சங்கமம் - 2010

Tuesday, December 7, 2010










டிசம்பர் மாதம்.. கொண்டாட்டங்களின் மாதம்... பலப்பல பண்டிகைகள்,பல விடுமுறை நாட்கள்,வரப்போகும் புதிய வருடத்தினை வரவேற்கும் குறுகுறுப்பு இவையெல்லாம் அடங்கிய டிசம்பரின் மற்றுமொரு மனதில் நிற்கும் நிகழ்வு பதிவர்கள் வாசகர்கள் சங்கமம்‍‍ 2010.


அத்தகையதொரு மகிழ்வான தருணத்தில் மனம் மகிழ ஈரோடு வலைப்பதிவர் குழுமம் அன்புடன் அழைக்கிறது.உங்கள் வருகைக்காக ஆர்வமுடன் காத்திருக்கிறோம்.


நாள் :26/12/2010
நேரம்: காலை 11.00 மணி

மேலும் விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள‌



கதிர் -
99653-90054
பாலாசி - 90037-05598
கார்த்திக் - 97881-33555
ஆரூரன் - 9894717185
வால்பையன் - 9994500540
ராஜாஜெய்சிங் - 9578588925
சங்கமேஸ் - 9842910707
ஜாபர் - 9865839393
நண்டு நொரண்டு - 9486135426


erodetamizh@gmail.com

என்னவென்று பெயரிட‌

Tuesday, November 2, 2010
நம் கணினியின் கடவுச் சொற்களில்
கரைந்து போகின்றன‌
என் காத்திருப்பும்
உன் காதலும்

****************************************************
எப்படியாகிலும் வாழ்ந்துவிட
வேண்டுமென்று போராடிக்
கொண்டிருக்கிறதென் வைராக்கியம்
உச்சி வரை பற்றி எரியும்
உன் நினைவுத் தீயின் தகிப்பினூடேயும்
*******************************************************
நீ என்னை நினைப்பதும்
நான் உன்னை மறப்பதுமான
பாவனைகளில் ஒளிந்திருக்கிறது
நம் காதலின் உன்மத்தம்.

.

கணக்கு சொல்லித்தரேன்..வாங்க..Part 2. (28/09/2010)

Tuesday, September 28, 2010
போன பதிவில் சுலப கணித வழிமுறைகளைப் பார்த்தோம்.இந்தப் பதிவில் அதன் தொடர்ச்சியாக எண்களை சுலபமாக ஸ்கொயர் பண்ணும் வழிமுறைகளைப் பார்ப்போம்.

2ல் தொட‌ங்கும்,இரு ஸ்தான‌ எண்க‌ள்.
(Two Digit numbers in 20s)

1.க‌டைசி இல‌க்க‌த்தில் ஸ்கொயரைக் கண்டுபிடித்து அத‌ன் ஒற்றை ஸ்தான‌த்தை ம‌ட்டும் எழுதிக் கொள்ள‌வும்.
2.இதன் மீதத்தை க‌டைசி ஸ்தான‌த்தை 4 ஆல் பெருக்கி வ‌ரும் விடையுடன் கூட்டவும்.இதில் ஒற்றை ஸ்தானத்தை மட்டும் எழுதவும். மீதத்தை 4 உடன் கூட்டவும். இதுதான் விடையின் முத‌ல் ஸ்தான‌ம்.

23ஐ எடுத்துக் கொள்ளுங்க‌ள்.
1. Square of 3 =09 (9)
2.4X3 =12 (29)
3.4+1 =5 (529)





3ல் தொட‌ங்கும்,இரு ஸ்தான‌ எண்க‌ள்.
(Two Digit numbers இன் 30s)

1.க‌டைசி இல‌க்க‌த்தில் ஸ்கொயரைக் கண்டுபிடித்து அத‌ன் ஒற்றை ஸ்தான‌த்தை ம‌ட்டும் எழுதிக் கொள்ள‌வும்.
2.இதன் மீதத்தை, க‌டைசி ஸ்தான‌த்தை 6 ஆல் பெருக்கி வ‌ரும் விடையுடன் கூட்டவும்.இதில் ஒற்றை ஸ்தானத்தை மட்டும் எழுதவும். மீதத்தை 9 உடன் கூட்டவும். இதுதான் விடையின் முத‌ல் ஸ்தான‌ம்.

38ஐ எடுத்துக் கொள்ளுங்க‌ள்.
1. Square of 8 =64 (4)
2.6X8 =54 (44)
3.9+5 =14 (1444)



4ல் தொட‌ங்கும்,இரு ஸ்தான‌ எண்க‌ள்.
(Two Digit numbers இன் 40s)
1.க‌டைசி இல‌க்க‌த்தில் ஸ்கொயரைக் கண்டுபிடித்து அத‌ன் ஒற்றை ஸ்தான‌த்தை ம‌ட்டும் எழுதிக் கொள்ள‌வும்.
2.இதன் மீதத்தை, க‌டைசி ஸ்தான‌த்தை 8 ஆல் பெருக்கி வ‌ரும் விடையுடன் கூட்டவும்.இதில் ஒற்றை ஸ்தானத்தை மட்டும் எழுதவும். மீதத்தை 16 உடன் கூட்டவும். இதுதான் விடையின் முத‌ல் ஸ்தான‌ம்.

44ஐ எடுத்துக் கொள்ளுங்க‌ள்.
1. Square of 4 =16 (6)
2.8X4 =33 (36)
3.16+3 =19 (1936)

இன்னிக்கு கிளாஸ் முடிஞ்சிதே.. என்சாய்..

கணக்கு சொல்லித்தரேன்..வாங்க..

Monday, September 27, 2010
டீச்சர் வேலை பார்த்துகிட்டு உங்களுக்கு எல்லாம் ஒண்ணும் சொல்லிக்குடுக்காம மொக்கை போட்டுட்டே எவ்ளோ நாளுக்கு இருக்கறது..அதனால நானும் உபயோகமான பதிவு போடறாதுன்னு முடிவு எடுத்துட்டேன்..( பதிவு போட சரக்கு காலி ஆனதாலதான் இப்பிடி ஒரு முடிவு எடுத்தேன்க்கிற உண்மையை கண்டுபிடிச்சவங்க‌ எல்லாம் கம்முன்னு இருக்கணும்.. பின்னுட்டத்தில எல்லாம் சொல்லக் கூடாது.)


படிக்கிற காலத்திலயே பலபேருக்கு கணக்குன்னா பிணக்கா இருக்கும்.ஆனால் இந்த கால்குலேஷன்ஸ் அன்றாட வாழ்க்கையில எல்லா நேரத்திலயும் வந்து டார்ச்சர் பண்ணும்.இப்போல்லாம் 1+2 எவ்ளோன்னு கேட்டாக்கூட கால்குலேட்டரைத் தேடற நெலமைல தான் பலபேர் இருக்கோம்.
இதிலருந்து கொஞ்சம் தப்ப்பிக்கறதுக்கு சில வழிகள் இருக்கு.

ஸ்கொயர் பண்ணுதல்,பெருக்குதல்,வகுத்தல் இதெல்லாம் செய்யறதுக்கு பல சுருக்க வழிகள் இருக்கு.அதுல எனக்குத் தெரிஞ்சவரைக்கும் உங்களுக்கும் சொல்றேன்.கேட்டுக்கோங்க.

1. 5 ல் முடியும் ஒரு இரண்டு டிஜிட் நம்பரை ஸ்கொயர் பண்ணனுமா?(Eg.25,65,95,etc)


1.அந்த நம்பரின் முதல் டிஜிட்டுடன் 1 ஐ கூட்டி வரும் விடையுடன் அந்த நம்பரைப் பெருக்குங்கள்.
2.வரும் விடையைத் தொடர்ந்து 25 என்னும் நம்பரை எழுதிக் கொள்ளுங்கள்.

Eg; Square of 65
= (6X(6+1))25
=4225


2.ஒரு எண்ணை 5ஆல் வகுக்க வேண்டுமா?(Eg:67/5)
அந்த எண்ணை இரண்டால் பெருக்கி,டெசிமல் பாயிண்டை ஒரு டிஜிட் இடப்பக்கம் நகர்த்துங்கள்

Eg: 56/5

= 56X2 = 112 (Move the decimal to left)
=11.2


3. 10க்கு அருகிலோ,100க்கு அருகிலோ,1000க்கு அருகிலோ இருக்கும் எண்களைப் பெருக்க வேண்டுமா?

Eg: 8X7,94X96,990X994

1.முதல் எண்ணை 100லிருந்து கழித்து வரும்விடையை A என குறித்துக் கொள்ளுங்கள்
2.அதேபோல் இரண்டாம் எண்ணை 100லிருந்து கழித்து வரும் விடையை B என குறித்துக் கொள்ளுங்கள்
3.இப்போது A வை முதல் எண்ணிலிருந்தோ B யை இரண்டாம் எண்ணிலிருந்தோ கழித்து வரும் விடையை எழுதிக் கொள்ளுங்கள்.
4.அதனைத் தொடர்ந்து A மற்றும் B யை பெருக்கி வரும் விடையை கீழ்வருமாறு எழுதுங்கள்.
ஒரிஜினல் நம்பர் ஒரு எத்தனை இலக்கமாக இருக்கிறதோ அத்தனை இலக்கத்தில் A,B பெருக்கிய விடையை எழுதுங்கள்
இதுதான் பெருக்கிய விடை.


Eg: 94 X 95

A =6 B=5

94-5 = 95-6 =89

AXB =30

Ans = 8930
997002


Eg.2. 997 X992
A=3
B=8

997-8 =992-3 =989
3X8 = 024 (Original number is in 3 digits)

Ans = 989024


இன்னிக்கு பாடம் அவ்ளோதான் .. போயிட்டு அடுத்த கிளாஸ்க்கு மறக்காம வந்துருங்க.

உங்கள்ல பலபேருக்கு இதெல்லாம் ஜுஜுபின்னு தெரியும்..ஆனாலும் வந்து பொறுமையா படிச்சதுக்கு நன்றிங்க‌.

ஐ லவ் யூ டாடி

Wednesday, September 22, 2010
அப்பா.. உங்களுக்கு ஒரு லெட்டர் எழுதணும்ன்னு நானும் ரொம்ப நாளா நினைச்சு தள்ளிப் போட்டுட்டே இருந்தேன்..இன்னிக்கு எழுதிதான் பாக்கலாம்ன்னு ஒரு முடிவுக்கு வந்துட்டேன்.
அப்பா.. நான் செய்யும் எல்லா விஷயத்தையும் நீங்க ஏத்துக்கறதில்லைன்னு எனக்கு ஒரு மனக்குறை பல நாட்கள் இருந்துருக்கு.. வேற வீட்ல பொறந்திருந்தா நல்லா இருந்துருக்கும்ன்னு கூட நெனச்சிருக்கேன்.ஆனால் நான் வளர வளரத்தான் தெரியுது.. நீங்க ஏத்துக்காத என்னோட எல்லா முடிவுகளும் எனக்கு நன்மைதான் தந்திருக்கு. சின்ன வயசுல என் கிட்ட அதிகமா இருந்த பொம்மைகள எடுத்து பக்கத்தில் இருந்த ஏழைக் குழந்தைகளுக்கு கொடுத்த கணம், என்னை வெளியில் கூட்டிப் போறேன்னு சொல்லிட்டு,கிளம்பறப்ப‌ யாரோ ஒருத்தர் உதவின்னு வந்தவ உடனே அவ‌ங்களோட போன நிமிடம்ன்னு பல நேரங்கள்ல நினைச்சிருக்கேன்.. என்னை மாதிரி ஒரு நல்ல புள்ள கிடைக்க குடுத்து வச்சிருக்கணும் நீங்கன்னு .. ஆனால், சமீப நாட்களாகத்தான் உணர்கிறேன். உங்களுக்கு மகளாப் பிறக்க நான் தான் கொடுத்து வைத்திருக்கிறேன்...

நான் எவ்வளவுதான் தவறுகள் செய்தாலும் உடனே மன்னிக்கவும் மறக்கவும் முடிகிறது உங்களால்.. ஆனால் நீங்கள் செய்யும் சரியான விஷயங்களையும்,அது என் விருப்பத்திற்கு மாறாய் இருந்தால் என்னால் ஏற்க முடியாமல் போகும் தவறு இனிமேல் நடக்காது...

எல்லாக் குழந்தைகளையும் போல சாதாரண சந்தோஷங்களுடன் என்னை நீங்கள் வளர்க்கவில்லை எனக் கவலைப்பட்டிருக்கிறேன்..ஆனால் அசாதாரண அதீத சந்தோஷங்களை எனக்காக சேமித்து வைத்திருக்கிறீர்கள் என்பதை உணர எனக்கு இத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கிறது.
"அப்பாவாட்டமே புள்ள"அப்படின்னு சிலர் சொன்னப்போல்லாம் "இல்லை எங்கப்பா மாதிரி நான் இல்லை.. ஊருக்கு உழைக்கிறேன்னு லூசுத்தனமெல்லாம் நான் பண்ண மாட்டேன்" என நினைத்த கணங்களுக்காய் வெட்கித் தலைகுனிகிறேன்.

பண‌ம் ம‌ட்டுமே வாழ்க்கை அல்ல‌.. அது அல்லாத‌ ம‌ற்றவைதான் அதி அற்புத‌மான‌வை என்ப‌தை உண‌ர‌ வைக்கிறீர்கள் உங்க‌ள் வாழ்க்கையால்.அதை உங்க‌ளிட‌மிருந்து ம‌ற்றவ‌ர்க‌ள் சுல‌ப‌மாய்ப் ப‌ற்றிக் கொண்டார்க‌ள்.என‌க்குத் தான் நாட்க‌ள் அதிக‌ம் எடுத்திருக்கிற‌து.வெகு சாதார‌ண‌ ச‌ந்தோஷ‌ இழ‌ப்புக‌ளுக்காய் நான் அழுத‌ க‌ண‌ங்க‌ளில், நீங்க‌ள் க‌ண்முன் காட்டிய‌ அதிச‌ய‌ங்க‌ளைத் த‌வ‌ற‌ விட்டிருக்கிறேன்.

தவறிய கணங்களுக்காய் வருந்தப் போவதில்லை நான்.வரப் போகும் கணங்களில் உங்கள் எண்ணங்களைச் செயலாக்கும் மகளாய் வாழ்ந்து காட்டப் போகிறேன்.
ஐ லவ் யூ டாடி

.

மனதில் மலர்ந்தவை

Tuesday, September 21, 2010
கல்விக் கட்டண உயர்வு என்பது இப்போது பற்றி எரியும் பிரச்சினையாக நம்மிடையே நிலவுகிறது.
பள்ளி நிர்வாகங்கள் கட்டண உயர்வுக்கு சொல்லும் காரணம்.பெற்றோர் எதிர்பார்க்கும் அனைத்து வசதிகளையும் தர அரசு நிர்ணயித்த கட்டணத்தால் முடியாது என்பதே. இந்நிலையில் பெற்றோர்,அதே பள்ளியில் தான் படிக்கவைப்பேன் ஆனால் கட்டணம் குறைவாக வாங்க வேண்டும் என அடம் பிடிக்க வேண்டுமா? அப்படி அதிகம் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளில் படிக்க வைப்பதே பெருமை என நினைக்காமல்,அத்தகைய பள்ளிகளை புறக்கணித்து விட்டு,அரசுப் பள்ளிகளை நாடுவதைப் பற்றி பெற்றோர் ஏன் சிந்திக்கக்கூடாது?
அரசுப் பள்ளி மாணவர்கள் எந்த விதத்திலும் தனியார் பள்ளிகளுக்கு சோடை போனதல்ல.சமீபத்திய தேர்வு முடிவுகள் அதை உறுதிப்படுத்துகின்றன.

அரசுப் பள்ளியில் குறைந்த கட்டணம் செலுத்தி அடிப்படைக் கல்வியைப் பெற்றுக் கொண்டு,படிப்பல்லாத பிற திறமைக‌ளான கம்ப்ப்யூட்டர்,கராத்தே , நீச்சல் போன்றவற்றை தனியாக கட்டணம் செலுத்தி வெளியிடங்களில் கற்றுக் கொள்ள ஏன் முயலக்கூடாது?
***********************************************************************************
சில நேரங்களில் ஒருவர் தவறு செய்யும் தவறால் விளையும் மோசமான விளைவுகளை விட, அந்தத் தவறுக்கு நாம் கோபப்படுவதால் வரும் தீய விளைவுகள் மிக மோசமாகின்றன. எவர் மீதும் கோபப்படும்முன் அதன் தீய விளைவுகளை யோசியுங்கள்.அந்தக் கோபத்தைத் தூக்கிப் போடுவதால் என்ன குறை நமக்கு வந்துவிடப் போகிறது என்பதையும் சில நிமிடங்கள் தனிமையில் யோசியுங்கள்.கண்டிப்பாய் நீங்கள் எடுக்கும் முடிவு நல்லதாகவே அமையும்.

