அந்த கலெக்டர் பங்களா என்ன விலை?

Tuesday, February 5, 2019
புதியதாக ஒரு வீட்டுக்கு குடி புகும் வேளை. இரண்டு நாட்களாக அலைச்சலோ அலைச்சல். அதை எடு, இது வேணாம், ஏய்.. கீழ போட்டுராத, போச்சா.. என்னும் குரல்கள் சூழ்ந்தும் ,அது எங்க தாத்தாக்கு தாத்தாவோட கடிகாரம் தெரியுமா... ஓ... ஒடைஞ்சது பழசுதானா..நான் கூட புதுசோனு பயந்துட்டேன்...எனச் சில வடிவேல்களிடம்  ராதாரவியாய் சிக்கித் திணறியும் எல்லாம் முடித்து... ஒரு வழியாய் அயர்ந்தெழுந்த அதிகாலை..

சூடா ஒரு கப் டீ கிடைக்குமா என நாக்கும் மனமும் கெஞ்சித் தவித்ததால் பால் வாங்க கால்கள் நடை போட்டன. வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் கண்ணில் பட்டது அந்த நேரத்தில் இளநீர் கடை.... இது போல அதிகாலை மங்கொளியில் இளநீரை எப்போவாவது பார்த்திருக்கிறோமா என நினைவுப் பெட்டகத்தின் அடுக்குகளில் தேடியதில் வெறுமையே மிஞ்சியது. அக்கணத்தை கேமராவில் சுமந்து அடுத்த அடியை எடுத்து வைத்தேன்.

பால் கடையை நெருங்கும் சமயம் , ஆவி பறந்து கொண்டிருந்தது. "என்னது அது.. ஒருவேளை பால் பூத்ல தீ பிடிச்சுருச்சா? " ச்சே.. காலங்காத்தால நல்ல நாளும் அதுவுமா புத்தி போகுது பாரு  என தலையிலடித்துக் கொண்டு, வலிக்காம மெதுவாத்தான், கடையை அடைந்ததும் தெரிந்தது பால் கடையின் ஒரு பகுதியான டீ கடை..

பால் நழுவி டிகாக்ஷனில் விழுந்தது மாதிரியான சூழலில், டீ யைவே குடிச்சிட்டா என்ன? டீ கடைலயா?!, ரோட்ல நின்னா!?... சுத்தியும் குடி மகன்கள் இருப்பதாக காற்று வேறு அறிவிக்கிறதே?!..இத்தனை கேள்விகளையும் வென்றது நாசியில் நுழைந்த அதிகாலைத் தேநீரின் மனம்.
"ஒரு டீ போடுங்க;அப்படியே அரை லிட்டர் பால் குடுங்க"
தேநீர் கைக்கு வந்தது.


 அந்த ச்ச்சிலீர் குளிரில் அவசரமாக ஓடும் பள்ளிக் குழந்தைகளையும், அதைவிட அவசரமாக நடைபயிலும் வளர்ந்த குழந்தைகளான முதியோரையும், ஆங்காங்கே விரையும் வாகனங்களையும் பார்த்த தருணம் மனதில் மகாராணியாய் முடிசூட்டிக்கொண்டு பேச விரும்பியது " ஏம்ப்பா... யாராவது இந்த ஈரோடு என்ன வெலைனு கேளுங்க.. வாங்கிப் போட்ருவோம் கெடக்கட்டும்..ஆமாமா.... அந்த கலெக்டர் பங்களாவும் சேர்த்திதான்"



0 comments: