயரான மாற்பிடுகு என்ற பெயரில்  "மாற்பிடுகு பெருங்கிணறு" என்று தோற்றுவித்தான். இது ஸ்வஸ்திக் வடிவில் இருப்பதால் ஸ்வஸ்திக் கிணறு என்றே அழைக்கப்படுகிறது
நடக்கும் தொலைவை அளக்கும் ஸ்ட்ராவா நடந்த தூரம் ஏறத்தாழ 3.5 கிமீ எனக் காட்டியது. வழக்கம் போல் வரலாற்றைப் பதிவு செய்யும் சில செல்பிக்களோடு நடந்து வந்து அன்றையதினம் அழகாய் முடிவுற்றது. கோவிலில் நுழைந்த கணம் முதல் ஏதோ ஒரு பழங்கால அரண்மனையில் உலவிக்கொண்டிருப்பதைப் போலவும், பெருமாளின் கருவறை மன்னனின் ராஜசபையாகவுமே மனதினுள் தோன்றி கொண்டிருந்தது. ஆதி திருவெள்ளறை எனக் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோயிலை கட்டிய மன்னன் அரூபமாக எங்களோடு பயணித்துக் கொண்டிருந்த உணர்வு நிறைந்திருந்தது என்றால் மிகையல்ல
மனம் நிறைந்திருந்த கணத்தில் சற்றே வயிற்றுக்கும் ஈயப்பட்டது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் கோவில் என்பதால் மதிய உணவும் அங்கேயே வழங்கப்பட்டது. கோவிலின் மதில் சுவர்களைக் காணக் கண்கோடி வேண்டும். இத்தனை அருமையானதொரு பிரம்மாண்டத்தை ஆயிரத்துச் சொச்சம் ஆண்டுகளுக்கும் முன்னரே கட்டி எழுப்பியிருக்கும் மனித இனத்தில் பிறந்ததற்கான இருமாப்பும், இந்த பிரம்மாண்டத்தின் முன் நாமெல்லாம் தூசிதானே என்னும் தன்னடக்கமும் ஒருங்கே மனதில் எழுந்து நிரம்பியது. மனிதப் பிறவியின் மாண்பை உணர்ந்த மனத்துடன் இல்லம் திரும்பினோம்


4 comments:

Malar Selvam said...

சிறப்ப💐.
மலர்.

Muthu said...

Comment poduren neenka paragraph எழுதும் போது 5line vara mathiri elunthunka Yaaru படிப்ப இப்படி எழுதுன

Vignesh said...

I would highly appreciate it if you could guide me through this. Thanks for the article…
Tamil News | Tamil Newspaper | Latest Tamil News | Kollywood News

Vignesh said...

Great article with excellent idea! I appreciate your post. Thanks so much and let's keep on sharing your stuff.
Tamil News | Tamil Newspaper | Latest Tamil News