***********************************************************************
விளை நிலங்கள் வீட்டு நிலங்களாவதைப் பற்றி நிறைய பேர் கவலைப்பட்டப்போது எல்லாம், அதன் கொடுமை என்னால் உணரப் படவில்லை.அண்மையில் ஒரு கிராமத்துக்கு சென்ற பயணத்தின் போதுதான் நிதர்சனமாய் உணர்ந்தேன்.ஆறு மாத கால இடைவெளியில் ஏறத்தாழ 50 ஏக்கர் நிலங்களில் விவசாயம் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த கிராமத்தின் மொத்த விளை நிலங்களே 100 ஏக்கருக்கும் குறைவாகத்தான் இருக்கும்.மீதம் இருக்கும் கொஞ்ச நிலங்களும் வீடாக மாறிப்போனால் விவசாயம் என்ன ஆகும்?

********************************************************************

இமெயிலில் வந்தது
கீழேயுள்ள படம் ரத்தன் டாடாவுக்கு தரப்பட்ட ஒரு அன்பளிப்பு...இதைப் பார்க்கும் போது ஏதோ குழப்பமான வண்ணக் கலவையாகவே தோன்றுகிறது அல்லவா?





இதன் நடுவிலுள்ள வட்டத்தில் ஒரு பளபளப்பான இரும்பு உருளையை வைக்கும்போது அதில் தோன்றுவது ரத்தன் டாடாவின் உருவம்.






இதைச் செய்தவர் மிகப் பிரபல‌ ஓவியரோ,விஞ்ஞானியோ அல்ல.சாலையில் படம் வரையும் ஒரு சாதாரண மனிதர்.அரும் பெரும் திறமைகள் எங்கெல்லாம் ஒளிந்திருக்கின்றன பாருங்கள்.

.

உனக்கான எனது

Saturday, September 11, 2010
தூசி படிந்த கதவில்
உன் கைப்பிடியின் பிம்பம்..
துடைக்காமல் மறியல் செய்யுதே
என் கைகள்....

*************************************

உன் ஸ்பரிசம் பட்ட
என் கைக்கடிகாரமும்
நகர மறுக்குதே
மீண்டும் நீயில்லாமல்

*************************************



உன் முதற் கோபத்தால்
விளைந்த என் கண்ணீர் துளி
அவசரமாய் சேமிக்கப் பட்டது
இனிக்கும் துளியாய்
உதடுகளில்
*************************************


உன் கால் சுவடுகளில்
தடம் பதிக்கவா
இணையாய் நடக்கவா
தெளிவில்லாமல் தவிக்குதென்
கால்கள்


.

அந்நாட்க‌ளில் தெரிய‌வில்லை

Friday, September 10, 2010
உனக்கினையாய்
உய‌ர‌மாய் வளர‌
எம்பிக் குதித்த
நாட்களில் தெரியவில்லை

நீ எப்போதும் உடுத்தும்
நிற‌த்திலேயே என்
அல‌மாரி நிறைத்த
நாட்க‌ளில் தெரிய‌வில்லை


உன் கண்ணென்னும்
காந்த‌த்தின் வ‌லிமைக்கு
ப‌ய‌ந்து, ம‌ண் பார்த்த‌
நாட்க‌ளில் தெரிய‌வில்லை


உன் க‌ள்ள‌ச் சிரிப்பின்
பொருளை அறிந்தும்
அப்பாவியாய் ந‌டித்த‌
நாட்க‌ளில் தெரிய‌வில்லை


அந்நாட்க‌ளின் நீளம்
எவ்வ‌ள‌வு குறுகிய‌தென்ப‌து
.

சொல்ல‌டி எஞ் செல்ல‌க்கிளி

Monday, September 6, 2010
ஒறவெல்லாம் தெரண்டிருக்க
ஒரு நாளு ஊருக்குள்ளே
மாமனவங் கை புடிச்சு
சுத்திவர ஆசையடி

வெள்ளி நிலா நிற்கையிலும்
சூரியந்தான் எரிக்கையிலும்
மாமனவன் விரல் புடிச்சு
அடியெடுக்க துடிக்குதடி

அறுப்புக் கால‌க் காத்தாக‌
வெத‌ப்பு கால‌ மழைபோல‌
மாம‌ன‌வ‌ன் இருப்பு
ம‌ன‌ச‌த்தான் நெறைக்குத‌டி

முட்டும் ஆட்டுக்குட்டி
கொத்தும் கோழிக்குஞ்சு
எல்லாமே மாம‌னாட்ட‌
தோணுத‌டி என்ன‌ செய்ய‌

வெத நெல்லா வச்சிருக்கும்
மாம‌ன‌வ‌ன் நெனப்பு
பதராகப் போயிடுமோ
சொல்ல‌டி என் செல்ல‌க்கிளி


.

ம்ம்ம்ம்ம்

Sunday, September 5, 2010
தென்றல் வீசும் மாலையிலே
சாளரச் சாரலிலே
நேரம் கடத்திய வேளையிலே
உதித்ததொரு சூரியனே

உன் கதிர் கொண்டு
மனம் கவர்ந்து
செயல் தடுத்து
ஆட்கொண்டவனே

உயிர் கொடுக்கும்
பகலவனே
உயிர் எடுக்கும்
மாயம் கற்றது எப்போது

நிலமுறங்கும் பொழுதினிலும்
நிலவுதிக்கும் நேரத்திலும்
கனவிலும் நனவிலும்
காட்சி தருபவனே

மற்றவர் காயத்திற்கு
மருந்தாகும் நீ
என் காய‌த்திற்கு ம‌ட்டும்
கார‌ணமானாயே

கவிதைக் கடலின் பேரூழி
எனக்குக் கற்றுத் தருவது
உன்னை மறக்கும் வலியா
உன் நினைவை மறைக்கும் வழியா?

.

கற்கை நன்றே

Saturday, August 28, 2010
இன்றைய நாளில் படிக்கும் மாணவர்களுக்கான கவனிப்புகளும் அறிவுரைகளும் தாராளமாகக் கிடைக்கிறது. அவற்றில் முக்கியமான சிலர் சொல்வது "அதிகாலையில் படித்தால் மனதில் நன்றாகப் பதியும்".
இத்தகைய எண்ணத்தில் பல வீடுகளில் காலை நேரத்தில் மாணவர்களை படிக்கவைப்பதற்காக பெற்றோர் பலவழிகளையும் கையாள்கிறார்கள்.
ஆனால் இது எல்லா மாணவர்களுக்கும் பொருந்துமா எனக் கேட்டால் இல்லை என்பதே மருத்துவர்களின் பதில்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பயோகிளாக் எனப்படும் உயிரியல் கடிகாரம் இயங்குகிறது.மனிதன் பிறந்த நொடி முதல் அவனது அக புற காரணிகளைக் கொண்டு மனிதனின் மனநிலை,உடல்நிலை போன்றவற்றை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கும் இக்கடிகாரம் சில மனிதர்களை அதிகாலையிலும்,சிலரை பின்னிரவிலும் அல்லது முன்னிரவிலும் உற்சாகமாக வைத்திருக்கிறது. அப்படிப்பட்ட உற்சாக மனநிலையில் இருக்கும்போது மனிதனின் செயல்திறனும் கற்கும் திறனும் மிக அதிகமாக இருக்கும். அதனால் பெற்றோர்களே,ஆசிரியர்களே அதிகாலையில் படிப்பது மட்டுமே நன்மை என்னும் கட்டாயத்தை விடுத்து மாணவனின் வசதிக்கு ஏற்ப படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொடுங்கள்.படிக்கும் நேரத்தை முடிவு செய்ய‌ அவ‌ன‌து க‌ற்கும் திற‌னை பல்வேறு நேரங்களிலும் சோதித்து சிறப்பாக கற்கும் நேரத்தைத் வ‌ழ‌க்கமாக்கிக்கொள்ளுங்க‌ள்.

ம‌ற்றுமொரு க‌ற்ற‌ல் தொட‌ர்பான‌ ச‌ர்ச்சைக்குரிய‌ அறிவுரை.கேள்விக‌ளுக்கான விடைக‌ளை எழுதிப் பார்த்த‌ல்.சில‌ ப‌ள்ளிக‌ளில் எழுதுவ‌து ம‌ட்டுமே மாண‌வ‌ர்க‌ளின் க‌ட‌மையாக‌ சொல்ல‌ப்ப‌டுகிறது. தேர்வில் ப‌தில் எளிதாக‌ எழுதுவ‌த‌ற்கு எழுதிப் பார்த்த‌ல் ம‌ட்டுமே தேவை என்கிறார்க‌ள்.ஒரு முறை எழுதிப் பார்ப்பது சரியானதுதான். ஆனால் எழுதுவ‌து ம‌ட்டுமே ப‌ள்ளியில் ப‌ழ‌கும் மாண‌வ‌ன் பேச்சுத் திற‌ன் க‌ட்டாய‌மாக‌ பாதிக்க‌ப்ப‌டுகிற‌து.எந்த‌ ஒரு விஷய‌த்தையும் அவ‌ன‌து சொந்த‌ சொற்க‌ளால் கோர்வையாக‌ சொல்ல‌த் தெரிவ‌தில்லை. க‌ம்யூனிகேஷ‌ன் ஸ்கில்ஸ் என‌ப்ப‌டும் ம‌ற்ற‌வ‌ரோடு தொட‌ர்பு கொள்ளும் திற‌னில் மிக‌வும் பின்த‌ங்குகிறான்.
இதைத் த‌விர்க்க‌ உங்க‌ள் குழ‌ந்தைக‌ளோடு நீங்க‌ள் அம‌ருங்கள். அவ‌ர்க‌ள் ஒரு ப‌க்க‌ம் ப‌டிக்கிறார்க‌ள் என்றால் அதில் என்ன‌ ப‌டித்தார்க‌ள் என்ப‌தை உங்க‌ளிட‌ம் சொல்ல‌ச் சொல்லுங்க‌ள்.சொல்லுத‌ல் என்பது ம‌ன‌ப்பாட‌ம் செய்து ஒப்பித்தலைப் போல‌ அல்லாம‌ல் விவாதிப்ப‌தைப் போல‌வே அல்ல‌து உங்களுக்கு அவ‌ர்க‌ள் ப‌டித்த‌தை விள‌க்குவ‌து போல‌வோ இருக்க‌ட்டும்.

இவை இர‌ண்டையும் க‌டைப்பிடிக்கும் மாண‌வ‌ர்க‌ள்,சிற‌ந்த‌ ம‌திப்பெண்க‌ளைப் பெறுவ‌தோடு ம‌ட்டும‌ல்லாம‌ல் பாட‌ம் த‌விர்த்த‌ பொது திற‌ன்க‌ளிலும் சிற‌ந்து விள‌ங்குவார்க‌ள் என‌ப‌து ப‌ல‌ ம‌ன‌விய‌ல் அறிஞர்க‌ளின் க‌ருத்து.


.

ரவுத்திரம் பழகாவிடில்???

Tuesday, August 24, 2010
சில காலமாக எழுத்தார்வத்துக்கு அணை போட்டு வைத்திருந்தேன்.. அண்மையில் நான் சந்தித்த நிகழ்வொன்று கண்டிப்பாய் யாருடனும் பகிர்ந்தே ஆகவேண்டும் என்னும் உந்துதலை எற்படுத்தி விட்டதால் பதிவிடுதலைத் தொடர்கிறேன்.
பெண்கள் வாழ்வில் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சினை பொது இடங்களில் கண்ணியமான உருவத்துடன் உலவும் சில சில்மிஷ சில்வண்டுகள்.அத்தகைய அல்ப சில்மிஷங்கள் ஆண்களுக்கு சில நிமிட பொழுது போக்காகத் தோன்றினாலும்,அதில் பாதிக்கப்படும் அப்பாவிப் பெண்களின் வாழ்க்கையையே கேள்விக் குறியாக்கிவிடுகிறது.
அத்தகைய ஒரு நிகழ்வு.
சில நாட்களுக்கு முன் ஒரு கல்லூரியில் தொடங்கிய‌ முதலாண்டு வகுப்புகளுக்கு பட்டாம்பூச்சிகளாய் சிறகடித்து வந்த மாணவிகளுள் ஒருத்தியை பற்றித்தான் நான் கூறப்போகிறேன்.
செல்வி என்னும் மாணவி மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒரு மலைகிராமத்தில் இருந்து தன் கடும் முயற்சியில் படித்து பொறியியல் படிப்புக்கான இடம் பெற்றாள்.கல்லூரிப் படிப்புக்கான பணம் கூட கட்டமுடியாமல்,கல்லூரித் தாளாளாரின் சிறப்பு ஒதுக்கீட்டில், கட்டணச் சலுகை பெற்ற மாணவி. தான் எதையாவது சாதிக்க வேண்டும் என்னும் உத்வேகம் நிரம்பப் பெற்றிருந்தாள்.கல்லூரியில் தன் அப்பாவித்தனத்தால் அனைத்து ஆசிரியர்களின் கவனத்தையும் ஈர்த்திருந்தாள்.
நகரத்தின் நரகங்கள் ஏதுமறியாக் குழந்தையாகவே இருந்த அவளுக்கு ஊரைச் சுற்றிக்காட்ட,அவளது தோழிகள் அழைத்துப் போயிருக்கிறார்கள். பேருந்தில் அவளுக்குப் பின் நின்றிருந்த ஏதோ ஒரு மிருகத்தில் கேவலமான சில்மிஷச் சீண்டலால் பயந்து போன செல்வி,மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறள் .ஆண்கள் அனைவரும் மோசம் என்னும் எண்ணம் அச்சிறுமியின் மனதில் பதிந்திவிட்டது.ஆண் ஆசிரியர்களைக் கூட அவளால் இயல்பாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.அதன் விளைவு அவள் படிப்புக்கு விழுந்த்து முட்டுக்கட்டை.படிப்பை விடுத்து தன் வீடு திரும்பிய மாணவியை கிராமத்துப் பெற்றோர் கட்டாயப்படுத்தியதன் விளைவு.அவளது மரணம்.ஆம்..அவள் தன் உயிரை மாய்த்துக் கொண்டாள்.

ஒரு வளரும் பயிரின் வாழ்வு முளையிலேயே கிள்ளி எறியப்பட்டதற்குக் காரணமானவனுக்கு என்ன தண்டனை கிடைக்கப்போகிறது.இத்தகைய மனிகர்களுக்கு மனசாட்சி என்பதே கிடையாதா? தனது ஏதோ ஒரு உணர்ச்சித் தூண்டலுக்குப் பலியாக்கப்படும் அப்பாவிப் பெண்களைப் பற்றி இவர்கள் என்னதான் நினைத்துக் கொண்டிருப்பார்கள்? பெண்கள் எல்லாம் இவர்களால் ஆட்டுவிக்கப்பட படைக்கப்பட்ட பொம்மைகள் என்றா?
"ரவுத்திரம் பழகா"விடில் பெண்கள் வாழ முடியாதா?

.

நன்றி மக்களே

Sunday, July 11, 2010
மக்களே.. இன்றுவரை என் வலைப்பூவுக்கு ஆதரவு அளித்தமைக்கு நன்றி.இனிமேல் இந்த வலைப் பூவில் எந்த புதிய பதிவும் வராது..

அனைவருக்கும் நன்றி

நானில்லாமலென்ன‌?

Saturday, June 19, 2010
அள்ளி அள்ளிச் சாப்பிட்ட
ஆசை காலியான‌து
பில்லைக் க‌ண்ட‌தும்



தேர்வுத் தாள்களில்
வரைந்து வைக்கிறது
கால இறகு முட்டை மதிப்பெண்களையே


எந்த ருசியும் பிடிப்பதில்லை
ஊட்டி ரோட்டில் குழந்தையின்
ஐஸைப் பிடுங்கிச் சுவைத்தபின்


தலையில் மோதிப்
பிரியும் காற்று
எடுத்துச் செல்கிறது ஒட்டு முடியை

வேறென்னன்னு கேட்டார் இல்ல இவரு.. இங்கன வந்து பார்த்துக்கச் சொல்லுங்க‌

பிளாக்கும் பின்னூட்டமும் பின்னே ஆறு டவுட்டும்

Wednesday, June 2, 2010
1.ரொம்ப யோசிச்சு சீரியசா ஒரு போஸ்ட் போடறோம்ம்னு நெனச்சு போஸ்ட்ப் போட்டுட்டு ரிப்ரெஷ் பண்ணி போஸ்ட்ப் பாக்கறதுக்குள்ள வந்து கும்மிப் பின்னூட்டங்களாப் போட்டு கும்மறாங்களே.. அந்த நேரத்தில் அவங்க ஆபீஸ் மேனேஜரோ,வீட்டுத தங்கமணியோ அவங்கள எந்த வேலைக்கும் கூப்ட மாட்டாங்களா??!!!


2. நாம உண்மையிலெயே நல்லா எழுதுன போஸ்ட் நல்லாருக்கான்னு அடுத்தவங்ககிட்ட கேக்காம இருந்துட்டு செம்ம மொக்கை போஸ்ட்க்கு மட்டும் கருத்து கேட்டு அதுவும் நல்லா இருக்குன்னு பதில் வரணும்ன்னு எதிர் பார்ர்க்கறோமே.. லாஜிக்படி இது சரியா?

