ஒரு நாள்

Friday, January 22, 2021

 

 


 

இந்தியாவில் பிறந்து, சிறுவனாக ஜெர்மனிக்கு வாழ்க்கையைத் தேடிப் போய் ,ஹிட்லர் சேனையிலும், ஜப்பான் போரிலும், இந்திய தேசிய ராணுவத்திலும் சிறப்பாக பங்காற்றி, மேஜர் பட்டத்தோடு, தன் தாய் நாடான விடுதலை பெற்ற இந்தியாவுக்குத் திரும்பும் ஒரு நாகரிக வாலிபன், தன் பால்யம் முதலாக பெரிதாக தொடர்போ, பற்றுதலோ இல்லாத தன் தாய்மாமனின் அழைப்பை ஏற்று, சில நாட்களை அங்கு கழிக்கும் நோக்கத்தோடு தாயின் சொந்த ஊரான சாத்தனூர் கிராமத்து அக்ரஹாரத்துக்குச் செல்கிறான்.அங்கு அவன் எதிர்கொள்ளும் ஒரு நாள் வாழ்க்கையைப் பற்றியும், அந்த அக்ரஹாரத்து மனிதர்களால் அவன் வாழ்விலும், சிந்தனையிலும் ஏற்படும் மாற்றங்களை பற்றியும் உயிரோட்டத்தோடு விவரிக்கும் நாவல்.

நாவல் துவங்கும் அந்த நாளின் விடியலைப் பற்றிய விவரிப்பு, படிக்கும்போதே நம் மனதிலும் பனி பூசிக் குளிர்விக்கிறது.

கலாசாலையில்,  யாருமில்லாத ஏழைப்பையனாக, வேலை செய்து கொண்டே கல்வி கற்றுக் கொண்டிருந்த சிறுவன் கிருஷ்ண மூர்த்தி, அங்கு பணியாற்றி , மேல்படிப்பு ஆராய்ச்சிக்கு ஜெர்மனி செல்லும் கிருஷ்ணமேனன் என்னும் ஆசிரியரால் கவரப்பட்டு குரு சிஷ்ய உறவாய்ப் பிணைந்து அவரோடு ஜெர்மனி நோக்கி பயணிக்கிறான். சிறந்து விளங்கும் மாணவனாக கல்வி கற்று, இளைஞனனாக வளர்ந்த காலத்தில் ஹிட்லரின் பேச்சுக்களால் கவரப்பட்டு அவரது சேனையிலும் , பின்னர் சுபாஸ் சந்திரபோஸுடன் இந்திய தேசிய ராணுவத்திலும் இணைந்து மேஜர் மூர்த்தியாக பல போர்களில் பரிமளிக்கிறான். ஒரு தேசத்தின் எதிர்காலமே என்னைச் சார்ந்தது என்னும் இறுமாப்போடு சுதந்திர இந்தியாவில் காலெடுத்து வைத்த அவனை வரவேற்றுப் புகழத் தயாராக இருந்தஇந்தியாவின் "சிவப்பு நாடா", அவனுக்கென்று வேறெந்த அங்கீகாரமோ உதவியோ செய்யத் தயாராக இல்லை. பெரும்பாலான கதவுகள் அடைப்பட்டிருந்த நிலையில்,

"மனிதன் தனக்கென்று எப்படிப்பட்ட லட்சியத்தையும் மேற்கொள்ளலாம் - பிறருக்கென்று, இன்று உலகம் உள்ள நிலையில், எந்த லட்சியத்தையும் மேற்கொள்வது மகாத்மா பட்டத்துக்கோ அல்லது அதி அசட்டுப் பட்டத்துக்கோதான் வழி".

என்னுமொரு திடமான முடிவுக்கு  மேஜர் மூர்த்தி வந்திருந்த காலத்தில் பத்திரிக்கைச் செய்திகள் மூலம் அவனை அடையாளம் கண்டுகொண்ட அவன் தாய்மாமன் சிவராமையரிடமிருந்து வரும் அழைப்பு அவனை சர்வமானிய அக்ரஹாரம் நோக்கி பயணிக்க வைக்கிறது.

 

அன்றைய அதிகாலையில் துவங்கும் நாவல் அடுத்த நாள் அதிகாலையில் அவன் புதியதொரு வாழ்வை நோக்கிப் பயணிக்கும் இடத்தில் அந்நாளோடு சேர்ந்து நிறைவுறுகிறது.அந்த புதிய பாதை அவனது இயற்கை சுபாவத்துக்கு ஒத்ததிருக்குமா? அந்தப் பயணம் அவனுக்கு எத்தகைய அடையாளங்களைத் தரப்போகிறது?

 

வெட்டுவதும், சுடுவதும், கொல்லுவதும் ராணுவத்தில் சர்வ சாதாரணமானதாகஎதிர்கொண்டு சமாளித்த மேஜர் மூர்த்திக்கு அக்ரஹாரத்து மனிதர்களிடையே ஒருவருக்கொருவர் நிலவும்  அன்பும் பரிவும் புதியதாகத் தோன்றுகிறது. அன்று வரை அவன் உலகத்தைப் பார்த்த பார்வையையே மாற்றுமளவுக்கு அக்ரஹாரத்து எளிய பெண்களின் கள்ளமில்லா அக்கறையும் நடத்தையும் அவனை பாதிக்கிறது.இந்திய தேசிய ராணுவத்தின் மேஜர் மூர்த்தியை ஒரு அந்நியனாகவும், அறியப்பட்டவனாகவும் அக்ரஹாரத்துப் பெண்கள் வெவ்வேறு விதமாகஎதிர் கொள்ளும் விதம் ஒரு கவிதையை ஒத்தது.

