க‌விதை மாதிரி..

Monday, May 9, 2011
அதிகாலைச் சூரியனே
நட்சத்திரப் போர்வையை பத்திரமாய் மடித்துவை
எங்கள் ஓட்டைக் குடிசை குழந்தைகளுக்கு
வாய்த்த அழகிய கிலுகிலுப்பை அது

********************************************************************

மனமெனும் கடலில்
உன் நினைவெனும்
ஆயிரம் நட்சத்திரங்கள்..
கரையோரத்தில் நான்
அவை வானின் பிரதிபலிப்புகள்
எனும் உண்மை அறியாமல்


.

அநாகரிகம்

Friday, May 6, 2011
அடுத்த கண்டத்தின் அடக்கு முறைகளுக்கு
ஆவேசப்பட்டாலும்

காணாத் தொலைவிலிருக்கும் என்
இனத்தவன் கொடுமைக்குத் துடித்தாலும்

வேறொரு மாநில வேங்கைகளுக்குப்
பலியான மனிதனுக்கு அக்கறைப்பட்டாலும்

சமூக அக்கறையாக பார்க்கப்படும்
என் ஆத்திரம் அண்டை வீட்டு
ஆணுக்கு ஆதரவாக‌ வரும்போது
மட்டும் அநாகரிகமாகிறது

.

மூனு ரெண்டு ஒன்னு....

Wednesday, May 4, 2011
அசல் இங்கே இருக்கு.. இது நகல் மட்டுமே

எல்லா உணவுப் பண்டங்களிலும்
யாரோ ஒருவரின் பசி
ஒளிந்துதான் கிடக்கிறது
சிலசமயம் அவர் அறிந்து
பலசமயம் அறியாமல்
__________________________________________________________________


பசித்திருப்பதின்
அவஸ்தைகளை அளக்க
கருவிகளும் இல்லை
கற்பனையிலும் முடிவதில்லை
பசித்திருத்தலில் மட்டுமே
அறிய முடிகிறது
_________________________________________________________________
யாரோ செய்துபார்த்த
ஏதோ ஒரு கைமணம்
எல்லா உணவிலும்
கரண்டி நீட்டிப் படுத்திருக்கிறது
தீய‌வைப்பதோ
வேகாமல் எடுப்பதோ
உப்புக்கரிப்பதோ
சப்பென இருப்பதோ
சமையல்காரர் மூடைப்பொருத்து


.