3.நாம‌ போஸ்ட் போட்டுட்டு சாட்,ஜிமெயில்,எஸ்.எம்.எஸ்ன்னு எப்பிடிக் கூப்ப்டாலும் ந‌ம்ம‌ பிளாக் ப‌க்க‌ம் வ‌ராத‌வ‌ங்க‌,போஸ்ட் போடாம‌ பிரேக் விட்டா ம‌ட்டும் க‌ரெக்ட்டா வ‌ந்து எழுத‌ற‌தே மொக்கை அதையும் தொட‌ர்ச்சியா எழுத‌ மாட்டியான்னு கேக்க‌றாங்க‌ளே அது எப்பிடி??

4.போஸ்ட் போட உக்காந்தா அடம்புடிக்கற சிந்தனையும் சொற்களும், யாராவது ஒரு கைப்புள்ள பிளாக்ல கும்மும்போது ம‌ட்டும் ச‌ராமாரியா வ‌ருதே..அதுவ‌ரைக்கும் இந்த‌த் திற‌மையெல்லாம் எங்க‌ ஒளிஞ்சிருக்கும்?

5.பிளாக் அல்லாத உலகத்துல் வெளில‌ வ‌ராத‌ ந‌ம்ம‌ இலக்கிய‌தாக‌மும்,உல‌க‌ அறிவும்,த‌மிழ் ப‌ற்றும் பிளாக்குல‌ ப‌ற்றும் தாராள‌மா பொங்குவ‌து ஏன்?

6.பிளாக்குல‌ காலேஜ‌ப் ப‌த்தியும் கிளாஸ‌ப் ப‌த்தியும் பேசினா திட்டாத‌வ‌ங்க‌, கிளாஸ்ல‌ பிளாக்க‌ப் ப‌த்தி பேசினா டென்ச‌ன் ஆக‌றாங்க‌ளே.ச‌ட்ட‌ங்க‌ள் இட‌த்துக்கு இட‌ம் மாறுப‌டுமா?



மக்களே இது சும்மா.ஜுஜுபி.. நான் வெறும் அம்புதான்.. எய்யப்பட்டது இங்க இருந்துதான்...


.

கடவுளும் நானும்..தொடர் பதிவு

Tuesday, June 1, 2010
கடவுள் என்பவர் எனக்கு ஒரு சுவாரஸ்யமான தோழமையாகவே இன்றுவரை இருக்கிறார்.அதில் கெஞ்சல்,சமாதானம்,அன்பு,பாசம்,கோபம்,விளையாட்டு,சண்டை எல்லாமே உண்டு.

ரொம்ப சின்ன வயசுல அண்ணா கூட கோயிலுக்குப் போனப்போ, தீபத்தை தொட்டுக் கும்பிட்டுக்கோ என அண்ணன் சொல்லப் போக, தமையன் பேச்சைத் தட்டாத தங்கையாக தீபத்தின் மேலேயே கை வைத்துத் தொட்டுக் கும்பிட, அப்புறம் என்ன ஒரே கத்தல்தான், அழுகைதான்.இப்பிடியாக சாமிக்கும் எனக்குமான ரிலேஷன் கொலைவெறிலதான் ஆரம்பிச்சிது

அதுக்கு அப்புறம் சுவாரஸ்யமான காலம் ஆரம்பிச்சது ஒரு மார்கழி மாதத்தில்..
வீட்டுக்கு விருந்தாளியா வந்த ஏதோ ஒரு அத்தை, மார்கழி மாசம் அதிகாலை கோயிலுக்குப் போனா ரொம்ப நல்லது என கொழுத்திவிட்டுப் போக,அதைக் கேட்ட நானும் என் பிரண்டும் நாம் ரெண்டு பேரும் போகலாம்ன்னு முடிவு பண்ணி பிளான் எல்லாம் போட்டோம்.என்ன பிளான் தெரியுங்களா..ரெண்டு பேர்ல யார் அதிகமா போறாங்களோ அவங்களுக்கு அதிக நல்லது நட‌க்கும்.. அதனால கோயில்லுக்கு போகும்போது எல்லாம் சாமிக்கு முன்னாடி ஒரு பூவை வச்சிட்ட்டு வரணும்ன்னு பிளான். யார் முன்ன போரதுன்னு போட்டில நைட் 2 மணி 3 மனிக்கு எல்லாம் கோயில்ல போய் பூட்டி இருக்க கிரில் கேட்க்குல்ல பூவை வச்சிட்டு வருவோம்


இது வீட்ல யாருக்கும் தெரியாது.இப்பிடியே சில வருஷங்கள் மார்கழி மாசம் தொடர்ந்தது.ஒரு நாள் எங்கள் எதிர் வீட்டுப் பெரியம்மா எங்கியோ வெளியூர் போயிட்டு ஒரு மணிக்கோ 2 மணிக்கு நைட் ரிடர்ன் ஆக, அந்த நேரம் பார்த்து நான் கோயிலுக்குப் போக... அவ்ளோதான் அந்த சகாப்தம் அன்றோடு முடிந்த்து

கடவுள் என்பவர் தெருக்கோடி கடைக்காரர் போல நம் ஆசைகள் எல்லாத்தையும் பையில் போட்டு வைத்திருப்ப்பார் .. நம் செய்கைகள் பிடித்தால் அந்தப் பைகளை நமக்கு குடுப்பார்ன்னு நென‌ச்சிட்டு இருந்த காலம் அது.பின் +2 வரை கடவுள் என்னுடன் குறிப்பிடத்தகுந்த பிரச்சினை எதையும் செய்து கொள்ளவில்லை.அதனால் இன்ட்ரஸ்டிங்கா ஏதும் இல்ல‌

+2 வில் ஆசைப்பட்ட படிப்பு சேர மார்க் இருந்தும் குடும்ப சூழ்னிலையால் சேர முடியாமல் போன போது ஆரம்பிச்சது கடவுள் கூட சண்டை..உனக்கு எனக்கும் சரிவராது.. நீ எனக்கு ஏதும் செய்ய மாட்டே.. நீ உன் வழியில் போ.. நான் என் வழியில் போறேன். என சாமி கூட டூ விட்டு இருந்த காலம் கல்லூரிக் காலம்.கடவுள் கூட மனதளவில் டூ விட்டு இருந்தாலும்,கோயிலுக்கு யார் கூப்டாலும் போயிடுவேன்.கோயில போய் சாமி முன்னாடி நின்னுகிட்டு "ம்ம்.. நல்லாருக்கியா.. நான் உன்னைக் கும்பிட வரல.உன்னோட பக்தைக்கு கம்பெனிகுடுக்க வந்தேன். அப்படின்னு மனசுக்குள்ள சொல்லிட்டு நின்னுட்டு இருப்பேன்

பின்னர் முதுகலையில் பக்திமயமான தோழிக்கு கம்பெனி குடுக்க அடிக்கடி ஒரு புது கோயிலுக்குப் போக ஆரம்பித்து அக்கோயிலின் அமைதியான அழகான சூழ்நிலையால் கவரப் பட்டு சாமிகூட பழம் விட்டு உறவு புதுப்பிக்கப்பட்டது.புதுப்பிக்கப்பட்ட தோழமையாகவே ஓடிக் கொண்டிருக்கிறது.

எங்களுக்குள் கொடுக்கல் வாங்கல்கள் ஆரம்பித்திருக்கின்றன..பள்ளி நாட்களைப் போல ப்ளீஸ் எனக்கு இது மட்டும் செய்யேன். நான் உனக்கு பூஜையெல்லாம் பண்றேன் என வேண்டுதல்களை முன் வைக்க ஆரம்பித்திருக்கிறேன்.

ம்ம்..இதோ வானிலை தொடருமா மீண்டும் இடி,மழை,தென்றல் எல்லாம் வீசுமா எனப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

என் வீட்டில் அம்மா பக்திப் பழமாக இருந்தாலும், நான் சொல்றத சொல்லிட்டேன்.அதுக்கப்புறம் உனக்கு சாமி விஷயத்துல எப்படி தோணுதோ அப்படி இரு என சுதந்திரம் கொடுப்பதுதான் கடவுள் என் தோழனாகவே நிலைக்க காரணம்.இல்லன்னா. அவர் கடவுளாகவே இருந்திருப்பார் நான் அவரது பக்தையாகவோ பக்தியை மறுப்பவளாகவோ இருந்திருப்பேன்.

இந்தத் தொடர்பதிவுக்கு அழைத்த சுசி அவர்களுக்கு நன்றி.

நான் வேண்டி விரும்பி அழைப்பவர்கள்

மகா
ராஜலஷ்மி
சுபிவண்யா.


.

நூறாவது பதிவு+வாழ்த்துக்கள்+நட்பு

Monday, May 31, 2010
நம் நட்பு ஆரம்பித்து சிறிது காலமே ஆனாலும் ஆண்டாண்டாய் பழகிய பந்தமாய் பரிணமித்திருக்கிறது என் மனதில்.உன்னிடம் மட்டும் என் நட்பின் பரிமாணங்கள் வேறுபடுகின்றன.எல்லா நட்புகளிடமும் "எனக்கு என்ன செஞ்ச நீ" எனக்கேட்கும் என சொற்கள் உன்னிடம் மட்டும் " உனக்கு என்ன செய்ய வேண்டும் நான்" எனக் கேட்கவே தலைப்படுகின்றன.

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.

(மு.வ உரை:
நட்புக்கு சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும் போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்)
இந்தக் குறளுக்கான அர்த்தம் உன்னுடன் பழகிய பின்னரே உணர்ந்து கொண்டேன்.

பல‌‌ நேர‌ங்க‌ளில் உன‌க்கான‌ பெரும் அன்புத் தொல்லையாய்க் கூட‌ நான் இருப்பதை உணர்ந்திருக்கிறேன்.உன்னைச் சிறு குழந்தையைத் தொல்லைபடுத்துவது போல படுத்தி இருக்கிறேன்.ஆனாலும் நான் அத‌ற்கு வ‌ருத்த‌ப்ப‌ட‌வில்லை. நீயும் அதைக் காட்டிக் கொண்டதில்லை..நிச்ச‌ய‌மாய் I am blessed to have such a frienship.

உன்னோடு ப‌ழ‌கும்வ‌ரை க‌ட‌வுளிட‌ம் ரொம்ப‌ சீரிய‌ஸாய் எதையும் கேட்ட‌தில்லை.உன்னைக் க‌ண்ட‌து முத‌ல் இறைஞ்சுகிறேன் தின‌மும்.. உன‌க்கான‌ ச‌ந்தோஷ‌ங்க‌ளை மீட்டுத் த‌ர‌ச் சொல்லி.. நிச்ச‌ய‌மாய் அவை வெகு விரைவில் திரும்பும் என‌ உறுதியாய் ந‌ம்புகிறேன்.


இந்நெருங்கிய நட்பும் கால ஒட்டத்தின் வேகத்தில் எத்தனை உறுதியாக நீடித்து நிலைக்கும் என்பதை நான் அறியேன்.அப்படி ஒரு வேளை நம் நட்புத்தூண் தூளானாலும் அதன் பிரதியாவது நிலைக்க வேண்டும் என்ற ஆவலின் வெளிப்பாடுதான் இந்தப் பதிவு.

ஜூலை மாத‌ம் வ‌ரும் உன் பிற‌ந்த‌ நாளுக்கு இன்றே வாழ்த்துகிறேன்.அதோடு ந‌ம் ந‌ட்பு ஆர‌ம்பித்த‌ நாளுக்காக‌வும்..:-)

Let God Bless All His Best Blessings over you Friend:-)


.

ஈரோடு கதிரிடம் எனக்குப் பிடிக்காதவை

Sunday, May 30, 2010
//1. நானும் பதிவு எழுதறேன், வலைப்பூவில எழுதறேன்னு சம்பளப் பணத்துல நெட் கனெக்சனும், லோன் போட்டு புதுசா லேப்டாப்பும் வாங்கினையே, முதல்ல அது பிடிக்கலை.//

இதே சாக்குல‌ நீங்க‌ லேப்டாப் வ‌ச்சிருக்கீங்க‌ன்னு த‌ம்ப‌ட்டம் அடிக்கிறீங்க‌ளே அது என‌க்கு பிடிக்க‌ல

//2. வலைப்பூ முகப்புல போடறதுக்கு கோயமுத்தூர் போயி 3500 ரூபா செலவு பண்ணி 18 விதமான கெட்டப்ல போட்டோ எடுத்துட்டு வந்தியே அது பிடிக்கலை.//

அவ்ளோ போட்டோ வ‌ச்சிருந்தும் ப‌த்தாம் கிளாஸ்ல‌யும் அஞ்சாம் கிளாஸ்ல‌யும் எடுத்த‌ போட்டோவைப் போட்டுட்டு இருக்கீங்க்ளா அது பிடிக்க‌ல‌

//3. நாள் முழுதும் யோசிச்சு மூனேமுக்கால் வரி எழுதி பதிவு போட்டுட்டு, ராத்திரி 12.30 மணிக்கு உனக்கு தெரிஞ்ச எல்லார்த்துக்கும் என் பிளாக்கை படிங்கன்னு பில்டப்போட SMSம், ஈமெயிலும் அனுப்பறியே அது பிடிக்கலை.//

அதுக்க‌ப்புற‌ம் ப‌டிச்சியா அதப் ப‌த்தி உன்னோட‌ க‌ருத்து என்ன‌னு கேட்க‌றீங்க‌ளே அது என‌க்குப் பிடிக்க‌ல‌
//4. நீயே ஒரு ஹிட் கவுண்டர் செட் பண்ணிட்டு தினமும் குறைஞ்சது 200லிருந்து 300 வாட்டி பிரவுசரை Refresh பண்ணிறியே அது பிடிக்கலை.//

அந்த‌ ஹிட்ட‌ வ‌ச்சி நானும் பிர‌ப‌ல‌ ப‌திவ‌ர்ன்னு பீலா உட‌றீங்க‌ளே அது என‌க்குப் பிடிக்க‌ல‌

//5. யாருமே பின்னூட்டம் போடறதில்லைனு கொஞ்சம் கூட வருத்தப்படாம, நியூமராலஜி புஸ்தகம் வாங்கி, உன்னோட ராசிக்கு பொருந்தற மாதிரி வித்தியாசமா 20 ஆண்கள், 25 பெண்கள் பெயர்களை செலக்ட் பண்ணி அப்பப்ப நீயே பின்னூட்டம் போட்டுக்கிறியே அது பிடிக்கலை.//

அந்த‌ப் பின்னூட்ட‌த்துல‌ வ‌ந்த‌ பாராட்டைப் ப‌த்தி கான்ப்ர‌ண்ஸ் கால் போட்டு மணிக்கணக்குல பேச‌றீங்க‌ளே அது என‌க்குப் பிடிக்க‌ல‌

//6. போன வாரம் நடந்த மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில “வலைப்பூ புகழ்”னு லேப்டாப் முன்னாலே நீ உட்காந்திருக்கிற மாதிரி போட்டோ போட்டு பிளக்ஸ் பேனர் வைச்சிருந்தியே அது பிடிக்கலை.//

அந்த பேனரை கோயிலுக்கு ச‌ம்ப‌ந்த‌மே இல்லாத‌ ர‌யில்வே ஸ்டேஷ‌ன் ப‌க்க‌ம் வ‌ச்சிருந்தீங்க‌ளே..அதுல‌ இருக்க‌ உள்குத்து என‌க்குப் பிடிக்க‌ல‌

//7. “சிறந்த வலைப்பதிவு சிங்கம்”னு எம்ராய்டரிங் பண்ணின பிட்டுத் துணிய தினமும் சட்டைப்பையில் குண்டூசி வைச்சு குத்திட்டு, நெஞ்ச நிமிர்த்திட்டு போயி ரோட்ல கிடந்த கல்லுல கால் நகத்தை பேத்துக்கிட்டியே அது என‌க்குப் பிடிக்கலை.//

அந்தக் கல்லுகிட்ட போயி... என் வலைப்பு பத்தி தெரியுமா இன்னிக்கு போஸ்ட் படிச்சியான்னு கருத்து கேட்டுட்டு இருந்தீங்களே அது என‌க்குப் பிடிக்கல‌

//8. வேலை செய்ற கம்பெனியில உன் பேரு போட்டு கொடுத்த விசிட்டிங் கார்டுல வலைப்பூ முகவரியை ரப்பர் ஸ்டாம்ப் செஞ்சு குத்திட்டு, மார்கெட்டிங் போற இடத்திலெல்லாம் வலைப்பூ பத்தியே பேசுறியே அது பிடிக்கலை.//

இதுபோதாதுன்ன்னு ஐடி கார்டுல கூட வலைப்பூ பேர் வேணும்ன்னு க‌ம்பெனிய‌ டார்ச்ச‌ர் ப‌ண்றீங்க‌ளே அது என‌க்குப் பிடிக்க‌ல‌

//9. பொண்ணு பார்க்க தரகர்கிட்ட கொடுத்து விடுகிற ஜெராக்ஸ் ஜாதகக் குறிப்புல, பச்சை இங்க்ல பேருக்கு மேல “வலைப்பூ சிங்கம்”னு எழுதி கொடுக்கிறியே அது பிடிக்கலை.//