 

கொடுப்பதே கடமை, கெடுப்பதே மகிழ்வு, தானுன்டு தன் குடும்பமுண்டு, அடுத்தவர் நல்வாழ்வே தன் புன்னகை, தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களிடம் மட்டுமல்லாமல், பொருட்களுடன் கூட பேசிப் பேசியே நேரத்தை கழிக்கும் ஏகாங்கி என அந்த ஒரு நாளில் கதை நாயகன் மூர்த்தி சந்திக்கும் மனிதர்கள் அனைவரும் தனக்கேயுரிய குணங்களால் வித்தியாச வர்ணங்களால் பூசப்பட்டவர்களாகத் தோற்றமளிக்கின்றனர்.

 

"விதவைக்கோலம், சாத்தனூர் சர்வமானிய அக்ரஹாரத்துப் பெண்களுக்குப் பரிட்சயத்தால் பயத்தை இழந்துவிட்ட ஒரு நிலைமை" என்னும் வரிகள் அக்ரஹாரத்தில் நிறைந்திருக்கும் விதவைகள் , அவர்களில் வாழ்வியலுக்கான வியாக்கியானங்களையும் அடையாளப்படுத்துகிறது.

இதனோடு சாதித் தீண்டாமை போன்றசமூகத்தில் சில புரையோடிய காயங்களையும் அங்கங்கே காணமுடிகிறது. சமூக சீர்திருத்தவாதிகளின் பங்களிப்பு இன்றைய சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள நல்மாற்றங்களையும் உணர முடிகிறது.

 

அந்த அக்ரஹாரத்து விதவைகளைப் பற்றிய "ஹிந்து குடும்பங்களில் விதவைகளின் நிலைமை கண்ணீருக்கு மட்டும்தான் உரியது என்று எண்ணுவது மடமையாகும். அவர் களில் பலர் பலவிதமான பாவங்களை எழுப்பவல்லவர்கள் தான். மற்றவர்களுக்கு இருந்ததைவிட அவர்களுக்கு வாழ்க்கை ஓரளவு சுலபமாகவே இருந்தது.

வழிகள் சந்தேகத்துக்கு இட மின்றித் தீர்மானமாகிவிட்டன - பலருக்குப் பெரும் பிரச்சனை களாக இருந்த பலவிஷயங்கள் அவர்களுக்குப் பிரச்சனையே யல்ல." என்னும் வரிகள் அவர்களை பரிதாபத்துக்குரியவர்கள் என்னும் ஒற்றை எண்ணத்தை விடுத்து அந்த வாழ்வியலை ஏற்றுக் கொண்டு  மனதை பக்குவப்படுத்திக் கொண்டவர்கள் என்னும் வேறு பார்வையால்  பார்க்கவும் தூண்டுகிறது. அந்த நிலையில் வாழ்ந்த அக்ரஹாரத்து அன்றைய  பாட்டிகள் சிலர் தன் குடும்பத்தை ஒற்றைப் பெண்ணாக கரை சேர்த்த சுயசார்புக்கு உதாரணமானவர்களாகஇக்கதையில் உலவுகின்றனர்.

 

உலகின் பெரிய போர்களின் முனையில் வாழ்ந்து மீண்டு பெரும் அனுபவங்களைப் பெற்ற மூர்த்திக்கு , சாத்தனூர் சர்வ மானிய அக்ரஹாரத்துப் பெண்கள் வாழ்க்கை மீதும் அடுத்த நொடியின் மீதும் வைத்திருக்கும் நம்பிக்கை, அவர்களின் மனமுதிர்ச்சி, சூழலுக்கேற்ப தன்னை தயார்படுத்திக் கொள்ளும் திறன் ஆகியவை அதீத ஆச்சரியத்துக்குரியவையாக பல நேரங்களில் தோன்றுகின்றன‌.

 

"கலி முற்றுவது மனிதனால்தான் என்றால், கலி மாறுவதும் மனிதனால்தானே ஏற்பட வேண்டும்?"

"மனிதனுக்கு வாழ்க்கையைச் சுலபமாக்குகிறது விதி என்கிற சித்தாந்தம்"

போன்ற வரிகள் சற்றே சிந்தனையைத் தூண்டுகின்றன.

 

மூர்த்தி ஒவ்வொரு மனிதரையும் சந்திக்கும் போதும் அவர்களது வாழ்க்கைப் பற்றி, சுபாவம் பற்றி அவனிடம் சொல்லப்படும்போதும், அதே போன்ற நம் வாழ்வில் சந்தித்த  மனிதர்கள் நினவில் நிழலாடும் அளவுக்கு உயிரோட்டமாக வரிகள் வடிக்கப்பட்டுள்ளன.

ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டுக்குப் பின் இப்போது ஒரே நாளின் நிகழ்வுகளைச் சொல்லும் கதைகள், குறும்படங்கள், திரைப்படங்கள் சில வெளியாகியிருந்தாலும் அவற்றிற்கெல்லாம் முன்னோடியாக இந்த நாவல் இருந்திருக்க கூடும்

 இந்த நாவலை எழுதும்போது ஒரு வேகம் இருந்ததாக ஆசிரியர் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். அதே வேகத்தையும் விறுவிறுப்பையும் படிக்கும் போதும் உணர முடிகிறது. புத்தகத்தை ஒரே அமர்வில் படிக்கவைக்கும் அளவுக்கான ஆர்வத்தைத் தூண்டும் நிகழ்வுகள் அணி வகுக்கின்றன.

 

ஒரு நாள்; மீண்டும்  நினைத்துப் பார்க்க வேண்டிய நாள்


1 comments:

Unknown said...

Super raji.... அருமையான பதிவு....