கல்யாணம் நடந்து பல வருஷன் ஆயும் பொண்ணு பாக்கற தொடர்ந்து ஜாத‌க‌ம் குடுக்க‌ற சாக்குலபொண்ணு பார்த்து வ‌லைப்பூவை மார்க்கெட்டிங் ப‌ண்றீங்க‌ளே அது என‌க்குப் பிடிக்க‌ல‌

//10. சண்டபோட்டுட்டு இனிமேல் எழுத மாட்டேனு சபதம் போட்டவங்கள உண்மையினு நம்பி வருத்தப்பட்டியே அந்த முட்டாள் தனம் பிடிக்கலை.//

இப்பிடி நீங்க‌ ஒரு நாளாவ‌து சொல்ல‌மாட்டீங்க‌ளான்னு நாங்க‌ எதிர்பாக்க‌றோம்ன்னு தெரிஞ்சும் தெரியாத‌ மாதிரி ந‌டிக்க‌றீங்க‌ளே அந்த‌ அறிவாளித்த‌ன‌ம் என‌க்குப் பிடிக்க‌ல‌

//11. பத்து பாயிண்டுனு சொல்லிட்டு, யார் என்ன கேட்டுடப்போறாங்கனு, 13 பாயிண்ட் எழுதிறியே, இந்த கட்டுப்பாடில்லாத புத்தி பிடிக்கலை.//

எப்பிடியும் கும்முவோம்ன்னு தெரிஞ்சும் 10க்கு பதிலா 13 எழுதி என் வேலைய அதிகப்ப்டுத்துறீங்களே அது என‌க்குப் பிடிக்க‌ல

//12. கடைசியா, இத்தனை நாளா கஷ்டப்பட்டு, ஒரு மொக்கை கூட எழுதத் கையலாகாம, இந்தப் பதிவுக்குப்போய் லேபிள்ல “மொக்கை”னு போடப்போறியே அது சுத்தமா பிடிக்கலை. //

மொக்கையா எல்லாப் ப‌திவும் எழுதிட்டு இதுக்கு ம‌ட்டும் மொக்கைன்னு லேபிள் போட‌றீங்க‌ளே அது என‌க்குப் பிடிக்க‌ல‌

//13. கடை ஆரம்பிச்ச புதுசுல, விலை போகாத சரக்க மீள் இடுகைன்னு போட்டு யாவாரம் பண்றியே அது இன்னும் பிடிக்கல//

இடுகைய‌ ஒரு த‌ட‌வை ப‌டிக்க‌ற‌துக்கே நாங்க‌ க‌ஷ்டப்ப்டறோம்ன்னு தெரிஞ்சும் மீள் இடுகை வேற‌ போட‌றீங்க‌ளே.. அந்த‌க் கொல‌வெறி என‌க்குப் பிடிக்க‌ல‌.

இதெல்லாம் என்னன்னு தெளிவா புரியலன்னா இங்க போயிப் பாருங்க‌

.

மனம் நிறைந்த மண நாள் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி

Friday, May 28, 2010
பெயரில் மட்டுமல்லாமல் நிஜமாவே நல்லவங்களான என் அன்பு பாரதி அண்ணாக்கும் அண்ணிக்கும் மண நாள் வாழ்த்துக்கள்..



.

எக்ஸாம் பூதம்ம்ம்ம்ம்

Thursday, May 27, 2010
இந்த எக்ஸாம் பூதத்த எனக்கு அனுப்பின நல்லவங்க ரெண்டு பேரு
நான் ஆதவன்
தாரணிப்பிரியா.

எனக்கு அனுப்பிட்டு நான் எப்பிடில்லாம் அழுவறேன்னு பார்த்து
சிரிக்கலாம்ன்னு பிளான் போட்டு வெயிட்டிங்ல இருக்காங்க‌.இதுக்கு மேலயும் எழுதலன்னா பூதத்தை விட்டு கடிக்க விட்டுடுவாங்க.. அதனால இதோ என்னை பயமுறுத்த முயன்ற‌ பூதத்தைப் பற்றின ஒரு அறிமுகம்..

கண்டிப்பான ஆசிரியர் குடும்பத்துல பிறந்ததால, படிப்பு மட்டுமே வாழ்க்கை என்னும் ஒரு பிம்பம்தான் சின்ன வயசுல எனக்கு தோற்றுவிக்கப்பட்டது.பள்ளிக்கு போக முன்னாடியே அண்ணா கூட சேர்ந்து அவன் படிக்கிறதெல்லாம் நானும் படிச்சிட்டதால சின்ன கிளாஸ்ல எல்லாம் எக்ஸாம்ஸ் பெரிசா பயமுறுத்தினதில்ல.தினமும் வீட்டுக்கு வந்தவுடன் மாலை 3 மணி நேரம் காலையில் அதிகாலை முதல் பள்ளிக்கு போகும் முன் ரெண்டு மணி நேரம் படிக்கணும்கிறது வீட்டில் கண்டிப்பான ரூல்.ஆனால் தேர்வு நாட்களில் கொஞ்சம் விதிமுறை தளர்த்தல்கள் உண்டு.படிக்க இஷ்டம்ன்னா படிக்கலாம்.இல்லன்னா விளையாடலாம் தூங்கலாம் அப்படின்னு.தேர்வு நாட்கள்ல அரை நாள் விடுமுறை வேறக் கிடைக்குமா..அதனால ரொம்ப ஜாலியான நாட்கள் அவை.தினமும் படிக்கிறது பள்ளிப் பாடம் மட்டுமில்லை.தமிழ் இலக்கியம்,அறிவியல் நூல்கள்,வரலாறு நூலகள்ன்னு எல்லாமும் படிக்கணும்.இதெல்லாம் படிக்கிறதால அவுட் ஆப் சிலபஸ் விவரங்களும் தேர்வில் எழுத முடியும்.அதெல்லாம் படிச்சி டீச்சர் எல்லாம் நிஜமாவே இந்தப் புள்ளக்கி ஏதோ தெரியும் போல இருக்குன்னு மார்க்கைப் போட்டுடுவாங்க.அப்படியே ஒரு பில்டப்ல காலத்தை ஓட்டிட்டு இருந்தேன்.‌



இப்பிடியே ஜாலியா போய்க்கிட்டு இருந்த நாட்களுக்கு எங்க அப்பா ஒரு ஆப்பு வச்சார்.9ம் வகுப்பு கூட்டிட்டு போயி அவர் பள்ளிக் கூடத்துலயே சேர்த்திட்டார்.அங்க என் அப்பாவோட பெட் ஸ்டூடன்ஸ் ரெண்டு அண்ணாக்கள் வேலை பார்த்தாங்க.ரெண்டு பேரும் கங்கணம் கட்டிக்கிட்டு என்னை கண்காணிப்பாங்க. தேர்வு அறைல பாதில வந்து எழுதற பேப்பர வாங்கிப் பார்த்து விடை தப்பா இருந்தா முறைச்சிட்டு போவாங்க.அப்பப்பா அந்த ரெண்டு வருஷத்துல இவங்க ரெண்டு பேரும் படுத்தின பாட்டுல எங்க அப்பாவோட கண்டிப்பு எல்லாம் பெரிசாவே தெரில.எக்ஸாம்ல கேள்விக்கு பதில் தெரியாதேன்னு பயப்பட்டத விட.. அய்யோ தப்பா எழுதினா இந்த அண்ணாங்ககிட்ட மாட்டிக்கணுமேங்கிறதே பெரிய கவலையா இருந்திச்சு..9வதுலயே இப்படின்னா பத்தாவதுல என்ன ஆகுமோன்னு பயந்திட்டு இருந்தேன்


10வதுல அரையாண்டுத்‌ தேர்வு வரைக்கும் தான் இந்த பயம் எல்லாம். அரையாண்டு விடுமுறையில‌ டைபாய்டும் மலேரியாவும் சேர்ந்து வந்திருச்சு. அதையெல்லாம் சரி பண்ணிகிட்டு திரும்ப ஸ்கூல் போகறதுக்குள்ள 3 ரிவிஷன் டெஸ்டும் முடிஞ்சி பப்ளிக் எக்ஸாம் வந்திருச்சு.உடம்பு சரியில்லாத புள்ளங்கிற கன்செஷன்ல எல்லா மிரட்டல்ல இருந்தும் ஒரு வருஷத்துக்கு எஸ்கேப் ஆயிட்டேன்.திரும்ப +2ல மிரட்டல்கள் ஆரம்பிக்கும் போது அந்த மாரியாத்தா அம்மை வடிவில வந்து காப்பாத்திட்டா..அப்போவும் பூதத்துல இருந்து எஸ்கேப் ஆயிட்டேன்.


அதுக்குள்ள எங்க அப்பா அம்மாக்கு படிப்பு விஷயத்துல‌ கண்டிப்பான வளர்ப்பு முறை எனக்கு சரிப்பட்டு வராதுன்னு புரிஞ்சிபோச்சு.காலேஜ்ல என்னை கண்டிக்கறவங்க யாரும் இல்லாம போயிட்டாங்க.ஆனால் காலேஜ்ல‌ நமக்கும் பொறுப்புன்னு ஒன்னு தலைகாட்டிடுச்சோ இல்ல நானே ரியல் பூதம் ஆயிட்டேனோ தெரியல‌‌.எக்ஸாம் பூதத்தை பிரண்டு ஆக்கிட்டேன்.அதுக்கப்புறம் இன்னிக்கு வரைக்கும் அது என் பிரண்டாத்தான் இருக்கு.


எக்சாம் பூத்துக்கு பயப்படாமயே காலம் முடிஞ்சிதுன்னு பார்த்தேன்.ஆனால் புராஜக்ட் ரிவ்யூ பூதம்ன்னு ஒண்ணு வந்திச்சு.ஸ்ஸ்ஸ்ஸப்பாஆஆஆஆ... நிஜமாவே ரிவ்யூ கமிட்டில இருக்கறவங்க எல்லாம் பூதமாய்த்தான் தெரியுவாங்க.. ரூம் போட்டு யோசிச்சி கேள்வி கேப்பாய்ங்களோ...அடசாமி.. கரெக்டா எங்க திணறுவேன்னு கரெக்டா கண்டுபிடிச்சு அதுலயே சுத்து சுத்து வருவாய்ங்க..வடிவேல் பார்த்திபன் கிட்ட படற பாட்டை விடக் கொடுமை அது..எக்ஸாம் பீவர்,எக்ஸாமோபோபியா எல்லாம் சேர்ந்து வரவைக்காம விட மாட்டாங்க...
ஹி..ஹி..ஆனாலும் நாங்க‌ ச‌மாளிப்போமில்ல‌.

இவ்ளோ பொல‌ம்பிட்டு என் ஸ்டூட‌ண்ஸ சும்மா விடுவேன்னு நினைக்க‌றிங்க‌? நோ..நோ.. நாம‌ ப‌ட்ட‌ க‌ஷ்ட‌த்துக்கு ப‌ழி வாங்கிறோமில்ல‌...:‍))

மேலும் இந்த எக்ஸாம் பூதத்தைப் ப‌ற்றிப் புகழ(!!??!!) நான் அழைப்ப‌து

டாக்ட‌ர் ரோகிணி,சுபா டீச்சர், கார்த்திகை பாண்டிய‌ன்.
மஹா
.

.

தேவதைக்கு வாழ்த்துக்கள்

Thursday, May 20, 2010



அன்பின் தேவதையாய் ஜொலிக்கும் நம் ரம்யா அக்காக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைச் சொல்லிக்கிறேனுங்கோ


அக்காவைப் பத்தி தெரியாதவங்க..இங்க போய் பாருங்க. அவங்க சாதனையின் அருமை புரியும்.. இங்க போய் பாருங்க அவங்க நட்பின் பெருமை தெரியும்


இனிய‌ பிற‌ந்த‌ நாள் வாழ்த்துக்க‌ள் அக்கா

.

உன்னாலே

Thursday, May 13, 2010


நீ இந்நேரம் விழித்திருப்பாயோ
என்னும் எண்ணத்திலேயே
தினமும் போனது அதிகாலை
உற‌க்க‌த்தின் சில‌ ம‌ணிக‌ள்

நீ அழைக்கையில் அலைபேசியில்
ஒளிரும் உன் பெய‌ரைப்
பார்த்தே பேசப்படாமல்
போனது உன் அழைப்புகள்

நீ கேட்கும் கேள்விக‌ளுக்கு
சிந்தனை நிலையின்றி உள‌றிக் கொட்டி
பின் த‌லையில் த‌ட்டி யோசித்தே
போகிறது பல‌ நிமிட‌ங்க‌ள்

.

ஆப்பி மதர்ஸ்டே மம்மீஈஈஈஈ

Sunday, May 9, 2010


அன்னையர் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

.

ஒற்றை நிமிடம் சிந்திப்பீர்

Monday, May 3, 2010
இன்றைய வாழ்வியல் முறையில் குடும்ப‌த்திற்கு ஒரு பிள்ளை என்ப‌து க‌லாச்சார‌மாகி விட்ட‌து.அத‌ற்கு பெரும்பாலும் சொல்ல‌ப்ப‌டும் கார‌ண‌ம் இன்றைய‌ போட்டி மிகுந்த‌ உல‌கில் ஒரு பிள்ளைக்கு அனைத்து வ‌ச‌திக‌ளும் த‌ந்து சிறந்த‌ குடிம‌க‌னாக‌ வ‌ள‌ர்ப்ப‌து பெரும்காரிய‌ம்.ஒரு குழந்தையின் மீது ந‌ம் க‌வ‌னம் அனைத்தையும் செலுத்தும்போது இரண்டு மூன்று பிள்ளைக‌ளை வ‌ளர்ப்ப‌தை விட‌ சிற‌ப்பாக‌ வ‌ள‌ர்க்க‌லாம்.மேலும் ம‌க்க‌ள் தொகை பெருக்க‌த்தை க‌ண‌க்கிடும் வ‌கையிலும் ஒற்றைப் பிள்ளைக‌ள் என்ப‌து சிற‌ந்த‌து.


இவை அனைத்தும் ஒத்துக் கொள்ள‌க் கூடிய‌ விஷ‌ய‌ங்க‌ள்தான் என்றாலும்,ஒற்றைப் பிள்ளைக‌ளின் ம‌ன‌ வ‌ள‌ர்ச்சி,ம‌ற்ற‌வ‌ர்க‌ளுட‌ன் ஒத்துப் போகும் த‌ன்மை,குழு ம‌ன‌ப்பான்மை என்ப‌தெல்லாம் ச‌கோத‌ர‌ ச‌கோத‌ரிக‌ளோடு வ‌ள‌ர்ந்த‌ பிள்ளைக‌ளோடு ஒப்பிடும்போது சிறிது குறைவாக‌வே தோன்றுகிற‌து.ஒற்றை பிள்ளைக‌ளாய் வ‌ள‌ரும்போது ப‌கிர்ந்து கொள்ளும் ம‌ன‌ப்பான்மை என்ப‌து சிறிதும் வ‌ளர்வ‌தில்லை.அப்ப‌டிப்ப‌ட்ட‌ குழந்தைக‌ளுக்கு ந‌ண்ப‌ர்க‌ள் ச‌ரியான‌ அமையாவிடில் அவ‌ர்க‌ளின் வாழ்க்கைப் பாதை எளிதாக‌ திசை திருப்ப‌ப்ப‌ட‌ சாத்திய‌க் கூறுக‌ள் அதிக‌ம்.அன்புக்கான‌ ஏக்க‌ம் நிச்ச‌ய‌மாய் அவ‌ர் ம‌ன‌தில் இருக்கும். அந்த ஏக்கம் தவறானவர்களால் அவர்களுக்கு தகுந்தவாறு கையாளப்படலாம்


பெற்றோர் எவ்வ‌ள‌வுதான் அன்பாக‌‌ இருந்தாலும்,அவர்களிடம் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொண்டாலும்,முதல் தலைமுறையின் சிந்தனைக்கும்,அடுத்த தலைமுறையின் சிந்தனைக்கும் இடையே உள்ள தலைமுறை இடைவெளி என்பது குழந்தகளின் மனதில் ஒரு வேற்றுமையை உருவாக்கும் என்பது நிச்சயம்.அப்ப‌டிப்பட்ட‌ குழ‌ந்த‌க‌ள் திசைமாறிப் போவ‌த‌ற்கான‌ சாத்திய‌ங்க‌ளும் அதிகம்.கூட்டுக் குடும்பங்களும் சிதறிப் போன இக்காலத்தில் ஒற்றைக் குழந்தைகளுக்கு உறவுகள் என்பதின் அருமையும் புரியாமல் போகும்.

கொஞ்சம் யோசியுங்கள் உங்கள் உடன் பிறப்புகளோடு சிறு வயதில் நீங்கள் வாழ்ந்த வாழ்வின் அருமை உங்கள் ஒற்றைக் குழந்தைக்கு கிடைக்குமா. சித்தப்பா, பெரியப்பாக்களும், அத்தை, மாமாக்களும் இல்லாத ஒரு வாழ்க்கையை நினைத்துப் பாருங்கள்.அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையைத்தான் உங்கள் குழந்தை சந்திக்கப் போகிறது என்பதை மனதில் கொள்ளுங்கள்.அதற்கேற்ப அவர்களை தயார்ப்படுத்துங்கள்.

ஒற்றைக்குழந்தையாய்ப் பிறந்தாலும் அதன் சின்ன சின்ன சந்தோஷங்களில் அக்கறை என்னும் பெய‌ரில் குறுக்கே நிற்காதீர்கள்.விடுமுறை நாட்களில் தூரத்து உறவுகளில் உள்ள உறவுகளுடனாவது ஒட்டி உறவாட விடுங்கள்.அதன் மூலம் அவர்களுக்கு உறவுகளின் அருமை புரிய வரும்.துன்பத்தில் தோள் கொடுக்க நமக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்னும் தன்னம்பிக்கை வளரும்.


.

ஏனோ..என்ன..‌எதற்கு

Saturday, May 1, 2010
அதிகாலைப் ப‌னியாய்
காலைக் க‌திர‌வ‌னாய்
மதியச்சோம்பலாய்
மாலை ம‌ய‌க்க‌மாய்
பின்னிரவுக் குளிராய்
அனைத்திலும் நீயிருந்தும்
உன் அருகாமைக்கான ஏக்கம் ஏனோ
**********************************************************************************
நீயில்லா நொடிகள் மணிகளாகவும்
உன்னுடனான மணிகள் நொடிகளாகவும்
மாறும் மாயம் தான் என்ன‌

நானென்பதே நீயான பின்னும்
நாமென சொல்லித் திரிவது எதற்கு

.

வாழ்த்துக்கள் அன்புச் சகோதரி:-)

Thursday, April 29, 2010



அன்புத் தோழி,பேருக்கேத்த வாலி,தருமபுரியின் இளவரசி,அயல் நாட்டு மஹாராணி, என் செல்ல அக்கா கபீஷ் தீபாக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.




என் அக்கா இன்றுபோலே என்றென்றும் மாமாவை மிரட்டிக் கொண்டு வாழ வாழ்த்துக்கள்

.

மனதில் மலர்ந்தவை 18/04/10

Sunday, April 18, 2010
பொஸஸிவ்னஸ் என்பது உறவிகளுக்கிடையேயான மிகக் கடும் பிரச்சினை. இந்த மாதிரி பொசஸிவ்னஸில் புலம்பும் எத்தனையோ பேரை லெபட் அன்ட் ரைட் வாங்கி இருக்கேன்.நான் எப்போவுமே என் நட்புகளிடம் பொஸஸிவ்னஸ் கொள்வதில்லை அப்படின்னு ஒரு நெனப்புலயே சுத்திட்டு இருந்தேன்.ஆனால் அண்மையில் வெளியூரில் வேலை செய்யும் தோழி ஒருத்தி ஊருக்கு வருவதை என்னிடம் சொல்லாமல் வேறொருவர் சொன்னது,அவர் மூலமாகத் தெரியவந்தபின் அவளை நான் திட்டிய திட்டு ,அம்மாடி.. எனக்கே கொஞ்சம் பாவமாய்த்தான் இருக்கு.அதுக்கு அவள் கேட்டாள்."ஏய் இப்ப உனக்கு என்ன பிரச்சினை. நான் உன்கிட்ட சொல்லாம வந்ததா இல்ல அவர்கிட்ட சொன்னதா" என்று. சர்வ நிச்சயமாய் பதில் தெரியவில்லை.....என்னிடமும் பொஸஸிவ்னஸ் எட்டிப்பாக்குதோ

**********************************************************************************
என் தோழி ஒருத்தி தவறாமல் குறுந்தகவலோ, மெயிலோ தினமும் தவறாமல் அனுப்புவாள்.திடீரென கொஞ்ச நாள் நிறுத்திவிடுவாள்.மீண்டும் கொஞ்ச நாளில் மீண்டும் தொடங்குவாள்.ஏன் எனக் காரணம் கேட்டப்போது சொன்னாள். நான் அனுப்பாதப்போ ஏன் அனுப்பலைன்னு கேக்கறவங்களும்,அவங்களே அனுப்பறவங்களும் தான் நம் மெசேஜ்களை விரும்பறாங்கன்னு அர்த்தம்.மத்தவங்களுக்கு நம் மெசேஜ் ஒரு சுமைதான்.சில நேரங்களில் நம் நட்பும் கூட அதனால் Try to keep away from them என்கிறாள்.நிஜமா மக்காஸ்.அப்போ மெசேஜ் அனுப்பறதுலதான் நட்பு இருக்கா?

*********************************************************************************

அண்மையில் டெக்னிகல் மேட்டர் அதிகமாக இல்லாத ஒரு தேர்வுத்தாளைத் திருத்தும் சந்தர்ப்பம் அமைந்தது.அதில் தெரிந்த்து மாணவர்களுக்கு செல்போன்களால் விளையும் மிக முக்கிய தீமை.பதில்களில் பலப்பல ஸ்பெல்லிங் மிஸ்டேக்குகள்.பல இடங்களில் sms language.உடனே off செய்துவிட்டேன்.என் மொபைலில் dictionary mode.இப்படியே போனால் ஆங்கிலமும் அரைகுறை ஆகிவிடும் போல இருக்குதே

**********************************************************************************
நம் நாட்டில் நம் ஊரில் வாழ்வதில் பெருமைப்படும் தருணங்கள் பல நேரங்களில் நிகழும்.அப்படிப்பட்ட ஒரு தருணம் அண்மையில் வந்தது. இந்தக் கோடியில் இருவரைப் பற்றி அறிந்ததும். நானும் ஏதேனும் செய்ய வேண்டும் என்னும் உத்வேகத்தை விதைத்தோர்க்கு நன்றியும்,வணக்கங்களும்


******************************************************************************.

எனக்கு பிடித்த 10 பெண்கள் தொடர் பதிவு

Friday, April 2, 2010
எனக்குப் பிடித்த பெண்கள் பத்து பேரைப் பத்தி எழுதச் சொல்லி T.V.ராதாகிருஷ்ணன் ஐயா கூப்ட்டு ரொம்ப நாளாயிடுச்சிங்க.அழைப்பிற்கு நன்றி ஐயா. தாம‌தத்திற்கு ம‌ன்னிக்க‌வும்.


இத்தொடர்பதிவிற்கான நிபந்தனைகள்
1.உங்களின் சொந்தக்காரராய் இருக்கக் கூடாது
2.வரிசை முக்கியமில்லை
3.ஒரே துறையில் பலர் பிடித்தமானவராய் இருக்கும்.இப்பதிவு வெவ்வேறு துறையில் இருப்பவராய் இருக்க வேண்டும்

பிடித்தவர்களைப் பற்றி நினைக்கையில் முதல் முதலில் கண்முன் நிற்பது தோழமைச் சொந்தங்கள்.அவர்களைப் பற்றி இப்பதிவில் எழுதக் கூடாதென்பது விதியாகையால், அதை தாண்டி யோசிக்கும் போது வரிசை கட்டி மனதை நிரப்புகிறார்கள் கீழுள்ளவர்கள். உலகறிந்த சாதனைப் பெண்களாய் இவர்கள் இல்லாவிட்டலும்,என் ம‌ன‌தைக் கொள்ளை கொண்ட‌வ‌ர்க‌ள் இவ‌ர்க‌ள்.

1.நான் ஆரம்பக் கல்வி பயில்கையில், என் பள்ளியின் அருகில் கடை வைத்திருந்த பாட்டி. அவரின் பெயர் சிவகாமி என நினைக்கிறேன்.எங்கள் பள்ளியில் பலருக்கும் பகிர்ந்துண்ணுதலை கற்றுக் கொடுத்த‌வர் அவர்தான். நாங்கள் ஏதேனும் தின்பண்டம் வாங்கும் போது, அருகில் ஒரு எழைக் குழந்தை இருந்தால் அந்தப் பாப்பாவுக்கும் கொஞ்சம் குடுக்கலாம் நீதான் நிறைய வச்சிருக்கியே அப்படின்னு சொல்லி பகிர்ந்தளிப்பார்கள்.அந்த வயதில் அவரைச் சுத்தமாய்ப் பிடிக்காது. நாம வாங்குற மிட்டாயில யாருக்கோ பங்கு தரச் சொல்றாங்களேன்னு.. ஆனால் இப்போது புரிகிறது அவரின் மனசு

2.என் கல்லூரிக் காலத்தில், எங்க‌ள் க‌ல்லூரிப் பேருந்தின் ஒரு திருப்ப‌த்தில் தினமும் டாடா காண்பித்து உற்சாகத்தை விதைத்த ஐந்து வயது மதிக்கத்தகுந்த ஒரு குட்டிப் பாப்பா

3.வ‌ய‌தான கால‌த்திலும், ம‌ங்க‌ள‌க‌ர‌மான தோற்றத்துடன் அதிகாலை நேரத்திலேயே வாச‌லுக்கு நீர் தெளிக்கும் எங்க‌ள் எதிர் வீட்டு ப‌ணிப்பெண் சரஸ்வதியம்மா.மனதில் விருப்பம் இருப்பின் வயது ஒரு தடையல்ல என்பதை உணர்த்துபவர் இவர்

4.எங்கள் கல்லூரி டிரஸ்ட் உறுப்பினர் திருமதி.அமுதா.அவரின் உடை உடுத்தும் நேர்த்திக்கு நான் அடிமை என்றே சொல்லாம்

5.தனியொரு மனுசியாய்,உறவுகளின் துணையும் பெரிதாக இல்லாத நிலையிலும் தன் மூன்று பெண்களையும் நன்றாகப் படிக்க வைத்து திருமணமும் செய்து வைத்த என் பெரியம்மாவின் தோழி கனகம் அத்தை.அவரின் தன்னம்பிக்கை மகத்தானது

6.மிகச் சிறிய தையல் கடை ஒன்றை ஆரம்பித்து, ஐந்தாறு ஆண்டுகளில் அதைத் தையல் பள்ளியாகவும், நகரின் குறிப்பிடத்தகுந்த ரெடிமேட் ஆடை தயாரிப்பு நிறுவனமாகவும் உயர்த்திய என் அக்காவின் சீனியர் கீதா அக்கா. உழைப்புக்கு உதாரணமாய் எனக்குத் தோன்றுபவர் அவர்.

7.எத்தனையோ போராட்டங்களைச் சந்தித்தாலும்,அயராமல் தான் நினைத்தவரையே கைப்பிடித்த என் கல்லூரி மாணவி சுகன்யா.அவரின் செயல்கள் சிலவற்றில் எனக்கு மாற்றுக் கருத்து இருந்தாலும் எடுத்ததை முடிக்கும் அவரின் திண்மையை வியக்கிறேன்

8.எங்கள் வீட்டருகில் இருக்கும் மைதானத்தில் தினமும் ஓட்டப் பயிற்சி எடுக்கும் மாணவி கீர்த்தனா.எப்படியும் தேசிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்னும் அவளது ஆசையும் அதற்கான கடும் உழைப்பும் ஈர்க்கின்றன என்னை

9.பெண் என்றால் மென்மை என்பதற்கு உதாரணமாய், வண்டிக்காரனிடம் அடி வாங்கும் மாட்டிற்கும் கண்ணீர் சிந்தும் என் கல்லூரித் தோழியின் தாய் லஷ்மி அம்மா

10.சில நாட்களுக்கு முன் மருத்துவமனை சென்ற போது முதன் முதலில் நான் பார்த்த அப்போதுதான் பிறந்த பச்சிளம் பெண் குழந்தை.


பட்டியலில் பத்துபேருக்கு மட்டுமே அனுமதி என்பதால் இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.
இது வரை இத்தொடர் பதிவை எழுதியவர் யார் யார் என்பது சரியாகத் தெரியாததால் நான் யாரையும் அழைக்கவில்லை

.

ஒரே ஒரு லிட்டர் - ப்ளீஸ்

Monday, March 29, 2010
அடுத்த‌ த‌லைமுறைக்கு சொத்து சேர்க்கும் அவ‌ச‌ரத்தில் இருக்கும் நாம், கையிலிருக்கும் விலைமதிக்கமுடியாத இயற்கைச் செல்வம் மிக வேகமாகக் கரைவதை உணர்ந்தாலும், நடைமுறைச் சிக்கல்கல்க‌ளில் சிக்கிக் கொண்டு அதைக் காக்கும் செய‌ல்க‌ளைக் கோட்டை விடுகிறோம்.ஏதாவ‌து செய்ய‌ வேண்டும் என்னும் எண்ண‌ம் எல்லார் ம‌ன‌திலும் இருக்கிற‌து. ஆனால் செய‌ல் வ‌டிவ‌ம் பெறுவ‌தில்தான் கற்கள் பாறைக‌ளாக‌ இருக்கின்ற‌ன‌.மிக முக்கிய , அவசர, அத்தியாவசிய கவனம் செலுத்தப்படவேண்டியது நீரின் முறையான உபயோகம் மற்றும் சேமிப்பு.

இதோ அதோன்னு பயந்திட்டு இருந்த வெயில் காலம் வந்தே விட்டது.வெயிலின் கொடுமை சில ஆண்டுகளாக ஏறுமுகமாகவே இருக்கிறது. இந்த ஆண்டு வழக்கத்திற்கும் அதிகமாக மார்ச் மாத துவக்கதிலிருந்தே தாங்க முடியாத அனலடிக்கிறது என்பது கண்கூடான உண்மை.இதன் தொடர்ச்சியாக நம் வெகு அருகில் நிற்பது கடும் தண்ணீர் பிரச்சினை.மழை என்பது மருந்துக்கும் பெய்யாத இதே நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் தண்ணீரின் நிலையும் பெட்ரோல், டீசல் போன்ற ஒரு அதிக விலை கேட்கும் பொருளாக மாறும் என்பது திண்ணம்.இந்நிலையில் நம் தண்ணீர் தேவைகளை சுருக்கிக் கொள்வதென்பது அத்தியாவசிய அவசியமாகும்.

நாம் சேமிக்கும் ஒவ்வொரு நீர்த்துளியும் அவ‌சிய‌மான‌து. ஒரு நாளுக்கு ஒருவ‌ர் ஒரு லிட்ட‌ர் த‌ண்ணீரைச் சேமிக்கிறார் எனில்,ச‌ராசியாக ஒரு குடும்ப‌த்தில் ஒரு நாளில் சேமிக்க‌ப்ப‌டுவ‌து 4 லிட்ட‌ர்.ஒரு மாத‌த்தில் சேமிக்க‌ப்ப‌டுவ‌து 120லிட்ட‌ர்.ஒரு ஊரில் 10,000 குடும்ப‌‌ங்க‌ள் உள்ள‌தெனில் ஒரு மாதத்தில் அவ்வூரில் சேமிக்க‌ப்ப‌டும் நீரின் அள‌வு 12லட்சம் லிட்டர்கள்.

ஒரு நாளுக்கு ஒரு லிட்டர் நீரைச் சேமிப்பதென்பது ஒன்றும் பெரிய விஷயமாக எனக்குத் தோன்றவில்லை. அதே ஒரு லிட்டர் நீர் ஒரு குறிப்பிடத்தகுந்த பாசிடிவ் விளைவை கண்டிப்பாய் ஏற்படுத்தும். முகம் கழுவ உபயோகிக்கும் நீரில் சிறிதளவைக் குறைப்பதாலோ,குளிக்கும் நீரில் ஓரிரு மக்(mug) நீரைக் குறைப்பதாலோ நம் ஆரோக்கியமும் அழகும் எவ்விதத்திலும் குறையப் போவதில்லை.

நீரை உபயோகிக்கும் எல்லா இடங்களிலும் டேப் திறந்து விட்டு நேரடியாக உபயோகிப்பதை காட்டிலும்,ஏதேனும் ஒரு பாத்திரத்தில் இருக்கும் நீரை எடுத்து உபயோகிக்கும்போதும் சிறிது நீர் உபயோகம் குறையும்.
இதைப்போலப் பலவழிகள் இருக்கலாம். பின்னூட்டதில் சொல்லுங்கள்.மறக்காமல் செயல்படுத்துங்கள்


முடிவெடுங்க‌ள்.. செய‌ல்ப‌டுத்துங்க‌ள்.. கால‌ம் வெகு வேகமாய்க் க‌ட‌ந்து கொண்டிருக்கிற‌து

மனதில் மலர்ந்தவை 22/03/2010

Saturday, March 20, 2010
சில நாட்களுக்கு முன், நண்பரொருவரின் அலுவலகத்தைத் தேடி அலைந்து கொண்டிருந்தேன்.அவர் சரியான வழியைச் சொன்னாலும், புது ஏரியால விட்டா கண்ணைக் கட்டி, காட்டில விட்ட மாதிரி முழிக்கும் என் பழக்கத்தால்,சற்று சுத்தி சுத்தி அலுவகலத்தைக் கண்டுபிடித்தேன். நகரின் மையப் பகுதியில்,குடியிருப்புகளுக்கு அருகிலிருக்கும் அந்த ஏரியாவில் ஒரு மது பானக்கடை. திரும்ப வரும்போது ஒரு விஷயத்தை கவனித்தேன்.சில கிலோமீட்டர் தொலைவுக்குள்ளாகவே ஏறத்தாழ 7,8 கடைகள். அனைத்தும் குடியிருப்பை ஒட்டிய பகுதிகளே..

மதுபானக்கடைகள் பள்ளி,வழிபாட்டுத்தலம்,குடியிருப்பு போன்ற பகுதிகளுக்கு அருகில் இருக்க கூடாது என்னும் விதிமுறை இன்னும் சட்டத்தில் இருக்கிறதா மக்களே?
*******************************************************************
இன்றைய சமூக நிலையில், கல்லூரியில் மாணவர், ஆசிரியர் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய வேறுபட்ட கருத்துகள் ஆசிரியர்களிடையே நிலவி வ்ருகிறது.
மாணவன் ஆசிரியரை நண்பனாகப் பார்த்தால் போதும் என்கிறது ஒரு தரப்பு.
ந்ட்பு ரீதியிலான அணுகு முறை எல்லாம் பயன்தராது. மாணவன் ஆசிரியரிடையே டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் செய்வது அவசியம் என்கிறது மற்றொரு தரப்பு.. எது சரியாக இருக்கும்.கொஞ்சம் சொல்லுங்க மக்களே
****************************************************************
விபத்துகள் அடிக்கடி நிகழும் நிகழ்வாக மாறிவிட்டன.அதைப் பற்றிப் பேசும்போது, பலர் சொல்வது " இந்தப் பிரைவேட் பஸ்காரங்க பஸ் ஓட்டற லட்சணத்தால தான் இப்பிடி நடக்குது" கண்ணு மண்ணு தெரியதா ஸ்பீடுல‌ ஓட்டறாங்க. ஆனால் இப்பிடிக் குறை சொல்லும் பலர் பயணத்திற்குத் தேர்ந்தெடுப்பது, மிக அதிக வேகத்தில் செல்லும் பிரைவேட் பஸ்களையே". அப்போ உங்களுக்காகதானே மக்களே .. பஸ்காரங்க வேகமா போறாங்க. அவங்களை மட்டும் ஏன் திட்டறீங்க?
**********************************************************************

என்+(அவ)னிடம் ஒரு கேள்வி

Tuesday, March 16, 2010



நீ பார்க்க மாட்டாய் என்றாலும்
உனக்குப் பிடித்த ஆடைகளையே
தேர்வு செய்யும் என் கரங்களுக்கும்,


நீ அழைக்கமாட்டாய் எனத் தெரிந்தும்
அடிக்கடி அலைபேசியை
நோக்கும் என் கண்களுக்கும்,


நீ பேசும் சில வார்த்தைகளையும்
நிரப்பி பூட்டிக் கொள்ள
முயலும் என் செவிகளுக்கும்


உன்னைத் தெரியாதவர் எனத்தெரிந்தும்
அவரிடமும் உன்னைப் பற்றியே
பேசும் என் இதழ்களுக்கும்


கடிவாளம் போட நீ வரும் நாள் எப்போது:-)






டிஸ்கி: (மக்களே.. கவிதை எழுதினா அனுபவிக்கணும்..ஆராய்ஞ்சி போட்டு குடுக்க பிளான் போடறது நெம்ப தப்பு)




.

காம்ப்ரமைஸ்

Sunday, March 14, 2010
"காம்ப்ரமைஸ் செய்து கொள்" என்பதும் "அட்ஜஸ்ட் பண்ணித்தான் ஆகணும்" என்பதுமான வாக்கியங்களை இதுவரை உங்கள் வாழ்வில் இது வரை சந்திக்கவில்லையென்றால் நீங்கள் தான் உலகின் மிகப் பெரும் அதிர்ஷ்டசாலி


நம் வாழ்வில் ஒவ்வொரு நொடியிலும் காம்ப்ரமைஸ் என்பது அவசியமாகிறது.பல நேரங்களில் இந்த காம்ப்ரமைஸ் என்னும் வாக்கியம்தான் நம்மை வாழ வைக்கிறது என்பதும் உண்மை. ஆனாலும் இந்தக் காம்ப்ரமைஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க வாழ்வின் மீதான நம்பிக்கையும் ஆர்வமும் நிலைகுலைய ஆரம்பிக்கிறது.சில நேரங்களில் ஒரு சிறு துளை கிடைத்தாலும் ஆத்திரமாய் பீறிட்டுக் கிளாம்பிவிடுகிறது


அதற்கு நிதர்சன உதாரணமாக அண்மையில் ஒரு நிகழ்வைக் கண்டேன்.
என் நெருங்கிய தோழி ஒருத்தி,மிகவும் பயந்த சுபாவமுடையவள்.அதிகம் பேசக் கூடமாட்டாள்.சிறிது காலமாக அவளது குடும்பத்திலும் அலுவலகத்திலும், பலப் பல பிரச்சினைகள் அவளைப் போட்டு அழுத்திக் கொண்டிருந்தது. நாங்களும் பெரிய அட்வைஸ் மன்னிகளாகி, " காம்ப்ரமைஸ்" என்பதையே போதித்துக் கொண்டிருந்தோம்.அவள் மனதிற்குள் கோபக்கங்குகள் கனன்று கொண்டிருந்தது.இந்நிலையில் பஸ்ஸில் நானும் அவளும் பயணிக்கையில், ஒரு நாள் கண்டக்டர் 2 ரூபாய் மீதி தரவேண்டிய நிலையில்,3 ரூபா இருந்தா குடுங்க.5 ரூபா தர்றேன்.இல்லன்னா நாளைக்கு டிக்கெட் வாங்கும்போது அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் என்றார்.( அது தினம் போகும் பஸ்).அவ்ளோதான்.என் தோழிக்கு எப்படி அப்படி ஒரு கோபம் வந்திச்சின்னு தெரியல. கண்டக்டரப் பிடிச்சி லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டுட்டா.நிஜமாய் அவள் கோபத்திற்கான காரணம் எனக்கு அப்போ புரியல.
பின்னர் அவளிடம் சமாதனமாய் பேசும்போது அவள் சொன்ன வார்த்தைகள்"எங்க எங்கதான் அட்ஜஸ்ட் பண்றது? யாருமே நமக்காக அட்ஜஸ்ட் பண்றதில்ல. நாமளே அட்ஜஸ்ட் பண்ணி சுயத்தையே இழந்துடுவோல் போல இருக்கு".
அவள் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் சத்தியமான உண்மைகளாகவே தோன்றியது எனக்கு. பின் அதைப் பற்றி வேறொரு நிகழ்வில் ஒரு மனோத்தத்துவ நிபுணரிடம் பேசிய போது அவர் சொன்னது " இந்நிலைக்கு முக்கிய காரணம் "நோ" சொல்ல வேண்டிய‌ நேரங்களில் "யெஸ்" சொல்வதும்,"யெஸ்" சொல்ல வேண்டிய‌ நேரங்களில் "நோ" சொல்வதும் மட்டுமே. ஒரு விஷயம் இல்லாமல் வாழ்வது கடினம் என்றோ,அல்லது ஒரு விஷ்யத்துடன் வாழ்வது கடினம் என்றோ நிச்சயமாகத் தோன்றினால் எக்காரணம் கொண்டும் அவ்விஷயங்களில் காம்ப்ரமைஸ் செய்யாதீர்கள்.அப்படிச் செய்தால் எந்நிலையிலும் மன அமைதி கிட்டாது என்றார்.
நீங்க‌ள் ச‌ரியான‌ விஷ‌ய‌ங்க‌ளில் பிடிவாத‌மாய் இருப்ப‌து த‌வ‌றில்லை.அது தான் உங்க‌ள் சுய‌த்தை த‌க்க‌ வைத்துக் கொள்ள‌ ஒரே வ‌ழி என்ப‌தும் அவ‌ர் த‌ரும் செய்தி.
அவ‌ர் சொல்வ‌து ச‌ரியாக‌வே தோன்றுகிறது.ஆனால் அதை ந‌ம்மைச் சுற்றி இருப்ப‌வ‌ர் யாராவ‌து அதைப் போல் பிடிவாத‌ம் பிடித்தால் ஏற்றுக் கொள்ளும் மனோநிலையில் நாம் இருக்கிறோமா என்ப‌து கேள்விக்குறிதானே?

.

மகளிர்தின நன்றிகள்:-)

Sunday, March 7, 2010


எல்லா வருஷமும் போல இந்த வருஷமும் மார்ச் 8 வந்திருச்சி.அதாங்க மகளிர்கான கொண்டாட்ட தினம் "மகளிர் தினம்" வந்தாச்சி.கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் மகளிர் நிலை பெரிதும் முன்னேற்றம் கண்டுள்ளது. இந்நாளில் வாழ்த்துக்களை நமக்குள்ளே பரிமாறிக் கொள்வதுடன், நாம் இத்தகைய நல்ல நிலையை அடைவதில் உறுதுணாயாயிருக்கும் ஆண்களுக்கு நன்றி சொல்லும் வாய்ப்பாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என விழைகிறேன்

வாழ்க்கைல‌ நாம‌ மொத‌ மொத‌ல்ல‌ ச‌ந்திக்க‌ற‌ ஆண் அப்பா.எல்லாப் பொண்ணுகளுக்கும் அப்பான்னா கண்டிப்பா ஒரு சிறப்பான இடம் உண்டு.அப்பாக்கள் தங்கள் பெண் குழந்தைகளை தேவதைகளாகத்தான் பார்க்கிறார்கள்.தங்கள் குழந்தைகள் வளர வளர தங்களையும் நிச்சயமாய் வளர்த்திக் கொள்கிறார்கள்.தங்கள் குழந்தையின் நலனுக்காக எத்தகைய தியாகமும் செய்யத் தயாரானவர்களாகவே எப்போதும் இருக்கிறார்கள்.தங்கள் பெண் குழந்தைகளின் பேச்சு மட்டுமே அவர்களுக்கு வேத வாக்கு.தாய்ப்பாசத்திற்கு சற்றும் குறைந்ததல்ல தந்தைப் பாசம்.


அடுத்து வர்றது அண்ணாக்கள்.
அண்ணாக்க‌ளோட‌ க‌ட‌மை முக்கிய‌த்துவ‌ம் அடைய‌ற‌து, நாம‌ வீட்டை விட்டு வெளில‌ போக‌ ஆர‌ம்பிக்கும்போது தான்...அவ‌ங்க‌ விளையாட‌ப் போனா நாம‌ளும் பின்னாடியே கெள‌ம்புவோம். ந‌ம‌க்கு அந்த‌ ஸ்டேஜ் ல‌ ஃப்ர‌ண்ட்ஸ் யாரும் இருக்க‌ மாட்டாங்க‌.ஸோ அண்ணாவோட‌ ஃப்ர‌ண்ட்ஸ் தான் ந‌ம‌க்கும்.அந்த‌ குரூப்ல‌ நாம‌ தாங்க‌ தேவ‌தை...(ஒரே ச‌ம‌ய‌த்துல‌ அத்த‌னை அண்ணாக்க‌ள் கிடைப்பாங்க‌...) நாம‌ சின்ன‌ பொண்ணா இருக்க‌ற‌தால‌ அவ‌ங்க‌ விளையாட‌ற‌ விளையாட்டெல்லாம் நாம விளையாட‌ முடியாது.அத‌னால ந‌ம‌க்காக‌ அவ‌ங்க‌ விளையாட‌ற‌ விளையாட்டுக‌ளையே ந‌ம‌க்காக‌ மாத்திக்கு வாங்க‌. இந்த‌ ஸ்டேஜ்ல‌ ஆர‌ம்பிக்க‌ற‌ அவ‌ங்க‌ விட்டுக் கொடுத்த‌ல் லைஃப் லாங் க‌ண்டின்யூ ஆகும்.

அடுத்து த‌ம்பி.. நெஜ‌ம்மாவே பாவ‌ம்.சின்ன‌ வ‌ய‌சுல‌ நாம வீட்ல‌ ப‌ண்ற‌ த‌ப்பையெல்லாம் தன் த‌லைல‌ போட்டுக்க‌ற‌ ஜீவ‌ன்.அப்போ அவ‌ன் ந‌ம்மால வாங்க‌ ஆர‌ம்பிக்க‌ற‌ திட்டு எப்போ முடியுதுன்னு க‌ட‌வுளுக்குத் தாங்க‌ தெரியும். அவ‌னை நாம‌ தான் சின்ன‌ பைய‌ன்னு ம‌திக்க‌ற‌தில்லைன்னு பார்த்தா.. ந‌ம்ம‌ குழ‌ந்தைக‌ளும் அதே மாதிரி தான் ட்ரீட் ப‌ண்ணும்.ந‌ம்ம‌ கிட்ட‌ ம‌ட்டுமில்லாம ந‌ம்ம‌ அடுத்த‌ த‌லைமுறை கிட்ட‌யும் அட்ஜெஸ்ட் பண்ணிக்கற தேவை த‌ம்பிங்களுக்கு உண்டு

இது ம‌ட்டுமில்லாம‌ வெளி உல‌கில் நாம் ச‌ந்திக்க‌ற‌ ப‌ல‌ பிர‌ச்சினைக‌ளுக்கு தீர்வு சொல்றதும், சில இடங்களில் தீர்வு காண்ற‌தும் ச‌கோத‌ர‌ர்க‌ள் தான்.


அப்புற‌ம் தோழ‌ர்க‌ள்..அவங்க‌ளைப் ப‌த்தி சொல்லிகிட்டே போக‌லாம்..சுருக்க‌மா சொன்னா ..யாதுமாகி நிற்ப‌வ‌ர்க‌ள்.. நாம் இழுக்கும் இழுப்புக்கெல்லாம் இழுப‌ட்டு,த‌ட்டுத் த‌டுமாறினாலும்.புன்ன‌கை மாறாத‌வ‌ர்க‌ள்.தேவையான நேரங்களில் தேவையான அவதாரம் எடுப்பவர்கள்.

அப்புறம் வருவாருங்க ஒருத்தரு கணவர்கிற பேர்ல‌,நாம‌ ச‌மைய‌ல் க‌த்துக்கற‌துல‌ ஆர‌ம்பிச்சி.. ந‌ம்ம‌ பொண்ணுங்க‌ ச‌மைய‌ல் க‌த்துக்க‌ற‌து வ‌ரைக்கும் எல்லாத்துக்கும்
டெஸ்ட் பீஸாய் இருந்து நாம் திரும‌ண‌ம் என்ற‌ பெய‌ரில் பிரியும் த‌ந்தையாய் த‌மைய‌னாய் தோழனாய் அனைத்து அவ‌தார‌மும் எடுத்து ந‌ம்மை ம‌கிழ்விப்ப‌வ‌ர்க‌ள்.

அடுத்து ம‌க‌ன் என்னும் பொக்கிஷ‌ம்.அனைத்து ம‌க‌ன்க‌ளுக்கும் பெண்க‌ளின் அள‌வுகோல் த‌ன் தாய்..அம்மா செய்வ‌து அனைத்தும் ம‌க‌ன்க‌ளுக்கு ச‌ரியாய் தான்ப‌டும். தாயை தெய்வ‌த்துக்கு நிக‌ரான நிலையில் தான் ம‌க‌ன்க‌ள் எப்ப‌வும் வ‌ச்சிருப்பாங்க‌.

நான் எழுதி இருக்க‌ற‌து ஆண்க‌ளோட‌ விட்டுக்கொடுத்த‌ல்ல‌ ரொம்ப‌ கொஞ்ச‌ம் தான்.
ஆண்க‌ளின் குட்டி தேவ‌தையாய் உல‌கினுள் நுழையும் நாம் தெய்வ‌த்துக்கு நிக‌ரான‌ நிலைவ‌ரை உய‌ர்த்த‌ப்ப‌டுவ‌து ஆண்க‌ளால் தான்..இந்த‌ மாதிரி எல்லா நிலைக‌ளிலும் ந‌ம‌க்காக‌வே வாழும் ஆண்க‌ளுக்கு ந‌ன்றி சொல்வோம் இந்ந‌ன்னாளில்.


ஆண்களே! மகளிர்தின நன்றிகள்


(இது ஒரு மாற்றம் செய்யப்பட்ட மீள்பதிவு).

என்டர் தட்டிய வரிகள் சில‌

Friday, March 5, 2010
வீடு

இல்லாதோர்க்கு வாழ்க்கைக் கனவு
இருப்போர்க்கு வாழ்க்கைக் கடன்


க‌ல்வி

கிடைக்காதோர்க்கு அரிய‌ வ‌ர‌ம்
கிடைத்தோர் ம‌ன‌தில் அழுத்தும் பார‌ம்


உற‌வுக‌ள்

எல்லை மீறினால் அன்புத் தொல்லை
எல்லைக்குள் இருந்தால் அன்பே இல்லை


திரும‌ண‌ம்

எக்கரையில் நிற்பினும் எதிர்க்க‌ரையை
ப‌ச்சையாகத் தோன்ற‌வைக்கும் மாயாஜால‌ம்


வறுமை

அடுத்த வேளை உணவுக்கு பசியில்லாத‌தல்ல‌
அடுத்த வேளை பசிக்கு உணவில்லாதது

.

பதின்மப் பக்கங்கள்

Monday, March 1, 2010


கடந்த நாட்களின் டைரியை புரட்டிப் பார்ப்பதென்பது எப்போது கண்களில் நீர் வரவைக்கக் கூடியதாகவே இருக்கிறது.அது நெகிழ்ச்சியால் வருவதாகதோ அல்லது நாம் இழந்து மறந்திருந்தவற்றை நினைவூட்டுவதாலோ இருக்கலாம்.அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பைத் தந்த கண்ணகி அவர்களுக்கு நன்றிகள் பல.

பதின்மங்கள் மனதின் பசுமரத்தாணிகள்..
என் வாழ்வில் அவற்றின் தொடக்கப் பக்கங்கள், எதிலும் முதல் இடத்திலேயே இருக்க வேண்டும் என்ற வெறியைக் கொண்டே இருந்திருக்கின்றன. நான் பள்ளிக்குப் போகாத ஒரு நாளில் என் வகுப்பில் அறிவிக்காமல்,ஒரு கட்டுரைப் போட்டி நடந்து விட்டது என்பதை அறிந்து ஆசிரியரிடம் அடம்பிடித்து அடுத்த நாளில் அப்போட்டியில் கலந்து கொண்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் வெற்றி மீதான என் வெறியை.

அந்நாட்களில் வாழ்ந்த்து கிராமத்தில் தான் என்றாலும் என் எல்லை
எங்கள் வீட்டு காம்பவுண்ட் சுவரோடே முடிந்திருந்தது.பொங்கலுக்கு தோட்டத்துக்குப் போவதைத் தவிர அக்கிராமத்தில் என்னை அவ்வயதில் ஏதும் ஈர்க்கவில்லை. அக்காக்களுக்கும், அண்ணாக்களுக்கும் இடையிலேயே இருந்ததால்பெரிதாய் நட்புகளும் கிடைக்கவில்லை. நீட்டப்பட்ட சில நட்புக் கரங்களையும் நான் மறுதலித்த உண்மை சுடுகிறது இப்போது.


சில ஆண்டுகளில் நகர்ந்தது வாழ்க்கை குவார்ட்டர்ஸ்க்கு.அருமையான நிலாக் காலங்கள் அவை.ஒரு பகுதியில் இருக்கும் அனைத்து பிள்ளைகளும் ஒரு தாய் மக்களாய் உணர்ந்த நாட்கள்.அனைத்து அப்பாக்களும்,அம்மாக்களும் சகோதர பாசத்துடன் சுற்றி வந்த வேளைகள். என்னைப் பற்றி மட்டுமே எப்போதும் எண்ணிக் கொண்டிருந்த எனக்கு மற்றவரும் மனிதர்தான்,அவர்களுக்கும் கஷ்டங்கள் உண்டு என உணர்த்திய இடம் அது. பாலுக்கு சர்க்கரை இல்லாததுதான் வாழ்வின் மிகக் கொடுமை என நினைத்துக் கொண்டிருந்த எனக்கு, கூழே கிடைக்காதவர்களும் இவ்வுலகில் இருக்கிறார்கள் என்ற ஞானத்தை தந்த போதிமரம் அது.சிறுவர்களாலும் சாதிக்க முடியும் என உணர்த்திய நாட்கள் அவை.

ரக் ஷா எனும் எங்கள் சிறுவர் அமைப்பைத் தோற்றுவித்து அப்பகுதியில் பலப்பல செயல்களைச் செய்து கொண்டிருந்தோம். அந்நாட்களில் மார்கழி மாதக் காலைகள் அதிகாலை 3 மணிக்கே விடியும்.அங்கிருந்த ராமர் கோயில் அர்ச்சகருக்குத் தெரியும் முதல் பூஜைக்கே நாங்கள் அனைவரும் ஆஜராவோம் என்று.பிரசாதம் தயாரிப்பு முதல் அதைக் காலி செய்வது வரை அனைத்திலும் முண்ணனி நாங்கள் தான்.வீதி அடைக்கும் கோலமிடுவதும்,பொங்கல் நாட்களில் அம்மாக்களிடம் அடம் பிடித்து வீதியில் பொங்கல் வைக்க சொல்வது என ஆன்மீகத்திலும் குறை வைக்கவில்லை நாங்கள்.


தோட்டம் சூழ்ந்த வீடுகள் அவை.அனைத்து வீட்டுத் தோட்டப் பாராமரிப்பும் எங்கள் கையில் தான்.ஒவ்வொரு வாரமும் ஒரு வீட்டுத் தோட்டம் எனப் பாரமரிப்பு நடக்கும்.அந்நாட்களில் நாங்கள் பார்த்த பாம்புகள்,பல்லிகளின் எண்ணிக்கை இன்றும் எண்ணி முடியாது.எங்கள் அமைப்பின் முக்கியச் செயல்களில் இன்றும் மனதில் நிற்பது மரம் நடுதலும்,வயதான ஆதரவற்றவர்களுக்கு உதவுதலும்.சில சமயங்களில்,அப்பா அம்மாக்களின் புது உடைகளும் ஆதரவற்ற வயதானவர்களுக்குத் தாரை வார்க்கப்படும்.

அப்பகுதியில் நாங்கள் ஒவ்வொருவரும் விளையாட்டாய் நட்டுப் பெயரிட்ட‌ மரங்களை பார்க்கையில் கண்ணீரோடு நிழலாடுகிறது பள்ளியிறுதியில் நாங்கள் இழந்த நண்பன் செந்தாமரை செல்வனின் முகமும்,சில ஆண்டுகளுக்கு முன் ஒரு துரதிஷ்ட நாளில் இழந்த நண்பன் பாண்டியனின் முகமும்.

பதின்மங்களின் இறுதியில் எங்கள் நண்பர் குழாமில் ஏறத்தாழ அனைவருக்கும் மேற்கல்விக்காக வெளியூர் பயணப்பட வேண்டிய தேவையும்,சில அப்பாக்களுக்கு பணி மாறுத‌லும் வர, நனவுகளாயிருந்த எங்கள் நாட்களைக் கன‌வுகளாக்கி மனதினுள் பூட்டி கால வண்டியில் பயணத்தை தொடங்கிவிட்டோம்.

.

புதிர்கள்

Saturday, February 27, 2010
எனக்கும் யாரையாச்சும் கேள்வி கேக்கணும்ன்னு ஆசை வந்திருச்சி.உங்களையெல்லாம் விட்டா நான் வேற யாரைக் கேக்கமுடியும்? அதனால நானும் புதிர் கேள்விகள் கேட்டுட்டேன். பதில் சொல்லுங்க மக்களே

1.ஒரு நேர்முகத் தேர்வு. '''ஈஸியா 10 கேள்விகள். கஷ்டமா ஒரே ஒரு கேள்வி. எது உங்க சாய்ஸ்?' என்று அதிகாரி கேட்க, இரண்டாவது வாய்ப்பை டிக் அடித்தார் மாணவர். 'கோழியில் இருந்து முட்டைவந் ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா?' இதுதான் அவரிடம் கேட்கப்பட்ட ஒரே கஷ்டமான கேள்வி. அதற்கு மாணவர் சொன்ன பதில், 'முட்டையில் இருந்துதான் கோழிவந் தது.' உடனே அதிகாரி, 'அது எப்படிச் சொல் றீங்க? கோழி இல்லாம எப்படி முட்டை வரும்?' என்று கேட்க, அதற்கு அந்த மாணவர் பதில் சொன்னவுடன் செலக்ட் செய்யப்பட்டார். அவரது பதில் என்னவாக இருந்திருக்கக் கூடும்?

2.'நீங்கள் ஒரு காட்டில் சிங்கத்திடம் தனியாகச் சிக்கிக்கொண்டீர்கள். கையில் எந்த ஆயுதமும் இல்லை. எப்படித் தப்புவீர்கள்?'. இதற்கு அவர் முதலில் 'அங்கு இருக்கும் மரத்தில் ஏறித் தப்புவேன்' என்றார். 'அங்கு மரமே கிடையாது. என்ன செய்வீர்கள்?' என்றார்கள். 'ஆற்றில் குதித்து நீந்தித் தப்புவேன்.' 'ஆறும் கிடையாது. அப்புறம்?', 'மலைக் குன்றில் ஏறிவிடுவேன்.' 'மலைக் குன்றும் கிடையாது' என்றதும் பதில் சொல்ல வேண்டியவர் சிரித்தார்... 'நான் வெற்றி பெற்றுவிட்டேன்' என்றபடி. எப்படி?

3.அது ஒரு பிரமாண்ட பாலம். ஆனால், 25 ஆயிரம் கிலோவுக்கு மேல் ஒரு கிராம்கூட அதிகப் பாரத்தைத் தாங்காது. மிகச் சரியாக 25 ஆயிரம் கிலோ எடையுள்ள ஒரு சரக்கு லாரி வேகமாக பாலத்தின் மையப்பகுதியில் போய்க்கொண்டு இருக்கும்போது ஒரு சிறிய பறவை பறந்துவந்து லாரியில் அமர்கிறது. பறவையின் எடை 25 கிராம். ஆனால், பாலம் உடையவில்லை. எப்படி?

4.ஒரு கூடையில் ஆறு ஆப்பிள்கள். ஆறு பேருக்கு ஆளுக்கு ஒன்று எனச் சமமாகப் பிரித்துக் கொடுத்தாயிற்று. ஆனாலும், கூடையில் ஒரு ஆப்பிள் இருக்கிறது. எப்படி?

5.அது ஒரு ராயல் கேஸினோ கிளப். உள்ளே கோடிகளில்தான் சூதாட்டம் நடக்கும். அதன் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாஸ்வேர்டு உண்டு. அதைச் சொன்னால்தான், உள்ளேயே விடுவார்கள். அதற்குள் போக ஆசைப்படுகிறார் ஹீரோ. ஆனால், அவரிடம் பாஸ்வேர்டு இல்லை. கேஸினோவின் வாசலில் ஒளிந்திருந்து கவனிக்கிறார். அப்போது ஒரு நபர் வருகிறார். அவரிடம் வாட்ச்மேன், '12' என்கிறார். உடனே வந்தவர், '6' என்று திரும்பச் சொல்ல, உள்ளே போக அவருக்கு அனுமதி கிடைக்கிறது. அதேபோல அடுத்து வந்தவரிடம் வாட்ச்மேன், '6' என்றதும், வந்தவர் '3' என்கிறார். அவரும் உள்ளே போய்விடுகிறார். இதை ஒளிந்திருந்து கவனித்த ஹீரோ, 'இவ்ளோதானா மேட்டர்?' என்று ஸ்டைலாக வாட்ச்மேன் முன்னால் போய் நிற்கிறார். அவர், '20' என்கிறார். நம்ம ஹீரோ, '10' என்கிறார் பெருமையாக. ஹீரோவுக்குத் தர்ம அடி விழுகிறது. ஏன், என்ன தப்பு?

.

கவித்துளிகள் சில‌

Sunday, February 21, 2010
ம‌வுன‌ம்


உனை ம‌றுக்க‌ நினைக்கும் நேர‌ங்க‌ளில்
என‌தான‌ கூரிய‌ ஆயுத‌ம்

உன் ப‌திலுக்கான‌ காத்திருப்பில்
என்னைக் குத்திக் கிழிக்கும் பேராயுத‌ம்


வெயில்



சூரியனின் சுட்டெரிப்பாய் கனன்று

உனை முதலாய்ச் சந்தித்த காலம் என குளிர்ந்து

உன் பிரிவைக் காட்டும் வெம்மையாய் நிலைத்தது


காதல்


எவனோ ஒருவன் எனத் தொடங்கி

என்னவனாயிருக்கலாமே நீ என மாறி

உனக்கானவளாய் நான் நிலைப்பது

.

அண்ணா:‍)

Monday, February 15, 2010


காலை நேர அவசரத்தில்
நாம் சண்டை போட்டதில்லை

கூட்டுக் களவாணித் தனங்களில்
மாட்டிக் கொண்டதில்லை

அப்பா பெண்ணாகவும்,அம்மா பையனாகவும்
போட்டி போட்டதில்லை

ஆனாலும் நீ என் அண்ணனானது எக்கணத்தில்?




பால்யங்களில் எனக்காகப் பாலைப்
பகிர்ந்தளித்த அண்ணாய் நீயில்லை

பள்ளி நாட்களில் விரல் பிடித்து கூட்டிப் போன
வழிகாட்டியாய் நீயில்லை

பதின்மங்களில் பசங்களின் விரட்டலுக்குப்
பாதுகாவலனாய் நீயில்லை

வாழ்வின் ஏதோ ஒரு சிறு நாளில்,
திடீர் நட்பாய் நுழைந்தவன் நீ

ஆணிவேரான‌ அண்ணணாய்ப்
பரிணமித்திருக்கிறாய். இது

போன ஜென்ம பந்தமா,
இல்லை பூர்வ ஜென்மப் பாசமா?

.

ஓடுங்க எல்லாரும்...பிளாஸ்டிக் வருது

Saturday, February 13, 2010
இன்றைய உலகம் கணினிச் சாதனங்களால் நிறைந்து நம் எழுத்துத் தேவைகளைப் பண்மடங்காகக் குறைத்திருக்கிறது எனினும் எழுத்தின் தேவைகளை முழுவதுமாக மறைத்துவிடவில்லை.எழுது பொருட்களில் பலப் பல புதிய தயாரிப்புகள் வந்துவிட்டன. சில வருடங்களுக்கு முன் வரை இங்க் நிரப்பி எழுதும் பேனாக்களே பெரும்பாலும் பயன்படுத்த‌ப்பட்டன.ஒவ்வொரு இங்க் பேனாவும்,குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்காவது பயன்படுத்தப்பட்டது.பள்ளி நாட்களின் இங்க் பேனாக்கள் பெரிய செண்டிமெண்ட் விஷயமாகவும் இருந்தன.இந்தப் பேனா ராசியானது என்னும் எண்ணமோ அல்லது சற்று அதிகமாக இருந்த அதன் விலையோ பேனாவை பத்திரமாக வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை நம்மிடையே விதைத்திருந்தன.இப்போது காலப் போக்கில் காணாமல் போகக் கூடிய பொருட்களில் இங்க் பேனாக்களும் சேர்ந்துவிட்டன‌.

இப்போது 2ரூபாய்க்கும்,3 ரூபாய்க்கும் கூட பால்பாயிண்ட் பேனாக்கள் இதற்கான ஒரு காரணமாகி விட்டது.சிறு பிள்ளைகளும் பால்பாயிண்ட் பேனாக்கள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.இது பேனாக்களின் மீதான ஒரு அக்கறையின்மையை நம்மிடையே விதைத்திருக்கிறது.

அதிகம் எழுதும் கல்வித் துறையிலிருப்போர், சில நேரங்களில் ஓரிரு நாட்களிலேயே ஒரு பால்பாயிண்ட் பேனாவை உபயோகப்படுத்தி தீர்த்துவிடுகிறோம்.அந்தப் பேனா தீர்ந்தபின், அதைத் தூக்கிப்போட்டு விட்டு புதியதொரு பால்பாயிண்ட் பேனாவைத் தேடுகிறோம்.

எந்த வகைப் பேனாவும் பிளாஸ்டிக் பொருட்களாலேயே தயாரிக்கப் படுகின்றது. நாம் பயன்படுத்தித் தூக்கி எறியும் பேனாக்களும் பிளாஸ்டிக் கழிவுகள்தானே.

பென்சில்களிலும் மைக்ரோடிப் பென்சில்கள் என்பவை பிளாஸ்டிக்கினாலான மேல்புறத்தையே கொண்டிருக்கின்றன.அவற்றின் அழகான மேல்புற டிசைன்கள், நம்மை சாதாரணப் பென்சில்களின் பக்கம் போகவே விடுவதில்லை.அதைப் பற்றி என்றேனும் யோசிக்கிறோமா?


லட்சக்கணக்கானோர் உள்ளடங்கிய கல்வித்துறையில் பயன்படுத்தி கழிக்கப்படும் இந்தப் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு மலைக்கும் அளவிளேயே இருக்கிறது.

அதனால் பிளாஸ்டிக் உபயோகத்தைக் குறைக்க,இங்க் பேனாக்களைப் பயன்படுத்துவோம்.ஜெல் மற்றும் பால்பாயிண்ட் பேனாக்களைப் பயன்படுத்தினாலும், அதன் ரீபில்களை மட்டும் மாற்றி மீண்டும் பயன்படுத்த முயல்வோம்.

பிளாஸ்டிக் உபயோகத்தைக் குறைப்போம்.சுற்றுப்புறத்தைக் காப்போம்.

.

புள்ளக் குட்டிகளைப் படிக்க வைங்கப்பா

Sunday, January 17, 2010
கல்வி என்பது என்றும் குறையாத வளம்.உலகில் பல பகுதிகளிலும் உள்ள கல்வி,வேலை வாய்ப்புகள் பற்றிய விவரங்களை கீழுள்ள வலைப்பதிவில் பெறலாம்.


ஏணிப்படிகள்

உங்களுக்கான சந்தேகங்களும் தீர்க்கப்படும்.
பயன்படுத்திக் கொள்ளுங்க மக்களே..மற்றவர்களுக்கும் தெரிவியுங்கள்.யாருக்காவது உபயோகப்படலாம்.

.

கணினியில் பொங்கல் கிடைக்குமா?

Friday, January 15, 2010
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

மகிழ்ச்சி பொங்கி நிறையும் நாட்களாய் இருந்தன அன்றையப் பொங்கல் பண்டிகைகள். தாத்தா, மாமா, சித்தப்பா என அனைத்து சொந்தங்களும் முழு நேர விவசாயிகளாய் இருந்தக் காலம் அது. படிப்பு மட்டுமே வாழ்க்கை என நினைத்து, ஹிஸ்டரியையும், ஜியாக்ரபியையும் படிக்கும் விருப்பத்தில் சொந்த மண்ணின் வரலாறையும், புவி அமைப்பையும் அறியாமல் விட்ட பள்ளி நாட்கள்.

பொங்கலுக்கெல்லாம் ஊருக்கு போக வேண்டாம் என அடம் பிடித்த அந்தக் காலத்தில் அறிந்திருக்கவில்லை, விரைவில் இவையெல்லாம் வெறும் நினைவுகளாகப் போகப் போகின்றன என்று. எப்படி வேண்டி வருந்தினாலும் இவை விரும்பி வராது என்று. அன்று சிறிதும் விருப்பமில்லாமல் ஊருக்குப் போன‌ சில‌ பொங்க‌ல் தின‌ங்க‌ளும் பொற்கால‌ங்க‌ளாய் ம‌ன‌தில் மிளிர்கின்ற‌ன‌ .

ஆனால், இன்று? அத்தகையதொரு கிராமப் பொங்கலுக்கு மனம் ஏங்கினாலும் நிதர்சனமோ வேறாய் இருக்கிறதே. இன்றைய கிராமப் பொங்கலில் , அந்நாளைய நகரப் பொங்கலிலும் நளினம் குன்றித்தான் போனது. கிராமத்து வீடுகளும் தொலைக்காட்சிப் பெட்டிகளாலும், செல்போன்களாலும் சூழப்பட்டு விட்டன. எங்கள் சிறுவயதுப் பொங்கலில் இருந்த உற்சாகமோ, உவகையோ இன்றைய குழந்தைகளிடம் இல்லாமல் போனதே.

பொங்கலோ பொங்கல் எனத் தாம்பளத்தில் குச்சி வைத்துத் தட்டுகையில், யார் வீட்டு ஒலி அதிகம் கேட்டது எனப் பெரிய போட்டியே நடக்கும். இன்று என் அண்ணன் மகள் கேட்கிறாள். “அத்தை! எதுக்கு இப்பிடி இன்டீசண்டா தேவை இல்லாம சப்தம் போடறாங்க”. தோட்டத்திலிருந்து வீட்டுக்குப் போகும் வரை எங்கள் கையிலிருக்கும் பொங்கல் சோற்றுக்காய்த் துரத்தி வரும் காகங்களும் எங்கோ மறைந்தன. அவைகளுக்கும் பப்ஸும், பர்கரும் விருப்ப உணவாகிவிட்டதா?

கணினி விளையாட்டுகளும், தொலைக்காட்சி நிகழ்வும் ஈர்க்குமளவுக்கு பாரம்பரியப் பண்டிகைகள் ஈர்ப்பைக் கொடுக்கவில்லையே இன்றைய மழலைத் தலைமுறையிடம். அவசரத்தில் அடுத்த கட்டத்துக்கு நொண்டி நொண்டி நகரும் நாம்தான் சரியாக அவர்களுக்கு கற்றுக் கொடுக்காமல் விட்டு விட்டோம் என்பதை மறுக்க முடியுமா? மாட்டுப் பொங்க‌லில் இளம் க‌ன்றுக் குட்டிக‌ளோடு நாங்கள் நடத்தும் ஜ‌ல்லிக்க‌ட்டுக்காய் ஏங்கிய நானும், என் அண்ணனும், ஆட்டுக்குட்டி அருகில் வ‌ந்தாலே, "ஐயே.ட‌ர்ட்டி"என‌ என‌ வில‌கி ஓடும் எங்க‌ள் வீட்டு ம‌ழலையைக் க‌ண்டு வாய‌டைத்துப் போய்த்தான் இருக்கிறோம்.

எங்களுக்காவது, விவசாய பாரம்பரியத்தை நினைத்துப் பார்க்க பனிப்புகை படர்ந்து சில பொங்கல் தினங்கள் நினைவிடுக்கில் தேங்கியிருக்கிறது. அடுத்த தலைமுறைக்கு விவ‌சாய‌மும், விவசாயம் சார்ந்த பண்டிகைகளும் என்றாலே பேஸ்புக் ஃபார்ம்வில்லே தான் நினைவுக்கு வ‌ருமோ?. கூடவே பொங்கல் சோறும் கணினியிலோ கிடைக்க விஞ்ஞானம் ஏதாவது செய்யுமா?

.

க(வன)ரணம் தப்பினால்...

Monday, January 4, 2010
ந‌க‌ரின் பிசியான‌ சாலை.காலை அலுவ‌ல‌க‌ம் செல்லும் அவ‌ச‌ர‌த்தில் அனைவ‌ரும் ப‌ற‌ந்து கொண்டிருக்கும் நேர‌ம்.கேச‌வ், ஏற்க‌னவே ஆபீஸ்க்கு டைம் ஆச்சே,மீட்டிங் வேற‌ இருக்கே,லேட்டாப் போனா மேனேஜ‌ரை எப்ப‌டி ச‌மாளிக்க‌றது என்ற‌ க‌வ‌லையுட‌னே தன் வாக‌ன‌த்தை விர‌ட்டிக் கொண்டிருந்தான்.மாலை சீக்கிரம் கிளம்பி த‌ன் 4 வயது ம‌க‌ளை ஹாஸ்பிட‌லுக்கு கூட்டிட்டு போக மேனேஜர் பர்மிஷன் தர‌ணுமே என்ற எண்ண‌ம் வேறு ப‌ய‌த்தைக் கூட்டியது.

எல்லாம் காலை நேர‌ சோம்ப‌லால் வ‌ரும் வினை.ஒரு 10 நிமிட‌ம் சீக்கிர‌ம் எழுந்தால் டென்ஷ‌ன் இல்லாம‌ ஆபீஸ் கிள‌ம்ப‌லாம் என‌ மூளைக்குத் தெரிந்தாலும்,ம‌ன‌ம் அத‌ற்கு ஒத்துழைப்ப‌தில்லையே..என ம‌ன‌திற்குள் பொருமிக் கொண்டிருந்தான்.

ரோட்டில் சிக்னல் வேறு சிவப்பு விழுந்துவிட்டால் அதில் சில நிமிடங்கள் வீணாகுமே பச்சையில் இருக்கும் போதே கடந்து விடவேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கும்
போதே தொலைவில் சிக்னல் தெரிந்தது. ஆஹா பச்சையில் தான் ஒளிர்கிறது.ஆனால் டைமர் 2 செகண்டு காட்டுதே..என வண்டியை முறுக்கினான்.சிக்னலை நெருங்கவும் மஞ்சள் விழவும் சரியாக இருந்தது.மஞ்சள் தானே,சிகப்பு விழும்முன் சீக்கிரம் போயிடலாம் என வேகத்தைக் கூட்டினான்...

தேர்வுக்கு லேட் ஆச்சே என்றக் கவலையோடு,அவ்வூரின் பெரும் பணக்காரரின் மகன் கிஷோர் உச்ச வேகத்தில் வந்து கொண்டிருந்தான் தனது புத்தம் புதிய காரில் எதிர்த் திசையில்.அவன் வரும் திசையிலும் ஒளிர்ந்தது மஞ்சள்.அடுத்து பச்சை தானே வரப்போகிறது நாம் சிக்னலை அடைவதற்குள் பச்சை விழுந்து விடும் என்ற நம்பிக்கையில் வேகத்தைக் குறைக்காமலே வண்டியைச் செலுத்தினான்.

கிஷோரின் காரும்,கேசவ்வின் வண்டியும் சந்தித்தது சிக்னல் அருகே எதிரெதிரே உச்ச வேகத்தில்.இரு வண்டிகளும் தூக்கியெறியப்பட்டன.அங்கிருந்த மக்கள் சந்தித்தது ஒரு கோர விபத்தை..இரு இளைஞர்களின் வாழ்வு சிதைந்தது.இரு குடும்பங்களின் எதிர்காலமும் கேள்விக்குறியானது.

இது அவர்களின் விதியெனச் சிலர் நினைத்தாலும், அதைத் தவிர்த்திருக்க வழியே இல்லையா..

இருவரும் செய்த சில சிறு சிறு தவறுகளால்தான் இவ்விபத்து.அதில் பல தவறுகள் நாமும் செய்வதுதான்..
கரணம் தப்பினால் மரணம் என்னும் நிலைதான் பயணத்திலும் என்ற பெரும் உண்மையை நாமெல்லாம் சாவகாசமாய்ப் புறக்கணித்து விடுகிறோம்

சிக்னலை அலட்சியம் செய்ததும்,மிக அதிக வேகமுமே இருவரின் வாழ்க்கையை அழித்தது.அதிக வேகத்துக்குக் காரணம் அவர்கள் பயண நேரத்துக்கு சரியாக கிளம்பாமல் விட்டதுதான்.பயணத்தில் செய்யும் சிறு தவறும் பெரிய பெரிய மோசமான விளைவுகளை இது போல ஏற்படுத்தலாம்.

சாலைப் பாதுகாப்பு வாரத்தை(ஜனவரி 1-7) டிரைவிங்கில் நீங்கள் செய்யும் தவறுகளை மீள்பார்வை செய்யும் வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்‌.
சாலைப் பாதுகாப்புத் தெடர்பான இடுகைகளை எழுத கீழ்வரும் நண்பர்களை அழைக்கிறேன்


நான் ஆதவன்
கார்த்திகைப் பாண்டியன்
சஞ்சய் காந்தி
சுபா
சிவனேஸ்வரி


எழுதிட்டு, நீங்களும் குறைந்தபட்சம் 5 பேரை அழையுங்க மக்களே

ப‌ய‌ண‌த்தில் க‌வ‌ன‌மாயிருங்க‌ள்.விதிக‌ளை ம‌தியுங்க‌ள்.ம‌கிழ்வாய் வாழுங்க‌ள்.

பொஸசிவ் பெற்றோரா நீங்கள்?

Friday, January 1, 2010
நம் உறவுகளும்,நட்புகளும் நம் மீதும் அன்பைப் பொழிவதென்பவது மிக அருமையான ஒரு விஷயம்.அத்தகைய ஒரு விஷயமும் சில நேரங்களில் சிலரது வாழ்வைப் பந்தாடிவிடுகிறது. அந்த பாசத்தினால் சூழ்நிலைக் கைதிகளாகி அச்சிறையிலிருந்து மீள முடியாமல் பாதாளத்திற்கே போகும் நிலையை ஏற்படுத்தி விடுகிறது.
அப்படியான ஒரு சூழ்நிலைக் கைதியின் கதை இது.

என் தோழி ஒருத்தி.. தமிழகத்தின் ஒரு சிறு நகரில் பிறந்து,வாழும் ஒரு சராசரிப் பெண். பெற்றோருக்கு ஒரே பெண். அதனால் வீட்டில் கிடைக்கும் அன்பும் கவனிப்பும் மிக மிக அதிகம். மகளின் அனைத்து நடவடிக்கைகளிலும் பெற்றோரின் தலையீடு இருக்கும். அவள் பிரஷ் செய்யும் பேஸ்ட் தொடங்கி,தூங்கும் பெட் வரை பெற்றோரின் தேர்வாகவே இருக்கும். இவளது விருப்பங்களை வெளிப்படுத்தினாலும் அவை "உனக்கு அது நல்லதல்ல.நாங்க உன் மேல உயிரையே வச்சிருக்கோம்..உனக்குத் தீங்கு செய்வோமா? சொல்வதை கேள்" என அடக்கப்படுவாள். அவர்கள் அவளுக்கு தேர்ந்தெடுப்பவை பெஸ்ட் ஆகவே இருக்கும் என்பதும் உண்மை.
அவளுக்குள்ளே ஆயிரம் திறமைகள் ஒளிந்திருந்தன. படிப்பா,விளையாட்டா,ஓவியமா,கோலமா அனைத்திலும் முன் நிற்பாள்.ஆனால் படிப்பைத்தவிர வேறு எதிலும் அவள் பெற்றோர் அவளை ஊக்குவிக்கவில்லை. விளையாட்டில் கலந்துகொண்டால் ஏதாவது அடிபட்டு விடும். பனியில கோலம் போட்டால் ஜலதோஷம் பிடிக்கும் என்பது போன்ற பலப்பல காரணங்கள் அவள் பெற்றோரிடம் இருந்தது.

அவளின் சின்ன சின்ன ஆசைகளை(அந்த வயதில் அதெல்லாம் மிகப்பெரிய ஆசைகளாய்த் தோன்றும்) யும் நாங்கள் எங்களால் முடிந்தவரை அவள் பெற்றோருக்குத் தெரியாமல் நிறைவேற்றுவோம்.
பள்ளிப்பருவம் முடிந்து கல்லூரிக் காலம் வந்ததும் நாங்கள் எல்லோரும் தகுதிக்கேற்றக் கல்லூரியைத் தேடி கிளம்பிவிட்டோம்.ஆனால் அவள் வசித்த ஊரில் கல்லூரி இல்லை என்பதால், தன் மகளை வெளியூருக்கு படிக்க அனுப்ப பயந்த பெற்றோர் அவளைக் கல்லூரியில் சேர்க்கவேயில்லை. அங்கேயே இருந்த ஒரு கணினி கல்விக்கூடத்தில் சேர்ந்தாள்.இத்தனைக்கும் பள்ளியில் அவள் பெற்ற மதிப்பெண் 90%.பெற்றோர் அங்கும் அவளைக் குழந்தை போலவே நடத்தியிருக்கிறார்கள்.அவளை அழைத்துச் சென்று கல்விக்கூடத்தில் விட்டு,வகுப்பு முடியும்வரை காத்திருந்து பின் வீட்டுக்கு அழைத்துப் போவது எனத் தொடர்ந்திருக்கிறது.அந்நிறுவனத்தில் இருப்பவர்களுக்கு இவர்களைப் பற்றித் தெரியததால், அப்பெண்ணின் ஒழுக்கத்தைப் பழித்தும், அவள் பெற்றோர் அப்படி இருப்பது இவளின் ஒழுக்கத்தின் மீதான நம்பிக்கையின்மையால்தான் எனக் கதை உலவத் தொடங்கியிருக்கிறது.

அதைப் பற்றி கவலையுறாமல் படிப்பை நல்ல படியாகவே முடித்தாள்.வழக்கம் போல வேலைக்குப் போவதும் எதிர்க்கப் பட்டது.அதனால் வீட்டிலேயே முடங்கினாள்.

திருமணத்திற்கு வரன் பார்த்தார்கள்.அவர்கள் ஊரிலேயே வரன் வேண்டும் எனத்தேடினார்கள். அது சிறிய ஊர்.அங்கிருந்த படித்தவர் எல்லாம் வெளியூரிலேயே இருந்தனர்.அதனால் அந்த ஊரிலேயே இருந்த‌, எந்த வேலையிலும் இல்லாத‌ ஒருவருக்கு மணம் செய்வித்தனர்.
திருமணம் முடிந்து சில காலத்தில், அவளது கணவருக்குத் தானும் சம்பாதிக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றி வேலை தேடத் தொடங்கினார்.100km தொலைவிலுள்ள ஒரு ஊரில் நல்ல வேலை கிடைத்திருக்கிறது. ஆனால் அவளது பெற்றோருக்கு மகளை அவருடன் அனுப்ப மனமில்லை.தனியே வெளியூரில் தங்கி வேலைப் பார்த்த அவருக்குத் தன் மனைவியைத் தன்னுடன் வைத்துக்கொள்ளும் ஆசையால் இவளை வற்புறுத்தி அழைத்திருக்கிறார்.இவள் மனதில் ஆசை இருப்பினும் பெற்றோரை மீற முடியாமல் மறுத்து விட்டாள்.தனிமரமாகவே நிற்கிறாள்.அவள் கணவர் மனைவியைப் பிரிந்து,இத்தனைப் பிரச்சினைகளால் பலத் தீய பழக்கங்களுக்கு அடிமையாகி விட்டாராம்.இது பெற்றோருக்குத் தெரிந்தால் விவாகரத்து வரை போய்விடுமோ எனப் பயத்தில் இருக்கிறாள் தோழி.

இப்போது யாருக்கும் நிம்மதி இல்லை.ஆனால் அவர்கள் எல்லோரும் நினைப்பது " நான் செய்வதே சரி.என் பக்கமே நியாயம்
"
இத்தனைப் பேரின் நிம்மதி தொலைந்தது, மனிதர்கள் குற்றமா? அல்லது மனிதர்கள் ஒருவர்மேல் ஒருவர் வைத்த அன்பின் குற்றமா?